Wednesday, October 14, 2009

 

துவரம் பருப்பில்லாத ரெசிபிகள் 2

மசால் குழம்பு

தேவையான பொருட்கள்: புளி - 25 கிராம், கேரட் ஒன்று, பீன்ஸ் - 10 (எண்ணிக்கையில்), குட மிளகாய்-ஒன்று, சின்னவெங்காயம்-10, முள்ளங்கி-ஒன்று, அவரைக்காய்-நான்கு, கரம் மசாலாத்தூள்-ஒரு டீஸ்பூன், கடலைப் பருப்பு, தனியா, மிளகாய் வற்றல்-தலா ஒரு டீஸ்பூன் வறுத்து பொடித்துக் கொள்ளவும், கொப்பரைத் தேங்காய் 4 சிறிய துண்டுகளை பொடித்துக் கொள்ளவும், உப்பு-தேவையான அளவு, சாம்பார் பொடி -2 டீஸ்பூன், சிவக்க வறுத்த வேகவைத்த பாசிப்பருப்பு-ஒரு சிறிய கிண்ணம், எண்ணெய்-4 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அவரை, கேரட், பீன்ஸ், குடமிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கவும். முள்ளங்கியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய காய்களைப் போட்டு வதக்கி கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கி புளியைக் கரைத்து ஊற்றி, சாம்பார் பொடி போட்டு நன்கு கொதிக்கவிடவும். காய்கறிகள் வெந்ததும் தனியா கடலைப்பருப்பு மிளகாய்வற்றல் வறுத்துப் பொடித்து, வைத்துள்ளதைப் போட்டு கொப்பரைத் துருவலும் போட்டு கொதிக்க விடவும். கடைசியில் வேகவைத்த பருப்பு சேர்த்து கலந்து இறக்கவும்.

கத்திரிக்காய் முருங்கைக்காய் பொரியல்

தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம் - இரண்டு, பிஞ்சுக் கத்தரிக்காய் - 1/4 கிலோ, முருங்கைக்காய் - இரண்டு, தக்காளிப்பழம் - இரண்டு, உப்பு - தேவையான அளவு, தனியா, மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு - தலா ஒரு டீ ஸ்பூன் (வறுத்து பொடித்து) மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் - சிறிதளவு, தேங்காய்ப்பால் - ஒரு கப்.

செய்முறை: முருங்கைக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கவும். கத்தரிக்காயை நீளவாக்கில் நறுக்கவும். வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தாளித்து நறுக்கிய காய்கறிகளைப் போட்டு வதக்கவும். தேவையான உப்பு, வறுத்துப் பொடித்த பொடி, சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும். கிரேவி கெட்டியானதும் தேங்காய்ப்பால் ஊற்றி கீழே இறக்கவும்.

சூடான சாதத்தில் இந்தப் பொரியல் போட்டு பிசைந்து சாப்பிடலாம்.

தொட்டுக் கொள்ள ஏதும் தேவை இல்லை.

வாழைத்தண்டு மோர்கூட்டு

தேவையான பொருட்கள்:- வாழைத்தண்டு - ஒரு சிறிய துண்டு, தயிர் - 100 மில்லி, பச்சைமிளகாய் - இரண்டு, தேங்காய்த்துருவல் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு,

தாளிக்க: பெருங்காயத்தூள் - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - 2ஸ்பூன், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு- தலா 1/4 ஸ்பூன்.

செய்முறை:- வாழைத்தண்டை சிறுவில்லைகளாக நறுக்கி நார் எடுத்து உப்பு சேர்த்து வேகவிடவும். தேங்காய்த் துருவல், பச்சைமிளகாய் இரண்டையும் மிக்ஸியில் அரைத்து தயிருடன் சேர்க்கவும். இதை வேகவைத்த வாழைத்தண்டுடன் சேர்த்துக் கலந்து கொள்ளவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு சீரகம், பெருங்காயத்தூள் போட்டு தாளித்து இதை ரெடியாக உள்ள கலவையில் நன்கு கலந்து இறக்கவும்.

சூடான சாதத்தில் நெய்விட்டு இந்த மோர்க்கூட்டை போட்டுப் பிசைந்து பப்படம் பொரித்து சாப்பிட சிறந்த காம்பினேஷன்.


மாம்பழ மோர்க்குழம்பு

தேவையான பொருட்கள்: - நன்கு பழுத்த மாம்பழம் - ஒன்று, தயிர் - 500 மில்லி (சிறிது புளிப்பாக), உளுத்தம்பருப்பு - ஒரு டீ ஸ்பூன், மிளகாய்வற்றல் - இரண்டு, மிளகு - 6, சீரகம் - 1/4 ஸ்பூன், தனியா - 1/4 ஸ்பூன், தேங்காய்த்துருவல் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: - கடுகு ஒரு ஸ்பூன், வெந்தயம் - 1/4 ஸ்பூன், எண்ணெய் - ஒரு டீ ஸ்பூன், பெருங்காயத்தூள்.

