Friday, October 2, 2009

 

க்விக் லஞ்ச்

தானிய சாண்ட்விச்

தேவையானவை: முளைகட்டிய தானியக் கலவை, கொத்தமல்லி - தலா ஒரு கப், பச்சை மிளகாய் - 3, பிரெட் ஸ்லைஸ் - தேவையான அளவு, கோதுமை மாவு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு, நெய் - தேவையான அளவு.

செய்முறை: தானியத்தைக் கொதிக்கும் நீரில் 10 நிமிடம் வேக வைத்து தண்ணீரை வடிய விடவும் (தண்ணீர் சேர்க்காமல் குக்கரி-லும் வேக விடலாம்). வேக வைத்த தானியத்துடன் உப்பு சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த தானியத்தைப் போட்டுக் கிளறி, கோதுமை மாவை சிறிது தண்ணீரில் கரைத்துச் சேர்க்கவும்.


வித்தியாசமான டேஸ்ட்டில் இருக்கும் இதை எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.பச்சை சட்னிக்கு கொத்தமல்லியுடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். இந்தக் கலவையை பிரெட்டில் தடவி, அதன்மேல் தானியக் கலவையைப் பரப்பி, மற்றொரு பிரெட்டில் பச்சை சட்னியைத் தடவி மூடி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் நெய் விட்டு எடுக்கவும்.


மிக்ஸட் அடை

தேவையானவை: உளுத்தம்பருப்பு, கடலைப்-பருப்பு, பச்சரிசி, புழுங்கல் அரிசி, பச்சைப் பயறு, தேங்காய் துருவல் - தலா கால் கப், துவரம் பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 10, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் - சிறிதளவு, பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை மெஷினில் கொடுத்து சிறு ரவையாக உடைத்துக் கொள்ளவும். தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் உடைத்த ரவையைப் போட்டு நன்றாகப் பிசறிக் கொள்ளவும். இதனுடன் தேங்காய் துருவல், நறுக்கிய கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து அடை பக்குவத்தில் கலந்து கொள்ளவும். இதை தோசைக்கல்லில் ஊற்றி, எண்ணெய் விட்டு, அடைகளாக சுட்டெடுக்கவும்.

இந்த ரவையை அரைத்து வைத்துக் கொண்டால் அவசரத் தேவைக்குக் கை கொடுக்கும்.


வேர்க்கடலை சாதம்

தேவையானவை: பச்சை வேர்க்கடலை - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 5, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் கப், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், வடித்த சாதம், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு - தலா அரை டீஸ்பூன்.

செய்முறை: வெறும் கடாயில் வேர்க்கடலையை வறுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விடாமல் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். ஆறியதும், மிக்ஸியில் பொடிக்கவும். கடைசியாக வறுத்த வேர்க்கடலையை சேர்த்து ஒருமுறை சுற்றி எடுக்கவும். பொடி ரெடி.

வடித்த சாதத்தில் தேவையான பொடியைப் போட்டு, தாளிக்க வேண்டிய பொருட்களைத் தாளித்துக் கொட்டி, உப்பு போட்டுக் கலக்கவும்.


சோயா நூடுல்ஸ்

தேவையானவை: சோயா பீன்ஸ் - அரை கப், பிளெய்ன் நூடுல்ஸ் - ஒரு பாக்கெட், வெங்காயத்தாள் - கால் கப், பச்சை மிளகாய் - 2, தக்காளி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் - அரை டீஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சோயா பீன்ஸை முந்தைய நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள், வேக வைத்து ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளவும். நூடுல்ஸை கொதிக்கும் நீரில் போட்டு, 2 நிமிடம் வேக வைக்கவும். பிறகு, குளிர்ந்த நீரில் போட்டு வடி கட்டவும்.

