Sunday, April 4, 2010

 

குக்கரி க்வீன்!

குக்கரி க்வீன்!ஏப்ரல் 04,2010,14:34 IST

பாசிபருப்பு சீடை
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி - 500 கிராம்,
பாசிப் பருப்பு - 100 கிராம்
ஜவ்வரிசி (பெரியது) - 50 கிராம், நெய் - சிறிது, உப்பு, சீரகம் - தேவையான அளவு, காரம் தேவையெனில் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
அரிசியைக் கழுவி வெயிலில் உலர்த்தவும். பாசிப்பருப்பை வாசனை வரும் வரை எண்ணெயின்றி வறுக்கவும். ஜவ்வரிசையையும் அவ்வாறே பொரிக்கவும். எல்லாவற்றையும் கலந்து மிஷினில் கொடுத்து மாவாக்கவும். மாவை சலித்து எடுத்து அதோடு நெய், உப்பு, சீரகம், (தேவையெனில் சிறிது மிளகாய்த்தூள்) சேர்த்து உருட்டாமல் (தட்டைப் பயிறுபோல்) நீள் வட்டமாக உருப்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன் சிறிது சிறிதாக மிதமானத் தீயில் போட்டு வெந்தவுடன் எண்ணெயை வடித்து öடுக்கவும்.
- எஸ்.என்.கமலா, மதுரை.


உளுந்துக்களி
தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி - 200 கிராம், உளுந்து அல்லது தோல் உள்ள உளுந்தம் பருப்பு - 200 கிராம், நல்லெண்ணெய் - 200 கிராம், கருப்பட்டி (பனைவெல்லம்) 400 கிராம், தண்ணீர் 1/4 லிட்டர்.
செய்முறை
அரிசியையும் உளுந்தையும் நன்றாகச் சுத்தம் செய்து மிஷினில் மாவாகக் அரைத்துக் கொள்ளவும் அடிகனமான பாத்திரம் ஒன்றில் தண்ணீரை ஊற்றி நன்றாகக் கொதிக்க விடவும். அதில் கருப்பட்டியைப் போட்டு, கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும். அதேப் பாத்திரத்தில் வடிகட்டிய கருப்பட்டி நீரை ஊற்றி அரிசி - உளுந்து மாவை சிறிது சிறிதாக ஒருவர் தூவவும். இன்னொருவர் மரக்கரண்டியால் மிதமான தீயில் கைவிடாமல், மாவு கட்டி சேராதவாறு, கிளறிக கொண்டே இருக்கவும்.
அவ்வப்போது நல்லெண்ணெய் ஊற்றிக் கிளறவும்.மாவு அல்வா பதம் (சட்டியில் ஒட்டாதவாறு) வந்ததும் இறக்கவும். ஆறிய பின் கையில் நல்லெண்ணெயைத் தொட்டுக் கொண்டு, பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக, ஒரு வாயகன்ற பாத்திரத்தில் உருட்டி வைக்கவும். தேவையெனில் முந்திரிப் பருப்பைச் சேர்க்கவும்.
உடல் பலத்துக்கு மிகவும் சத்தான களி. பூப்பெய்திய பெண்களுக்குப் பதினாறு நாட்களும் தொடர்ந்து இதைக் கொடுப்பார்கள். இடுப்புக்குப் பலம். இந்தக் களியை சாப்பிட்டு இருபது நிமிடங்கள் கழித்துதான் தண்ணீர் குடிக்க வேண்டும்.
எஸ்.லோகா சுப்ரமண்யன், சிந்துபூந்துறை.


