Friday, November 20, 2009

 

ஓட்ஸ் ஸ்பாஞ்ச் தோசை

ஓட்ஸ் ஸ்பாஞ்ச் தோசை

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், அரிசிமாவு - அரை கப், புளித்த மோர் - ஒரு கப், பச்சைமிளகாய் - 3, பெரிய வெங்காயம் - 1, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - - சிறிதளவு.

செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பச்சைமிளகாய், வெங்காயத்தை வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், ஓட்ஸை சேர்த்து இரண்டு நிமிடம் வறுக்கவும். இதனுடன் அரிசிமாவு, புளித்த மோர், உப்பு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும். பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக இட்லிமாவு பதத்தில் கரைத்து, இரண்டு நிமிடம் ஊற வைக்கவும்.

தோசைக்கல்லில் மாவை விட்டு அதிகம் பரத்தாமல் கனமான தோசையாக ஊற்றி மூடவும். இருபுறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும். பஞ்சு போன்று மிருதுவான இந்த தோசையை தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.



 

அவல் ஸ்பெஷல் பொங்கல்

தேவையானவை: அவல் - ஒரு கப், பயத்தம்பருப்பு - அரை கப், வெல்லம் - ஒரு கப், மில்க்மெய்ட் - கால் கப், நெய் - அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், முந்திரி, காய்ந்த திராட்சை, பாதாம் - சிறிதளவு.
செய்முறை:
பயத்தம்பருப்பை லேசாக வறுத்து வேக விடவும். முக்கால் பதம் வெந்ததும் அவலை வெறும் கடாயில் வறுத்து, பயத்தம்பருப்புடன் சேர்க்கவும். இரண்டும் சேர்ந்து கெட்டியாக வந்ததும் வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டி அவல் கலவையில் சேர்க்கவும். நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கெட்டியாக வந்ததும் இறக்கி, மில்க்மெய்டை சேர்த்துக் கிளறி.. பாதாம், முந்திரி, காய்ந்த திராட்சையை வறுத்து சேர்க்கவும். ஏலக்காய்த்தூள் தூவி பரிமாறவும்.


 

ஜவ்வரிசி பிஸ்கெட்

ஜவ்வரிசி பிஸ்கெட்

தேவையானவை: ஜவ்வரிசி மாவு - ஒரு கப், மைதா மாவு - கால் கப், முந்திரிப்பருப்பு - 8, பச்சைமிளகாய் - 4, பூண்டு - 2 பல், சின்ன வெங்காயம் - 5, கறிவேப்பிலை - சிறிதளவு, வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஜவ்வரிசி மாவுடன் மைதா, உப்பு, வெண்ணெய், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும். மிக்ஸியில் முந்திரிப்பருப்பு, பச்சைமிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை ஜவ்வரிசி மாவு கலவையுடன் கலந்து, சிறிது தண்ணீர் தெளித்துப் பிசையவும். அதை சிறிய உருண்டைகளாக உருட்டி, பாலிதீன் கவரின் மேல் வைத்து வட்ட பிஸ்கெட்டுகளாக தட்டி, எண்ணெயில் பொரித் தெடுக்கவும்


 

30 வகை கேரட் ரெசிபிகள்!

கேரட் மில்க் ஷேக்

தேவையானவை: துருவிய கேரட் - ஒரு கப், கெட்டியான பால் - ஒன்றரை கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், குங்குமப்பூ - ஒரு சிட்டிகை.

செய்முறை: கேரட்டை மிக்ஸியில் போட்டு, சர்க்கரை சேர்த்து அரைத் துக் கொள்ளவும். பிறகு பாலை ஊற்றி, மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இதில், குங்குமப்பூவை சேர்த்து (கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ள லாம்) பரிமாறவும்.

தினமும் குடிப்பதாக இருந்தால் குங்குமப்பூ சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.


