Saturday, August 21, 2010
கேழ்வரகு தோசை
கேழ்வரகு தோசை
தேவையானவை: கேழ்வரகு - கால் கிலோ, உளுத்தம்பருப்பு - கைப்பிடியளவு, பச்சரிசி - கால் கப், முருங்கைக் கீரை - கைப்பிடியளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கேழ்வரகு, உளுத்தம்பருப்பு, பச்சரிசி ஒவ்வொன்றையும் தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊறவிடவும். பிறகு, தனித்தனியாக நன்றாக அரைத்துக் கொள்ளவும். மாவை ஐந்து மணி நேரம் புளிக்க விடவும். பிறகு, அவற்றை ஒன்றாக சேர்த்து உப்பு, முருங்கைக் கீரை சேர்த்து, நன்கு கலக்கவும். தோசைக் கல்லை சூடாக்கி, எண்ணெய் தேய்த்து, கனமான தோசையாக வார்க்கவும். இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்தவுடன் எடுத்துப் பரிமாறலாம்.
காரக்குழம்புடன் சாப்பிட, சுவை அபாரமாக இருக்கும்!
பருப்பு தோசை (இனிப்பு)
பருப்பு தோசை (இனிப்பு)
தேவையானவை: பாசிப் பருப்பு அல்லது பச்சைப் பயறு - ஒரு கப் பச்சரிசி - கால் கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், வெல்லம் (அ) பனை வெல்லம் - ஒன்றேகால் கப், ஏலக்காய் - 2, நெய் (அ) எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பருப்பு, அரிசியை தனித் தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, தனித்தனியாக கரகரவென கெட்டியாக அரைத்து, ஒன்றாகக் கலந்து கொள்ளவும். வெல் லம் அல்லது பனை வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டி... மாவுடன் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். பொடித்த ஏலக்காய், தேங்காய் துருவல் போட்டு நன்கு கலக்கவும். சூடான தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, ஒரு கரண்டி மாவு விட்டு, தோசையாக வார்க்கவும். இருபுறமும் நெய் (அ) எண்ணெய் விட்டு, வெந்தவுடன் எடுத்து சூடாகப் பரிமாறவும். விருப்பப்பட்டால், வறுத்த வேர்க்கடலையை ஒன்றிரண்டாக பொடித்து தோசையை எடுக்கும் சமயத்தில் தூவிப் பரிமாறலாம்.
கோதுமை தோசை
கோதுமை தோசை
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது), கறிவேப்பிலை பொடி, புதினா பொடி - தலா அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர, எல்லா பொருட்களையும் போட்டு, தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து, சிறிது நேரம் வைத்திருக்கவும். தோசைக் கல்லை சூடாக்கி, ஒரு கரண்டி மாவு எடுத்து சிறிது கனமாக இட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு, வெந்தவுடன் எடுக்கவும்.
தக்காளித் தொக்குடன், சுடச்சுட சாப்பிட சுவையாக இருக்கும்.
மிக்ஸட் தோசை
மிக்ஸட் தோசை
தேவையானவை: துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு (கலந்தது) - ஒரு கப், பச்சரிசி - ஒன்றரை கப், புழுங்கலரிசி - ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
தாளிக்க: பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 4, சீரகம் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: அரிசி, பருப்பை தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைத்து கரகரப்பாக அரைக்கவும். கடைசியாக உப்பு, தேங்காய் துருவல் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி.. சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து மீண்டும் வதக்கி, மாவில் கொட்டவும். மாவை, தோசைக் கல்லில் மெல்லியதாக விட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு, பரிமாறவும்.
அவியல், இதற்கு சூப்பரான சைட் டிஷ்!
தோசை முறுகலாக வருவதற்கு... முதலில் அரிசியைப் போட்டு, பாதி அரைத்தவுடன் ஊற வைத்த பருப்புகளைப் போட்டு அரைக்கவும். இந்த மாவை புளிக்க வைக்காமல் உடனே செய்ய வேண்டும். மாவானது, இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
ரவா தோசை
ரவா தோசை
தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், அரிசி மாவு - கால் கப், வறுத்த ரவை - இரண்டரை கப், பச்சை மிளகாய் - 3, இஞ்சி - சிறிய துண்டு, சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சை மிளகாய், இஞ்சி இரண்டையும் நசுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, ரவை, சீரகம், உப்பு, நசுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர் விட்டுக் கட்டியில்லாமல் கரைக்கவும். தோசைக் கல்லை சூடாக்கி, எண்ணெய் விட்டு, கல்லின் ஓரத்தில் இருந்து உள்பக்கம் வரும் வகையில் மாவை விட வேண்டும். இருபக்கமும் எண்ணெய் விட்டு, முறுகலாக வெந்ததும் எடுக்கவும். இதனை திருப்பிப் போடத் தேவையில்லை. இதற்குத் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.
Subscribe to Posts [Atom]