Wednesday, October 14, 2009
மைக்ரோ வேவ் அவனில் சாதம் சமைப்பது எப்படி?
இந்தச் சமையலில் உணவிலுள்ள வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் நஷ்டமடையாமல் அப்படியே இருக்கின்றன. முக்கியமாக ருசி மாறாமல் இருக்கின்றன!
காய்கறிகளின் நிறம் பாதுகாக்கப்படுகிறது.
மிகக் குறைந்த நேரத்தில் மிகக் குறைந்த மின்சார உபயோகத்தில் சிறந்த முறையிலே உணவு தயாரிக்கலாம்.
5 நிமிடங்களுக்குள் ஏறக்குறைய 500 கிராம் கேக் தயார் செய்து விடலாம்.
வட இந்திய, தென் இந்திய, சீன உணவு வகைகள் பலவற்றைச் சுலபமாகச் சமைக்கலாம்.
கரி படாமல், கைகள் அழுக்காகாமல், நிறையப் பாத்திரங்கள் உபயோகப்படுத்தாமல் சமைக்கலாம்.
சிறு குழந்தைகள் கூடப் பயமில்லாமல் மைக்ரோவேவ் அவனில் சமையல் செய்யலாம்.
எந்தப் பாத்திரத்தில் சமையல் செய்கிறோமோ அதே பாத்திரத்தில் சூடாக உணவைப் பரிமாறும் வசதியும் இருக்கிறது.
வெயில் காலத்தில்கூட சமையலறை சூடாகி நாமும் வேர்த்து வழியாமல், சமைத்து முடித்து விட்டு வெளியே வந்து விடலாம்.
கன்வெக்ஷன் அவன் பற்றித் தெரிந்து கொள்ளலாமா?
உலர் சூட்டிலே உணவு வகைகளை வேக வைப்பது அல்லது பேக் செய்யும் முறைக்குப் பெயர்தான் கன்வெக்ஷன் அவன். இதில் இருக்கும் கிரில்லில் பிரெட், கபாப் போன்றவைகளை டோஸ்ட் செய்யலாம். கோழி ரோஸ்ட் செய்யலாம்.
சாதாரண பேக்கிங் அவன் செய்யும் வேலைகளைக்கூட இது செய்கிறது. அலுமினியம், ஸ்டீல் பாத்திரங்கள் வைத்து பேக் செய்யலாம். இந்த பேக்கிங் முறைக்கு எண்ணெய் அதிகம் தேவை இல்லை. கன்வெக்ஷன் மோட், மைக்ரோ வேவ் இரண்டும் ஒன்றாக இருக்கின்ற அவன்கள் இருக்கின்றன. விலையும் அதிகம். உலர் சூட்டிலே உணவு வகைகள் சமைக்கும் போது கன்வெக்ஷன் மோடிலும், மைக்ரோ கதிர்களில் சமைக்கும் போது மைக்ரோ வேவ் மோடிலும் அவனைச் செட் செய்து கொள்ள வேண்டும்.
வெளிநாடுகளில் மைக்ரோ, கன்வெக்ஷன் இரண்டும் இணைந்த அவன்கள் பெருமளவில் உபயோகத்தில் இல்லை. ஏனெனில் அங்கு வீட்டுக்கு வீடு பெரிய அவன் சுவரிலேயே பதித்திருக்கும் இதனால் சாதாரண அவனைத்தான் அங்கு பெருமளவில் பயன்படுத்துகிறார்கள்.
மைக்ரோ வேவ் அவனில் சாதம் சமைப்பது எப்படி?
ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் என்ற முறையிலும் 2 கப் அரிசிக்கு 3 அல்லது மூன்றரை கப் தண்ணீர் என்ற முறையிலும் எடுத்துக் கொள்ளலாம். இது பொதுவான அளவுதான். ஒவ்வொரு அரிசிக்கும் தண்ணீரின் அளவு வித்தியாசப்படும். புழுங்கல் அரிசியானால் கொஞ்சம் அதிகத் தண்ணீரும் அதிக நேரமும் கூட ஆகலாம்.
பாஸ்மதி அரிசியானால் மேலே தரப்பட்ட அளவு நீர் சரியாக இருக்கும். சாதம் கொஞ்சம் குழைந்தது போல் வேண்டுமானால், அதே அளவு தண்ணீரில் அரிசியைப் 10-15 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர் சமைக்கலாம். ஃபிரைடு ரைஸ் போன்றவற்றுக்கு சாதம் பொல பொல என்றிருக்க வேண்டும். சாதம் சமைக்கும் போதே அரைத் தேக்கரண்டி பட்டர் அல்லது எண்ணெயை அரிசியுடன் சேர்க்கலாம். சாதாரணமாக 2 கப் அரிசி வேக 15 நிமிடங்கள் ஆகும். அதுவே 4 கப் ஆனால் 20 நிமிடங்களில் சாதம் தயாராகி விடும்.
அரிசியை இரண்டு அல்லது மூன்று தடவைகள் நன்கு அலசி விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தேவைக்கேற்ப உப்பும் சேர்த்து மேலே கொடுக்கப்பட்ட நேர அளவுகளை நீங்கள் உபயோகப்படுத்தும் அரிசியினையும் அதன் அளவையும் கொண்டு நிர்ணயிக்க வேண்டும். செய்து பாருங்கள்!
Subscribe to Posts [Atom]
Post a Comment