Thursday, November 19, 2009

 

அடுப்பு இல்லாமல் ஒர் அதிசய சமையல் !

இயற்கை லட்டு

தேவையானவை: முந்திரிப் பருப்பு - 200 கிராம், பாதாம் பருப்பு, உலர் திராட்சை - தலா 100 கிராம், பிஸ்தா பருப்பு - 50 கிராம், பேரீச்சை - 250 கிராம் (கொட்டை நீக்கியது), ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: முந்திரி, பாதாம், பிஸ்தா அனைத்தையும் மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். இதனுடன் கழுவிய பேரீச்சை, உலர் திராட்சை, ஏலக்காய்த்தூள் கலந்து லேசாக அரைக்கவும். அரைத்த சூடு குறைவதற்குள்ளாகவே சிறுசிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். இது, ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும். இதனுடன் தேங்காய் துருவலும் சேர்த்து செய்யலாம். ஆனால், அதை உடனடியாகச் சாப்பிட்டுவிட வேண்டும்!

பயன்கள்: உடலுக்குத் தெம்பும், வேலை செய்ய அதிக கலோரி சக்தியும் தரும் உணவு. பசியைத் தாங்கும். விந்து பலம், ஆண்மை சக்தியைக் கூட்டும். சளி, இருமல், ஆஸ்துமா அன்பர்களுக்கு நல்லது. உடலில் சதைப் பிடிக்காத குழந்தைகளுக்கு ஏற்றது. மூலச்சூடு இருப்பவர்கள் அளவாகப் பயன்படுத்த வேண்டும்.


இயற்கை இட்லி

தேவையானவை: கார் அரிசி அவல் - 500 கிராம், காய வைத்த முளைத்த கோதுமை - 200 கிராம் அல்லது கோதுமை அவல் - 250 கிராம், தேங்காய் துருவல் - 5 மூடி, பிளாக்சால்ட் - சிறிதளவு.

செய்முறை: கோதுமை அல்லது கோதுமை அவலை மிக்ஸியில் அரைக்கவும். அரிசி அவலை கல் நீக்கி, நீர் விட்டுக் கழுவவும். நீரை வடித்து, அப்படியே ஊறவிட்டு, பிறகு மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன், அரைத்து வைத்துள்ள கோதுமையைக் கலந்து, அளவான நீர் சேர்க்கவும். கூடவே, தேங்காய் துருவல், பிளாக்சால்ட் சேர்த்துக் கலக்கவும். மாவு கெட்டியாக இருக்கவேண்டியது முக்கியம். வழக்கமான இட்லி மாவு பதத்துக்கு தயாரிக்கக் கூடாது. புட்டுப் பதத்தில் இருக்கலாம். இந்த மாவை, இட்லி தட்டுகளில் வைத்து எடுத்தால், இட்லி வடிவம் கிடைக்கும். அப்படியே சாப்பிட வேண்டியதுதான்.

பலவகை அவல்கள் கலந்தும் இயற்கை இட்லி தயாரிக்கலாம். வெஜிடபிள் இட்லி தேவையெனில் மாவுடன் கேரட், வெள்ளரி, கோஸ் போன்றவற்றின் துருவல் கலந்தும் செய்யலாம். இத்துடன் தேங்காய்சட்னி, மல்லிச்சட்னி, மல்லித் துவையல், தக்காளிச் சட்னி சேர்த்துச் சாப்பிடலாம். இயற்கை சாம்பாரும் சேர்த்துக் கொள்ளலாம்.


வெஜ் பிரியாணி

தேவையானவை: கார் அரிசி அவல் - 250 கிராம், கோதுமை அவல் அல்லது சோள அவல் அல்லது முளைத்த கோதுமை காய வைத்தது - 250 கிராம், பெரிய வெங்காயம், வெள்ளரி - தலா 2, கேரட், தக்காளி - தலா 3, கோஸ், பீன்ஸ், வெண்பூசணி, புடலை, சௌசௌ, முளைத்த வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு, உலர் திராட்சை - தலா 100 கிராம், உருளைக் கிழங்கு - 1, மிளகுத்தூள், சீரகத்தூள், லவங்கம், பட்டை, இந்துப்பு - சிறிதளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா - தேவையான அளவு, எலுமிச்சை - 3, தேங்காய் துருவல் - 4 மூடி, கிராம்பு - 5, ஏலம் - 10, மாதுளை, குடமிளகாய் - தலா 2, முளைத்த பாசிப்பயறு, முளைத்த எள், இஞ்சி - தலா 50 கிராம்.

