Sunday, November 7, 2010

 

முளைக்கொள்ளு குழம்பு!

முளைக்கொள்ளு குழம்பு!
தேவையானவை: கொள்ளு - கால் படி, கொத்தமல்லி - 150 கிராம், மிளகாய் வற்றல் - 5 அல்லது 6, சீரகம் - ஒரு டீ ஸ்பூன், பூண்டு - 4 அல்லது 5 பல், சின்ன வெங்காயம் - 200 கிராம், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய்ப்பால் - ஒரு கப்.
செய்முறை: தண்ணீரில் 'கொள்ளை' நன்றாக அலசி, ஒரு துணியில் சிறிய மூட்டையாக கட்டி வைத்துவிடவும். இரண்டு நாட்களில் நன்றாக முளைவிட்டிருக்கும். அதை வேக வைக்கவும். கொத்தமல்லி, மிளகாய் வற்றல், சீரகம், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு ஆகியவற்றை லேசாக எண்ணெய் விட்டு வறுத்து, அதனுடன் வேக வைத்திருக்கும் கொள்ளில் சிறிதளவு சேர்த்து, மசாலாவாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
கடுகு, கறிவேப்பிலை, சோம்பு, சின்ன வெங்காயம் போட்டுத் தாளித்து, அதனுடன் வேக வைத்த கொள்ளு, அரைத்த மசாலா ஆகியவற்றை ஊற்றிக் கொதிக்க வைக்கவும். அதில் தேங்காய்ப் பாலையும் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்கவும். நன்றாக கொதி வந்த பிறகு இறக்கி, சூடான சாதத்தில் ஊற்றி சத்தாக சாப்பிடலாம். (தேவைப்பட்டால் தேங்காயை சிறிய சிறிய துண்டாக்கி குழம்பில் போட்டுக் கொள்ளலாம்).


 

வண்ண மிட்டாய்

வண்ண மிட்டாய்
தேவையானவை: பொட்டுக்கடலை மாவு, வறுத்து அரைத்த பாசிப்பருப்பு மாவு - தலா ஒரு கப், வேர்க்கடலைப் பொடி - அரை கப், சர்க்கரை - இரண்டரை கப், நெய் - ஒன்றரை கப், முந்திரிப் பருப்பு, உலர்ந்த திராட்சை, கல்கண்டு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், வண்ண மிட்டாய்பொடி - கால் டீஸ்பூன், பேரீச்சம்பழத் துண்டுகள், செர்ரிப்பழத் துண்டுகள் - தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை: கடாயில் சிறிது நெய் விட்டு, காய்ந்ததும் பேரீச்சை, செர்ரி, உலர்ந்த திராட்சை, முந்திரியைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். சர்க்கரையை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பொட்டுக்கடலை மாவு, பாசிப்பருப்பு மாவு, சர்க்கரைத்தூள் போட்டு... நெய்யில் வறுத்த பேரீச்சை, செர்ரி, உலர்ந்த திராட்சை, முந்திரி, கல்கண்டு, வண்ண மிட்டாய்ப்பொடி, வேர்க்கடலைப் பொடி, மீதமுள்ள நெய்யை சேர்க்கவும். சிறிது தண்ணீர் விட்டு ஒரு கரண்டி காம்பினால் இந்த கலவையை நன்றாகக் கிளறி, விரும்பிய அளவில் உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். இது மிட்டாய் - பழச்சுவையுடன் அற்புதமாக இருக்கும்.


 

கட்டா மிட்டா உசிலி

கட்டா மிட்டா உசிலி
தேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப், நெய் - 2 டீஸ்பூன், சர்க்கரை - கால் கப், முளைக்கீரை - 2 சிறிய கட்டு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி, வதக்கி வைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து கரகரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த பருப்பை சேர்த்துக் கிளறவும். தீயை நிதானமாக எரியவிட்டு பருப்பு வேகும்வரை கிளறவும். வெந்ததும் சர்க்கரை சேர்த்து, நெய் விட்டு, ஐந்து நிமிடம் கிளறவும். உதிர் உதிராக வந்ததும், வதக்கி வைத்துள்ள கீரையைச் சேர்த்து வதக்கி... உப்பு, மிளகாய்த்தூள் போட்டு சிறிது நேரம் கிளறி இறக்கவும்.
இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். தோசையின் உள்ளே மசாலாவாக பயன்படுத்தலாம். ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து பூரிக்கு மசாலாவாகவும் செய்யலாம். சத்தும் சுவையும் நிறைந்தது. குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

Tuesday, September 14, 2010

 

கம்பு மாவு கொழுக்கட்டை

தேவையானவை: கம்பு மாவு - ஒரு கப், வெல்லம் - அரை கப், தேங்காய் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் கம்பு மாவை போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். ஆறியதும் உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசிறி... ஆவியில் வேக விட்டு எடுக்கவும். பொடித்த வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி பாகு காய்ச்சவும். பாகு கரைசலில் வறுத்து, வேக வைத்து, ஆற வைத்த கம்பு மாவு, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி உருண்டைகளாக உருட்டவும். உருண்டைகளை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்தக் கொழுக்கட்டை.


 

தினை மாவு கொழுக்கட்டை

தேவையானவை: தினை மாவு - ஒரு கப், கருப்பட்டி - அரை கப், தேங்காய் துண்டுகள் - கால் கப், சுக்குப்பொடி - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் தினை மாவைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசிறி ஆவியில் வேக வைத்து ஆற விடவும். பொடித்த கருப்பட்டியை தண்ணீரில் கரைத்து வடிகட்டி, பாகாகக் காய்ச்சவும். நறுக்கிய தேங்காய் துண்டுகள், சுக்குப்பொடி சேர்த்துக் கலக்கி, ஆற வைத்துள்ள கம்பு மாவில் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டிக் கொள்ளவும். இதேபோல் ஒவ்வொரு உருண்டையாக உருட்டி ஆவியில் வேக விட்டு எடுக்க... தினை மாவு கொழுக்கட்டை ரெடி!


 

கேழ்வரகு மாவு கொழுக்கட்டை


தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், பொடித்த வெல்லம், தேங்காய் துருவல் - தலா அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, கொதிக்க விடவும். கொதித்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து... கேழ்வரகு மாவு, வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகக் கிளறவும். ஆறியவுடன், அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாவை எடுத்து சிறு உருண் டைகளாகப் பிடிக்கவும். இதேபோல் ஒவ்வொரு உருண்டையையும் தயார் செய்து ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.



 

தாளிப்பு கொழுக்கட்டை


தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். பிறகு தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். கொதித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து பச்சரிசி மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி கட்டியில்லாமல் கிளறி, ஆற விடவும். மாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து விருப்பமான வடிவில் உருட்டி, ஆவியில் வேகவிட... தாளிப்பு கொழுக்கட்டைகள் தயார்!
புழுங்கல் அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, அரைத்து இதே போல் செய்யலாம்.


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]