கடாயில் எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், வெங்காயத்தாள் சேர்த்து அரைத்து வைத்துள்ள சோயா பீன்ஸை சேர்த்து வதக்கவும். இதில் நூடுல்ஸ், உப்பு சேர்த்து, ஒரு நிமிடம் கழித்து தக்காளி சாஸ், சோயா சாஸ், மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.


பனீர் பர்கர்

தேவையானவை: பன் - 1, சதுர வடிவ பனீர் துண்டுகள் - 2, காய்ந்த மிளகாய் - 4, புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, எலுமிச்-சைச் சாறு - ஒரு டீஸ்--பூன், பொடி-யாக நறுக்கிய வெள்ளரிக்-காய், வட்டமாக நறுக்--கிய தக்காளி, வெங்காயத் துண்டுகள் - தலா 6, நெய் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தோசைக்கல்லில் பனீரை போட்டு ஒருமுறை புரட்டி எடுத்துக் கொள்ளவும். புதினா, கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து, எலுமிச்சைச் சாறு கலந்து வைக்கவும்.

பன்னை இரண்டாக வெட்டி, அதில் தக்காளி, வெள்ளரி, வெங்காயத் துண்டுகளை வைக்கவும். பிறகு, பனீர் துண்டின் மேல் மசாலா கலவையை தடவி, அதன் மேல் வைத்து, மீண்டும் தக்காளி, வெங்காயம், வெள்ளரி துண்டுகளை வைத்து பன்னை மூடி, தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் நெய் விட்டு எடுக்கவும்.

கரசாரமான பனீர் பர்கர் ரெடி!


பிரெட் ரோல்ஸ்

தேவையானவை: மைதா - ஒரு டேபிள்ஸ்பூன், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய், கொத்தமல்லி - சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், பிரெட் ஸ்லைஸ் - 6, கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, வெங்-காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி போட்டு வதக்கவும். இதில், உருளைக்கிழங்கு, கரம் மசாலாத்-தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

பிரெட்டின் நான்கு ஓரங்களையும் நீக்கி, லேசாக தண்ணீர் தெளித்து சிறிது உருளைக்கிழங்கு கலவையை நடுவில் வைத்து நன்றாக அழுத்தி கொழுக்கட்டை போல் பிடிக்கவும். சிறிது மைதாவைக் கையில் தடவிக் கொண்டு பிடித்தால் ஈஸியாக வரும். இதுபோல் எல்லாவற்றையும் செய்து வைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெயில் ஊற்றி, அதில் பிடித்து வைத்துள்ள ரோல்களை ஒவ்வொன்றாகப் போட்டு பொரித்தெடுக்கவும். இனிப்பும் காரமுமாக அற்புதமான சுவையில் இருக்கும் இந்த ரோல்ஸ்.

--------

மிக்ஸட் புளிசாதம்

தேவையானவை: கெட்டியாகக் கரைத்த புளி - ஒரு கப், நல்லெண்ணெய் - அரை கப், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள், கடுகு - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, வடித்த சாதம், உப்பு - தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க: வெந்தயம் - ஒரு டீஸ்பூன், தனியா - கால் கப், காய்ந்த மிளகாய் - 5.

செய்முறை: கடாயில் வெந்தயத்தைப் போட்டு சிவக்க வறுத்து தனியாக வைக்கவும். அதே கடாயில் தனியா, மிளகாயை வறுத்து, வெந்தயத்தையும் சேர்த்து நைஸாக பொடிக்கவும்.

கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, புளிக் கரைசலை விடவும். பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும்போது, பொடித்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

இதை வடித்த சாதத்துடன் கலந்து உடனடியாக சாப்பிடலாம்.


மிளகு தவலை அடை

தேவையானவை: அரிசி ரவை - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், ஒன்றிரண்டாக பொடித்த மிளகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் போட்டுத் தாளித்து, தேங்காய் துருவலை சேர்த்து லேசாக வறுக்கவும். இதில் பொடித்த மிளகு, உப்பு போட்டு, இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும். நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், ரவையைக் கொட்டிக் கிளறி இறக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் கிளறி வைத்துள்ள ரவை கலவையைத் தட்டிப் போட்டு, எண்ணெய் விட்டு, இருபுறமும் திருப்பி சுட்டெடுக்கவும்.