செய்முறை: அவல்களை சுத்தம் செய்து, கல் நீக்கி, மிக்ஸியில் ரவை போல் அரைக்கவும் (எல்லா அவல்களிலும் சிறிது எடுத்தும் செய்யலாம்). காய்கறிகள் அனைத்தையும் கழுவி தோல் சீவி, தீக்குச்சி வடிவில் சிறிதாக நறுக்கவும். பாசிப்பயறு, வேர்க்கடலை, எள்... இவற்றை முதல் நாளே முளைக்க வைக்கவும். கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லியை கழுவி வெட்டவும். எலுமிச்சையைச் சாறு எடுக்கவும். குடமிளகாயை சிறிய துண்டுகளாக வெட்டவும். இஞ்சியைத் தோல் சீவி வெட்டவும். மாதுளை முத்துக்களைப் பிரிக்கவும். உலர் திராட்சை, முந்திரியைக் கழுவி பத்து நிமிடம் ஊற விடவும். காய்கறிகள், அரைத்த அவலை விட இருபங்கு கூடுதலாக இருக்க வேண்டும்.

ஊறிய ரவை அவல், ஊறிய ரவை கோதுமையுடன் வெட்டிய காய்கறிகள், புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி, குடமிளகாய், இஞ்சி, முளைத்த தானியங்கள், தேங்காய் துருவல், முந்திரி, திராட்சை, மாதுளை முத்துக்கள், மிளகுத்தூள், சீரகத்தூள், லவங்கம், பட்டை, கிராம்பு, ஏலம், இந்துப்பு, எலுமிச்சைச்சாறு அனைத்தையும் சேர்த்துக் கிளறவும். பிரியாணி தயார்!
பயன்கள்: அருமையான, சத்தான, உடலுக்கு ஊறு விளைவிக்காத, அதிக தெம்பு தரும் வெஜ் பிரியாணி இது!


அவல் மிக்ஸர்

(இனிப்பு அல்லது காரம் என இரு சுவைகளில் தயாரிக்கலாம்)

தேவையானவை: கார் அரிசி அவல் (அல்லது சோள அவல்) - 500 கிராம், வறுத்த வேர்க்கடலை - 50 கிராம், பொரி, பொட்டுக்கடலை - தலா 100 கிராம், வெல்லத்தூள் - 250 கிராம். தேங்காய் துருவல் - 2 மூடி (மிளகுத்தூள், சீரகத்தூள், இந்துப்பு - சிறிதளவு, குடமிளகாய் - 1).

செய்முறை: அவலை தண்ணீரில் நனைக்காமல் பயன்படுத்த வேண்டும். அவலை கல் நீக்கி தூசு போகப் புடைக்கவும். அத்துடன் வறுத்த வேர்க்கடலை, பொரி, பொட்டுக்கடலை, வெல்லத்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும். கழுவிய பேரீச்சை துண்டுகளும், உலர் திராட்சையும் சேர்க்கலாம். இதுதான் இனிப்பு அவல் மிக்ஸர்!

இதேபோல, அவலுடன் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, பொரி, மிளகுத்தூள், சீரகத்தூள், இந்துப்பு, தேங்காய் துருவல் கலந்து அத்துடன் குடமிளகாய் சிறிதாக வெட்டி நன்றாகக் கலக்கவும். கார அவல் மிக்ஸர் ரெடி. வறுக்காத முந்திரிகளும் பயன்படுத்தலாம்.

பயன்கள்:
அல்சர் உள்ளவர்களுக்கு ஏற்றது. இது, எண்ணெய்ப் பலகாரத் துக்கு நல்ல மாற்று.


