Wednesday, October 14, 2009
TIPS
சுவையின் ரகசியம்!
எந்தவகை ஜூஸ் தயாரிக்கும்போதும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால், ஜூஸின் சுவை கூடுதலாக இருக்கும்.
ஹெல்தி ரோஸ்ட்!
உருளை, சேப்பங்கிழங்கு போன்றவற்றை ரோஸ்ட் செய்யும்பொழுது மிளகாய்த் தூளுக்குப் பதிலாக மிளகு, சீரகப் பொடியைச் சேர்த்தால் சுவையும் மாறுபட்டு இருக்கும். வாயுத்தொல்லையும் இருக்காது.
மிக்ஸியில் அரைக்கணுமா?
மிக்ஸியில் உளுந்து வடைக்கு நீர்க்காமல் சூடாகாமல் அரைக்கணுமா? ஒரு கப் உளுத்தம்பருப்பை இருபது நிமிடங்கள் மட்டும் ஊற வைத்து, நீரை வடித்து, மிக்ஸி கப்பில் போட்டு, ஒரு ஸ்பூன் ஐஸ் வாட்டர் விட்டு, 30 நொடிகள் ஓட விடவும். 10 நிமிடம் கழித்து மீண்டும் ஒரு ஸ்பூன் நீர்விட்டு 30 நொடிகள் ஓடவிடவும். நான்கைந்து முறை, இப்படிச் செய்தால் கெட்டியான பந்து போன்ற வடைமாவு உங்கள் கையில்...
பழுக்காத பாகற்காய்க்கு
பாகற்காய் பழுக்காமல் இருக்க, வாங்கியவுடனே அதை இரண்டாக வெட்டி வைத்துவிடுங்கள்.
பால் திக்காக...
ஜவ்வரிசியை ஓர் அழுக்கில்லாத வெள்ளைத் துணியில் முடிந்து காய்ச்சும் பாலில் போட்டுவிட்டால், இது கரைந்து பால் கெட்டியாகி காபி சுவையாக இருக்கும்.
வடாம் சூப்!
சூப்பில் போடுவதற்கு பிரெட் துண்டுகள் இல்லாதபோது ஜவ்வரிசி வடாம் பொரித்து உடைத்துத் துண்டுகளாக்கி சூப்பில் போட, சுவையும் மணமும் கூடும்.
புளியில் புழு வராமல் இருக்க...
கடைகளில் வாங்கிய புளி, சில சமயங்களில் புழுவின் உறைவிடமாகி இருக்கும். காரணம், அதிலுள்ள கொட்டைதான். வாங்கியவுடன் கொட்டைகளை எடுத்துவிட்டு, வெயிலில் காய வைத்து, கன்டெய்னரில் வைத்தால், ஆறு மாதம் கெடாது.
புளிப்பான ஊறுகாய்!
எலுமிச்சை, நாரத்தை ஊறுகாய் நாளாகிவிட்டால் புளிப்பு இறங்கிவிடும். இதற்கு பச்சை மிளகாயை வகுந்து, எண்ணெயில் வதக்கி அத்துடன் போட்டு, உப்புச் சேர்த்து கிளறி, மறுநாள் உபயோகிக்கவும்.
ரசம் கமகம என்று மணக்க வேண்டுமா?
ரசம் பரிமாறும்போது, அதில் ஒன்றிரண்டு பன்னீர்த் துளிகளை விட்டு பிறகு பரிமாறுங்கள். ரசம் கமகம என்று மணக்கும்.
வாழைக்காய் வீணாகாமல் இருக்க...
வறுவலுக்கு வாழைக்காயை வீணாக்காமல் கடைசிவரை சீவ, முதலிலேயே காம்பை வெட்டாமல் காம்புவரை தோல் சீவி, காம்பை பிடித்துக்கொண்டு சீவவும். - வே. சித்ரா, திருவண்ணாமலை.
வழவழப்பில்லாத வெண்டைக்கு...
வெண்டைக்காய் வதக்கும்போது ஒரு ஸ்பூன் மோர் ஊற்றி வதக்கினால் வழவழப்பின்றி சுவையாக இருக்கும்.
இதுதான் கொழுக்கட்டை பதம்!
கொழுக்கட்டையைச் சரியாக வேக வைக்காவிட்டால் கொழகொழப்பாக இருக்கும். அதிக அளவு வேகவைத்தால் வெடிப்புகள் ஏற்படும். சரி, பதம்தான் என்ன என்கிறீர்களா? கொழுக்கட்டை நன்றாக வெந்ததற்கு அடையாளம், கொழுக்கட்டை மேல் வியர்த்தது போல் நீர் இருக்கும்.
வெண்ணெய்போல தயிர் சாதம் கலக்க வேண்டுமா?
சாதம் வைக்கும் முன், அரிசியுடன் ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் பாலை கலந்து சாதம் வைத்தால் தயிர் சாதம் புளிப்பில்லாமல் சுவையுடன் இருக்கும். கெட்டும் போகாது. சாதமும் குழைந்து வரும்.
Subscribe to Posts [Atom]
Post a Comment