செய்முறை:- மாம்பழத்தை தோல் சீவி நன்கு வேகவைத்து மசித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தனியா, மிளகு, சீரகம், தேங்காய்த்துருவல் மிளகாய்வற்றல், உளுத்தம்பருப்பு எல்லாவற்றையும் வறுத்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். இதைத் தயிருடன் தேவையான உப்பு சேர்த்துக் கலந்து அதில் மசித்த மாம்பழத்தையும் சேர்த்து நன்கு கலந்து லேசாக சூடுபடுத்தவும். இதில் கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் தாளித்து இறக்கவும். மாம்பழ இனிப்பும் தயிரின் புளிப்பும் சேர்த்து வித்தியாசமான சுவையுடன் நன்றாக இருக்கும்.

வெரைட்டி உசிலி

தேவையான பொருட்கள்: மிளகாய் வற்றல்- இரண்டு, மிளகு - ஒரு டீ ஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு சிறிய கிண்ணம், முளைகட்டிய கொள்ளு - ஒரு சிறிய கிண்ணம், முளைகட்டிய சோளம் - ஒரு சிறிய கிண்ணம், முளைகட்டிய கொண்டைக்கடலை - ஒரு சிறிய கிண்ணம், இஞ்சி - ஒரு துண்டு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 100 மில்லி.

தாளிக்க: பெருங்காயத்தூள், கடுகு - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை:- துவரம் பருப்பை ஒரு மணிநேரம் ஊறவிடவும். தண்ணீர் வடித்து மிளகு, மிளகாய்வற்றல், இஞ்சி, கொள்ளு, சோளம், கொண்டைக்கடலை எல்லாம் சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். இத்துடன் உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து பிசைந்து இட்லி தட்டுகளில் இட்லிபோல வைத்து ஆவியில் வேகவைத்து ஆறிய உடன் நன்கு உதிர்த்து வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து உதிர்த்து வைத்து இருக்கும் பருப்புகளைப் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு மொறுமொறுப்பாகும் வரை கிளறி இறக்கவும்.

மிகவும் சத்துக்கள் நிறைந்தது

இந்த வெரைட்டி உசிலி. மோர்க்குழம்பு சாதத்திற்கு ஏற்ற சிறந்த காம்பினேஷன் இந்த உசிலி.

பூண்டு வெங்காய அப்பளக் குழம்பு

தேவையான பொருட்கள்: புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, சின்ன பூண்டுப்பல்-10, சின்னவெங்காயம்-10, உளுந்து அப்பளம்-இரண்டு, மிளகாய் வற்றல் - ஒன்று, சாம்பார்பொடி - 2 ஸ்பூன், கடுகு- 1/4 ஸ்பூன், கடலைப்பருப்பு - 1/4 ஸ்பூன், வெந்தயம்- 1/4 ஸ்பூன், நல்லெண்ணெய் - 6 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:- புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும். பூண்டு வெங்காயத்தை தோல் உரித்து இரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம், மிளகாய் வற்றல் தாளித்து, பிறகு வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். பின்பு அப்பளத்தைப் பிய்த்து துண்டுகளாக்கிப் போடவும். இத்துடன் சாம்பார்ப்பொடியையும் போட்டு வதக்கிக் கொள்ளவும். பின்பு புளித்தண்ணீரை விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

பருப்பே இல்லாமல் வீடே மணக்கும்
இந்த பூண்டு வெங்காய அப்பளக் குழம்பு.

கீரை புரோட்டீன் கூட்டு

தேவையான பொருட்கள்:- முளைகட்டிய பாசிப்பயிறு - ஒரு கிண்ணம், முருங்கைக்கீரை - ஒரு கிண்ணம், தேங்காய்த்துருவல் - 1/4 கிண்ணம், இஞ்சி - ஒரு துண்டு, மிளகாய் வற்றல் - ஒன்று, உப்பு - தேவையான அளவு, சீரகம், மிளகு, தலா - 1/2 ஸ்பூன்.

தாளிக்க: கடுகு - ஒரு ஸ்பூன், எண்ணெய் - ஒரு ஸ்பூன்.

செய்முறை:- முளைகட்டிய பாசிப்பயறையும் முருங்கைக் கீரையும் ஒன்றாக வேகவிடவும். வெந்த உடன் தேவையான உப்பு சேர்க்கவும். தேங்காய்த்துருவல், மிளகு, சீரகத்தை மிளகாய்வற்றல் சேர்த்து வறுத்து மிக்ஸியில் அரைத்து வேக வைத்த கீரையுடன் சேர்த்துக் கொதிக்க விட்டு கடுகு தாளித்து இறக்கவும்.

மைசூர் பருப்பு சேர்த்தும் செய்யலாம். பிடித்தமான காய்கள் சேர்த்தும் செய்யலாம். கீரையுடன், சூடான சாதத்துடன் இந்த கூட்டு சேர்த்து சாப்பிட
மிகவும் நன்றாக இருக்கும். சிப்ஸ் சிறந்த காம்பினேஷன்.


Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]