|
NAGARAJI | இந்த நவீன உலகில் வாழும் மானிடர்களுக்கு எத்தனை எத்தனை பிரச்சனைகள்? நகரங்களில் வாழும் மனிதர்கள் மட்டும் இன்றி... மாறாக கிராமங்களில் வாழும் மக்களும் இன்று தூசு நிறைந்த, மாசு படிந்த காற்று, அசுத்தமான தண்ணீர், இரசாயனத்தில் முக்கிக் குளித்த காய்கறிகள் மற்றும் கீரைகள் மற்றும் பழங்கள்....
அப்பப்பா... இன்று வாழும் மனிதன் இத்தனைக்கும் ஈடு கொடுத்து இன்னும் உயிர் வாழ்வதே பெரிய விஷயம்....
மனித உடம்பில் பார்ட் பார்ட்டாக அவ்வப்போது அடி வாங்குவது... அந்தந்த பார்ட்டுக்கு வரும் வியாதியைத்தான் சொல்கிறேன்... முதன்மையான இடம் பெறுவது சிறுநீரக தடம்தான்... அதுவும் சிறுநீர்த் தொற்று என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை தாக்கு தாக்கு என்று தாக்கி பாடாய்ப் படுத்தும். அதுவும் `வந்தேன்... போனேன்....' என்ற ரகம் வேறு கிடையாது இந்த வியாதிக்கு.... அவ்வப்போது `நானும் இருக்கிறேன்'.... என்று ஆகாத்தியம் செய்யும் தொற்று இந்த நோய்.
இதற்காக சாப்பிடும் மருந்துகள் இருக்கிறதே... அது `சைட் எஃபக்ட்'டை இலவசமாக வாரி வழங்கி விட்டுப் போகும்... அப்புறம் அதற்காக ஒரு ட்ரீட்மெண்ட்....
இது ஒரு தொடர் கதைதான்....
இதோ, ஒரு எளிய கை வைத்தியம்.... தேவை : துளிரான மூங்கில் இலை... 10 கிராம் தேநீர்த் தூள்... 5 கிராம், பனங்கற்கண்டு தூள்....2 தேக்கரண்டி
செய்முறை : கொதிக்கும் நீரில் மூங்கில் இலை மற்றும் தேநீர் தூள் ஆகியவற்றைப் போட்டு டிக்காஷன் இறங்கிய பிறகு வடிகட்டி, கற்கண்டு தூள் சேர்த்து குடிக்கவும்.
வேண்டாம் என்று தூக்கிப் போடும் வேர்க்கடலை தோலிக்கு (உள்தோல்) எத்தனை மகிமை உண்டு! ஆச்சரியமாக இருக்கிறதா? எதிர்ப்பு சக்தி மிக்க இந்த தோல் சிறுநீரகத் தொற்றுக்கு நல்ல பலன் தர வல்லது என்ற நம்பிக்கை காலாகாலமாக இருக்கிறது. இதை பயன்படுத்தி ஒரு டீ! தேவை: வேர்க்கடலை பருப்பின் மேல் உள்ள தோல்... 1 தேக்கரண்டி, பனங்கற்கண்டு .... 1 தேக்கரண்டி
செய்முறை: வேர்க்கடலை பருப்பை சிவக்க வறுக்கவும். பிறகு அதன் மேல் தோலை எடுக்கவும். கரகரப்பாக டீ தூள் போல பொடிக்கவும். ஒரு கப் நீரை கொதிக்க விட்டு அதில் பொடித்த தோலை போட்டு ஒரு கொதி வர விடவும். வடி கட்டி அத்துடன் பனங்கற்கண்டை சேர்த்து பருகவும்.
குழந்தைகள், குறிப்பாக அத்தனை சுகாதாரம் திருப்தி இல்லாத பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், கழிப்பறையை பயன்படுத்துவதை தவிர்க்க இயலுவதில்லை. தொற்றும் அவஸ்தையை சகித்துக் கொள்ளும் குழந்தைகளுக்கு சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ள அத்தனை தயங்குவார்கள். தேவை
வால்நட் பருப்பு...1 கப் புழுங்கல் அரிசி குறுணை...1 கப் நாட்டுச் சர்க்கரை .... அரை கப்
செய்முறை: 4 கப் நீரை கொதிக்கவிடவும். அரிசி குறுணையை சேர்த்து வேக வைக்கவும். பாதி வேகும் போது ஒன்றிரண்டாக பொடித்த வால்நட் பருப்பை சேர்க்கவும். வெந்தவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து கலக்கி இறக்கி இரவு உணவுடன் பருகவும்.
குழந்தைகளுக்கு மட்டும் இல்லை... பெரியவர்களுக்கும் இன்றைய ஹோட்டல் பண்டங்களை சாப்பிட்டால் வீட்டுக்கு வந்ததும் எதிர்கொள்ளும் பிரச்சனை வயிறு உப்புசம்... வயிற்றில் ஏதோ இனம் புரியாத ஒரு வேதனை... ஜீரணம் ஆகாமல் வயிற்றைப் புரட்டும் உணர்வு...
இதோ ஒரு எளிய கஞ்சி தேவை
முள்ளங்கி விதை.... 2 தேக்கரண்டி
பச்சரிசி நொய்.... 1 கப்
உப்பு .... ருசிக்கேற்ப
செய்முறை: வெறும் வாணலியைச் சூடாக்கி முள்ளங்கி விதைகளை லேசாக வறுக்கவும். மூன்று கப் நீரை கொதிக்க விட்டு அதில் களைந்து சுத்தப்படுத்திய நொய்யையும் முள்ளங்கி விதையையும் போட்டு நன்கு குழைய வேக விடவும்.
ஆறிய பிறகு உப்பு கூட்டி சுவைக்கவும்.
வயிற்று ரணத்தால் ஏற்பட்ட வயிறு உப்புசம் மற்றும் செரியாமைக்கு நல்ல கஞ்சி. |
|