குக்கீஸ்
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி - 4 கப், பாசிப்பருப்பு - 1 கப், வெல்லம் - 2 1/2 கப், கொப்பரைத்துருவல் - 1 கப், வறுத்த வெள்ளை எள், கசகசா - தலா 1 டேபிள் ஸ்பூன், பொடி செய்த கிராம்பு, ஜாதிக்காய் - தலா 1 டீஸ்பூன், உருக்கிய நெய் - 1 டேபிள் ஸ்பூன், குக்கீ அச்சுகள் - தேவைக்கேற்ப.
செய்முறை:
சுத்தம் செய்த புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து நீரை வடிகட்டி துணியில் உலர்த்தவும். சற்று ஈரம் காய்ந்ததும் கனமான வாணலியில் அரிசியைப் போட்டு பொன் நிறமாத பொரித்தெடுக்கவும். பாசிப்பருப்பையும் பொன்வறுவலாக வறுக்கவும், வறுத்த அரிசி, பருப்பை மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும்.
இதில் கொப்பரைத் துருவல், வறுத்த எள், கசகசா மற்றும் பொடித்த ஜாதிக்காய் கிராம்புத்தூள் எல்லாம் கலக்கவும். குக்கீ அச்சுகளின் உள்புறம் நெய் தடவி வைக்கவும். வெல்லத்தை ஒரு கப் நீர் விட்டு வெல்லக் கரைசல் வைத்துக் கசடை வடிகட்டி, அடி கனமான வாணலியில் விட்டு பாகு காய்ச்சவும். (பாகை நீரில் போட்டால் நன்றாக உருட்ட வர வேண்டும்)
பாகை கலந்து வைத்துள்ள பொடியில் விட்டு நன்றாகக் கிளறவும். கை பொறுக்கம் சூட்டில் இந்தக் கலவையை குக்கீ அச்சுகளில் வைத்து எடுக்கவும்.
- ஜெயலட்சுமி கணேசன், மும்பை


முந்திரி தவலை வடை
தேவையான பொருள்கள்:
புழுங்கலரிசி - 1 கப், துவரம் பருப்பு - 1/2 கப், கடலைப்பருப்பு - 1/4 கப், உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு, பொடித்த முந்திரிப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன், தேங்காய் (சிறு துண்டுகளாக நறுக்கியது) - 1 டேபிள் ஸ்பூன், சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசியை இரண்டு மணி நேரமும், பருப்பு வகைகளை ஒரு மணி நேரமும் ஊற வைக்கவும். அரிசி, பருப்பு வகைகள், சிவப்பு மிளகாய், தேங்காய்த் துரவல், பெருங்காயம், உப்பு போட்டு அரைக்கவும். (மாவு கெட்டியாகவோ அல்லது நீர்க்கவோ இருக்கக்கூடாது) அரைத்த மாவில் சிறு துண்டுகளாக நறுக்கிய தேங்காய், முந்திரிப் பொடி, கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் காய்ந்தவுடன் சின்னக் குழிவு கரண்டியால், மாவை எடுத்து எண்ணெயில் ஒரே இடத்தில் ஊற்றவும். மாவுதானே பரந்து அழகாகக் கிண்ணம் போல் வரும். இரண்டு பக்கமும் நன்றாக வேகவிட்டு தேங்காய்ச் சட்னியுடன் சூடாக பரிமாறவும்.
- சீதாலட்சுமி, தானே.


பெசரட்டு


தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி - 1/2 கப், பாசிப்பருப்பு - 1 கப், இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 2, சீரகம் - 1 டீஸ்பூன், பீர்க்கங்காய் தோல் - 1/2 கப், பனீர் துருவல் - 1/4 கப், கேரட் துருவல் - 1/4 கப், கறிவேப்பிலை, கொத்துமல்லி தழை - தலா 1 கட்டு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
புழுங்கல் அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, சீரகம் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். அத்துடன் மைய அரைத்த பீர்க்கங்காய் தோலைச் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து தோசைக்கல்லில் அடையாக ஊற்றவும். அடை நன்றாக வெந்ததும் துருவிய பனீர், கேரட், கொத்துமல்லி தழை தூவி அடையை இரண்டாக மடித்துப் பரிமாறலாம். பீர்க்கங்காய் தோலின் சத்து, வீணாகாமல் கிடைக்கும். தக்காளிச் சாறுடன் பரிமாற அருமையாக இருக்கும்.
- பி.காந்தா, ஹைதராபாத்.



Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]