மசாலா சேமியா

தேவையானவை: வறுத்த சேமியா - ஒரு கப், நறுக்கிய காய்கறிகள் - அரை கப், மிளகு - அரை டீஸ்பூன், கிராம்பு, ஏலக்காய் - தலா 2, புதினா, பிரிஞ்சி இலை - சிறிதளவு, நெய் - ஒரு டீஸ்பூன். உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் நெய் விட்டு, கிராம்பு, ஏலக்காய், மிளகு சேர்த்து வறுத்து பொடித்துக் கொள்ளவும்.

காய்கறிகளுடன் உப்பு சேர்த்து கடாயில் வதக்கி, பொடித்த மசாலாவைச் சேர்க்கவும். சேமியாவின் அளவுக்கேற்ப தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்ததும், சேமியாவைப் போட்டுக் கிளறி, பிரிஞ்சி இலை போட்டு புதினா தூவி இறக்கவும். விருப்பப்பட்டால் நெய்யில் முந்திரி வறுத்து சேர்க்கலாம்



கம்பு தோசை

தேவையானவை: கம்பு மாவு - ஒரு கப், அரிசி மாவு - 2 டீஸ்பூன், ரவை - ஒரு டீஸ்பூன், புளித்த தயிர் - அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், நெய் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை:
தயிரில் உப்பு கலந்து கம்பு மாவு, அரிசி மாவு, ரவை, வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாயை சேர்க்கவும். ஒரு டீஸ்பூன் நெய், தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். இதை தோசைக்கல்லில் ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு தோசைகளாக வார்த்தெடுக்கவும்.


டோக்ளா

தேவையானவை: தோசை மாவு - ஒரு கப், கடலை மாவு - அரை கப், தயிர் - கால் கப், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, சீரகம், சர்க்கரை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உப்பு - சிறிதளவு.

செய்முறை: கடலை மாவுடன் சமையல் சோடா, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சிறிது உப்பு, தயிர் சேர்த்து நன்றாகக் கரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையுடன் தோசை மாவை சேர்த்துக் கலந்து, ஒரு தட்டில் ஊற்றி ஆவியில் வேக வைக்கவும். வெந்ததும் எடுத்து துண்டுகள் போடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து வெந்த டோக்ளா துண்டுகளைச் சேர்த்துக் கலந்து, ஒரு தட்டில் பரப்பி கொத்தமல்லி தூவவும். சர்க்கரையில் ஒரு கரண்டி தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து, டோக்ளா கலவையின் மேல் சிறிது சிறிதாக விடவும்.

தோசை மாவு மீந்து விட்டால், வாய்க்கு ருசியாக இந்த டோக்ளா செய்து கொள்ளலாம்.


ரெடிமேட் பிசிபேளாபாத்

தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், சாம்பார் - 2 கப், சின்ன வெங்காயம் - கால் கப், வெல்லம் - ஒரு துண்டு, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - சிறிதளவு.

வறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு, தனியா - தலா கால் கப், வெந்தயம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, பட்டை - 2 துண்டு, கிராம்பு - 2, கொப்பரை துருவல் - கால் கப், எண்ணெய் - ஒரு டீஸ்பூன். (ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கொப்பரை துருவல் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் வறுத்து, கொப்பரை துருவலை சேர்த்துப் பொடித்துக் கொள்ளவும்.)

செய்முறை: வடித்த சாதம், சாம்பார், உப்பு, 2 டீஸ்பூன் வறுத்த பொடியை சேர்த்துக் கலக்கவும். சிறிது எண்ணெயில் சின்ன வெங்காயத்தை வதக்கி சேர்க்கவும். நெய், ஒரு துண்டு வெல்லம் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும்.