இயற்கை சாம்பார்

தேவையானவை: பாசிப்பருப்புப் பொடி, துவரம் பருப்புப் பொடி - தலா 100 கிராம், கறிவேப்பிலை, கொத்தமல்லி - 50 கிராம், சாம்பார் பொடி - சிறிதளவு, தக்காளி - 200 கிராம், எலுமிச்சை - 3, பெரிய வெங்காயம் - 1, தேங்காய் துருவல் - மூன்று மூடி, கோஸ், வெண்பூசணி - தலா 100 கிராம், கேரட் - 200 கிராம், பிளாக்சால்ட், சீரகப் பொடி, பூண்டு, இஞ்சி - சிறிது, குடமிளகாய் - 2.

செய்முறை: எல்லா காய்கறிகளையும் கழுவி தோல் நீக்கி, கேரட் துருவல் போல் துருவிக் கொள்ளவும். அல்லது தீக்குச்சி போல் அரிந்து கொள்ளலாம். கறிவேப்பிலை, கொத்தமல்லியை கழுவவும். இஞ்சி, பூண்டு தோல் நீக்கவும். எலுமிச்சை, தக்காளியை சாறு எடுக்கவும்.

குடமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, இஞ்சி, எல்லாவற்றையும் அரைக்கவும். தேங்காயைச் சிறிது நீர்விட்டு அரைக்கவும். தேவையான நீரில் பாசிப்பருப்புப் பொடி, துவரம்பருப்புப் பொடி போட்டுக் கலக்கவும். துருவிய காய்கறிகள், தேங்காய் விழுது, சாம்பார் பொடி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பூண்டு, இஞ்சி அரைத்த விழுது, உப்பு, சீரகப்பொடி போட்டு கலக்கவும். இதுவே இயற்கை சாம்பார்!

பயன்கள்: இந்த இயற்கை சாம்பார் எல்லா சத்துகளும் கலந்த ஒரு சரிவிகித உணவு.

வெண்பூசணி கூட்டு

தேவையானவை: வெள்ளைப் பூசணி - 500 கிராம், பாசிப் பருப்பு, வறுத்த வேர்க்கடலைத்தூள், முளைகட்டிய தானியம் (ஏதாவது ஒன்று) - தலா 50 கிராம், தேங்காய் துருவல் - 2 மூடி, பொட்டுக்கடலைத்தூள் - 300 கிராம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகு, சீரகத்தூள், பிளாக்சால்ட் அல்லது இந்துப்பு - சிறிதளவு.

செய்முறை: பாசிப்பருப்பை நீரில் ஊற வைக்கவும். வெண்பூசணியைக் கழுவித் தோல், கொட்டைகளை நீக்கி, நீளவாக்கில் சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். கொத்தமல்லி, கறிவேப்பிலையை நறுக்கிக் கொள்ளவும். இத்துடன் தேங்காய் துருவல், பொட்டுக்கடலைத்தூள், முளைகட்டிய தானியம், ஊறிய பாசிப்பருப்பு, வேர்க்கடலைத்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் தேவையான அளவு கலக்கவும். தேவைப்பட்டால் இந்துப்பு சேர்க்கவும்.

சுரைக்காய், பீர்க்கை, வெள்ளரி, புடலை, சௌசௌ என நீர்ச்சத்து நிறைந்த அல்லது எல்லா வகை கொடிக்காய்களைப் பயன்படுத்தியும் இந்த முறையில் கூட்டு தயாரிக்கலாம்.

பயன்கள்: சர்க்கரை குறைபாடுடையவர்கள், உடல் மெலிய வேண்டியவர்களுக்கு இது ஏற்றது. உடலில் கெட்ட நீர் விலகி, மலச்சூடு, மூலச்சூடு, அதிக உடல்சூடு குறைகிறது. வயிற்றுவலி, வயிறு எரிச்சல், அல்சர், இரைப்பைப் புண், குடல் புண் உள்ளவர்கள் இரண்டே நாட்களில் நல்ல நிவாரணம் பெறலாம். முகப்பரு குறையும். மேனி மிளிரும். கண் எரிச்சல் குணமாகும். கண்ணாடி அணியும் நிலையில் இருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பார்வை தெளிவாகும்!


Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]