கமகமக்கும் இந்த பிசிபேளாபாத்.


கார சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், கரம் மசாலாத்-தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, நெய், நசுக்கிய பச்சை மிளகாய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு, கரம் மசாலாத்-தூள், மிளகாய்த்தூள், பச்சைமிளகாய், கொத்தமல்லி, நெய் சேர்த்துக் கெட்டியாகக் கலந்து சப்பாத்திகளாக செய்து, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

இதற்கு தொட்டுகொள்ள எதுவுமே வேண்டாம். அப்படியே சாப்பிடலாம்.


வெஜிடபிள் பூரி

தேவையானவை: உருளைக்கிழங்கு, சோள மாவு - தலா கால் கப், கேரட், குடமிளகாய், பச்சைப் பட்டாணி சேர்ந்த கலவை - கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், ரவை - தலா ஒரு டீஸ்பூன், மைதா மாவு - ஒரு கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை: காய்கறிகளை குக்கரில் நன்றாக வேக வைத்து, தண்ணீரை வடித்து, மசிக்கவும். பச்சை மிளகாய், உப்பு, மைதா, ரவை, சோள மாவு சேர்த்து பூரி மாவு பதத்தில் கலக்கவும். மாவு தளர இருந்தால் சிறிது மைதா மாவை சேர்க்கலாம். வழக்கமாக பூரி செய்வது போல செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

காய்கறி சேர்ப்பதால் புதுவிதமான சுவையில் இருக்கும் இந்த பூரி.


கை குத்தல் அவல் உப்புமா

தேவையானவை: கை குத்தல் அவல் - ஒரு கப், தேங்காய் துருவல் - கால் கப், காய்ந்த மிளகாய் - 2, தனியா, கடுகு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அவலை 15 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விடாமல், காய்ந்த மிளகாய், தனியாவை வறுத்து கரகரப்பாக பொடிக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, ஊறிய அவலை பிழிந்துப் போட்டு உப்பு, வறுத்துப் பொடித்த மசாலாவை சேர்க்கவும். பிறகு, தேங்காய் துருவலை சேர்த்து நன்றாகக் கலந்து, வெந்ததும் இறக்கவும்.


மினி பனீர் ஊத்தப்பம்

தேவையானவை: தோசை மாவு - ஒரு கப், துருவிய பனீர் - அரை கப், தக்காளி, கொத்தமல்லி - சிறிதளவு, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பனீருடன் தக்காளி, மிளகுத்தூள், கொத்தமல்லி, உப்பு போட்டு கலந்து கொள்ளவும். தோசைக்கல்லில் மாவை சிறு ஊத்தப்பங்களாக ஊற்றி, அதன் நடுவே பனீர் கலவையைத் தூவி, மூடியால் மூடி, மிதமான தீயில் வேக விடவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும்.


கீரை சாதம்

தேவையானவை: வடித்த சாதம், பொடியாக நறுக்கிய ஏதேனும் ஒரு கீரை - தலா ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, தனியா, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து கீரை, உப்பு சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், தனியா, சீரகம் ஆகியற்றை மிக்ஸியில் அரைத்து வதங்கிய கீரையுடன் சேர்த்து, சாதத்தைப் போட்டுக் கிளறவும்.


பிரெட் பணியாரம்

தேவையானவை: தோசை மாவு - அரை கப், பிரெட் தூள் - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: தோசை மாவுடன் உப்பு, பிரெட் தூளைக் கலந்து, இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, தேங்காய் துருவலை சேர்த்து வதக்கி, மாவு கலவையுடன் கலந்து கொள்ளவும். பணியாரக்குழியில் மாவை ஊற்றி, பணியாரங் களாகச் சுட்டெடுக்கவும்.

பஞ்சு போல இருக்கும் இந்தப் பணியாரத்தை, பல் போன வயோதிகரும் பக்குவமாகச் சாப்பிட முடியும்.


ஃப்ரூட் ரைஸ்

தேவையானவை: பாதாம், முந்திரி, காய்ந்த திராட்சை கலவை - கால் கப், ஆப்பிள், அன்னாசிப்பழம், மாம்பழம், திராட்சை (வாழைப்பழம் தவிர மற்ற எந்த பழம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்) பழக்கலவை, உதிரான சாதம் - தலா ஒரு கப், நெய் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: முந்திரி, திராட்சை, பாதாமை நெய்யில் லேசாக வறுத்து சாதத்தில் சேர்க்கவும். இதில் உப்பு, மிளகுத்தூள், பழக்கலவையை சேர்த்து ஒன்றாகக் கலக்கவும்.

தித்திப்பும் புளிப்புமாக மணக்கும் இந்த ரைஸ்!


டொமேட்டோ-பிரெட் உப்புமா

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 6, பொடியாக நறுக்கிய தக்காளி - அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி - தலா கால் கப், கீறிய பச்சை மிளகாய் - 2, சாம்பார் பொடி - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, கடுகு - கால் டீஸ்பூன்.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, பச்சை மிளகாய், கொத்தமல்லியைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு வெங்காயம், தக்காளி, உப்பு, சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும். பிரெட்டை சிறு துண்டுகளாக நறுக்கிச் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி இறக்கவும்.

குழந்தைகள்கூட விரும்பி சாப்பிடுவார்கள் இந்த உப்புமாவை!


ஃப்ரைடு இட்லி

தேவையானவை: இட்லி - 6, பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் - தலா கால் கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய் - சிறிதளவு, தக்காளி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: இட்லியை நீள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய இட்லியைப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி போட்டு நன்றாக வதக்கி, வறுத்த இட்லியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு தக்காளி சாஸை ஊற்றி, உப்பு சேர்த்துக் கலந்து ஒரு நிமிடம் கழித்து இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.


ஸ்வீட் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், சர்க்கரை, நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி-பாதாம் - தலா கால் கப், குங்குமப் பூ - ஒரு சிட்டிகை, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - சிறிதளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து, சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து, சிறிய சப்பாத்திகளாக இட்டுக் கொள்ளவும். இதன் மேல் நெய் தடவி, சர்க்கரை, பொடித்த முந்திரி-பாதாம், குங்குமப் பூ தூவி நான்காக மடித்து, திரும்பவும் பெரிய சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு சுட்டெடுக்கவும்,


செல்வர் அப்பம்

தேவையானவை: மைதா - ஒரு கப், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், புளித்த தயிர், தேங்காய் துருவல் - தலா கால் கப், பச்சை மிளகாய் - 4, பெருங்காயத்தூள், எண்ணெய் - தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தேங்காய் துருவலுடன் பச்சை மிளகாய், தயிர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதில் மைதா, அரிசி மாவு, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.


கடாயில் எண்ணெய் விட்டு, சிறு அப்பங்களாக சுட்டெடுக்கவும்.


உப்புமா கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி ரவை - ஒரு கப், துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - கால் கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சீரகம், துவரம்பருப்பை ஒன்றிரண்டாக பொடித்து, அரிசி ரவையுடன் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். இதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, 2 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்ததும் அரிசி ரவை கலவையை சேர்த்துக் கிளறவும். பிறகு இறக்கி, ஆறியதும் கொழுக்கட்டைகளாகப் பிடித்து வேக வைக்கவும்.


நெல்லிக்காய் சாதம்

தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், துருவிய பெரிய நெல்லிக்காய் - கால் கப், எலுமிச்சைச் சாறு, எண்ணெய், தேங்காய் துருவல் - தலா ஒரு டீஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் - 2, கடுகு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், துருவிய நெல்லிக்காய், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். லேசாக ஆறியதும், எலுமிச்சைச் சாறை விட்டு, வடித்த சாதத்தை சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.


ஃப்ரைடு ரைஸ்

தேவையானவை: உதிராக வடித்த பாஸ்மதி சாதம், கோஸ், குடமிளகாய், கேரட், பச்சை பட்டாணி சேர்ந்த காய்கறிக் கலவை - தலா ஒரு கப், வெங்காயத்தாள் - கால் கப், வெள்ளை மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், சோயா சாஸ் - அரை டீஸ்பூன், அஜினமோட்டோ (விருப்பப்பட்டால்) - ஒரு சிட்டிகை, நெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு காய்கறிகள், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயத்தாள் சேர்த்து லேசாக வதக்கி இறக்கவும். இதில் மிளகுத்தூள், சோயா சாஸ், வேக வைத்த சாதம், அஜினமோட்டோ, நெய் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.


உசிலி

தேவையானவை: அரிசி, பயத்தம்பருப்பு - தலா அரை கப், தேங்காய் துருவல் - கால் கப், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, பருப்பை தனித்தனியாக சிவக்க வறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளிக்கவும். இதில் 2 கப் தண்ணீரை விட்டு உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, வறுத்த அரிசி, பருப்பு, தேங்காய் துருவலை சேர்க்கவும். இதை நன்கு கிளறி, உதிர் உதிராக வந்ததும் இறக்கவும்.


வெஜிடபிள் கொழுக்கட்டை

தேவையானவை: பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு (அரிசியைத் தண்ணீரில் களைந்து, நிழலில் உலர வைத்து அரைத்த மாவு) , பொடியாக நறுக்கிய கோஸ், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு சேர்ந்த கலவை - தலா ஒரு கப், தனியாத்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்கறிகளைப் போட்டு வதக்கவும். உப்பு, தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து காய்கறிகள் வெந்ததும் இறக்கவும். பதப்படுத்தப்பட்ட அரிசி மாவை கொழுக்கட்டைக்கு மாவு கிளறுவதுபோல் கிளறிக் கொள்ளவும்.

இந்த மாவில் சிறிது எடுத்து கிண்ணம் போல் செய்து அதனுள் காய்கறிக் கலவையை வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.


சாம்பார் இட்லி

தேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் சேர்ந்தது - கால் கப், புளி - கொட்டைப்பாக்கு அளவு, கொத்தமல்லி - சிறிதளவு, இட்லி மாவு - ஒரு கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

வறுத்து அரைக்க: தனியா, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4.

செய்முறை: துவரம்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, வறுக்க கொடுத்துள்ளவற்றை வறுத்து, தண்ணீர் சேர்த்து அரைக்கவும். அதே கடாயில் எண்ணெயை விட்டு வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கி, புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து இதில் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். கொதித்ததும், அரைத்த மசாலாவை சேர்த்து, வெந்த துவரம் பருப்பு, கொத்தமல்லி தூவி நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.

இட்லி மாவை சிறு இட்லிகளாக வார்த்து, ஒரு கிண்ணத்தில் இட்லியை போட்டு அதன்மேல் சாம்பாரை விட்டு, பரிமாறவும்.


ரவா கட்லெட்

தேவையானவை: ரவை - கால் கப், துருவிய கேரட்-கோஸ் - கால் கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், வேக வைத்த உருளைக்கிழங்கு - அரை கப், பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி, பச்சைமிளகாய் - சிறிதளவு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், கடலை மாவு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பச்சைமிளகாய், புதினா, கொத்தமல்லி, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பிறகு, துருவிய கேரட், கோஸ் சேர்த்து வதக்கி, வேக வைத்த உருளைக்கிழங்கு உப்பு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

ரவையை வறுத்துக் கொள்ளவும். கடலை மாவை சிறிது தண்ணீரில் கரைத்து, காய்கறிக் கலவையுடன் சேர்க்கவும். இதனுடன் ரவையை சேர்த்துக் கிளறி கட்லெட் வடிவத்தில் செய்து தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு எடுக்கவும்.





Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]