கேரட் ரைஸ்

தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட் - 2 கப், பாஸ்மதி ரைஸ் - ஒரு கப், பட்டை - ஒரு துண்டு, கிராம்பு - 2, ஏலக்காய் - 1, புதினா - சிறிதளவு, முந்திரி, பாதாம் - தலா 5, காய்ந்த மிளகாய் - 3, நெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், மல்லித்தழை - அலங்கரிக்க, உப்பு - தேவையான அளவு.

செய்முறை :முந்திரி, பாதாமை லேசாக வறுத்துக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காயை வறுக்கவும். கடைசியில் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். வறுத்த மசாலா பொருட்களை மிக்ஸியில் பொடிக்கவும். அதனுடன், முந்திரி, பாதாமையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.

பாஸ்மதி அரிசியை பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும் (அதிக தண்ணீர் சேர்க்க வேண்டாம்). பிறகு குக்கரில் எண்ணெய் ஊற்றி, அதில் புதினாவை போட்டு வதக்கி, பிறகு ஊற வைத்த அரிசியைப் போட்டு லேசாக வறுக்கவும். கேரட்டை மிக்ஸியில் அரைத்து சாறெடுக்கவும். இந்த சாறை வறுத்த அரிசியில் விடவும் (அரிசி மூழ்கும் அளவுக்கு தண்ணீர் இருந்தால் போதும். அதற்கேற்ப சாறெடுக்கவும்).

பிறகு உப்பு சேர்த்து, பொடித்து வைத்துள்ளவற்றை போட்டு நன்றாக கலக்கி, குக்கரை மூடி விடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி, மேலே மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.


கேரட் ஊறுகாய்

தேவையானவை: சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிய கேரட் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 6, வெந்தயம் - கால் டீஸ்பூன், உப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கேரட் துண்டுகளை அரைவேக்காட்டில் வேக வைத்து, நீரை வடித்துக் கொள்ளவும். வெந்தயத்தை வெறும் கடாயில் எண்ணெய் விடாமல் வறுத்து, மஞ்சள்தூள் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். மிளகாயை அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு, வறுத்து பொடித்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வேக வைத்த கேரட் துண்டுகளைப் போட்டு அதில் வெந்தயப்பொடி, வறுத்த மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக குலுக்கி, பிறகு கடுகு தாளித்துக் கொட்டி, எலுமிச்சை சாறை விட்டு கைப்படாமல் கலக்கி வைக்கவும். தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ள ருசியான ஊறு காய் இது!


கேரட் கிரேவி

தேவையானவை: கேரட் துண்டுகள், பொடியாக நறுக்கிய தக்காளி - தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப், புதினா, மல்லித்தழை - சிறிதளவு, பச்சைமிளகாய் - 2, தனியாதூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், பாதாம், முந்திரி - தலா ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு, விருப்பப்பட்டால் - எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: தக்காளி, வெங்காயம், புதினா, மல்லித்தழை, பச்சைமிளகாய், இஞ்சி ஆகியவற்றை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு லேசாக வதக்கி, ஆறியதும் அரைத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, அதில் கேரட் துண்டுகளைப் பொரித்துக் கொள்ளவும். அந்த எண்ணெயிலேயே கடுகு, சீரகம் தாளித்து, அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி கலவையை சேர்க்கவும். நன்றாக கொதித்ததும், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், தனியாதூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, சற்று கொதித்ததும் வறுத்து வைத்துள்ள கேரட் துண்டுகளை சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து நன்றாக கொதித்ததும், பாதாம், முந்திரியை 10 நிமிடம் ஊற வைத்து அரைத்து கடைசியில் சேர்த்து இறக்கி, எலுமிச்சை சாறை விடவும்.

பனீர், மசாலா அயிட்டங்களை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு ஏற்ற வித்தியாசமான டிஷ் இது!


கேரட் - ராகி அடை

தேவையானவை: கேழ்வரகு மாவு, துருவிய கேரட் - தலா ஒரு கப், பொடி யாக நறுக்கிய மல்லித் தழை, பச்சை மிளகாய் - சிறிதளவு, புளித்த தயிர் - அரை கப், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு டீஸ்பூன் எண்ணெயில் பச்சைமிளகாய், மல்லித்தழையை போட்டு வதக்கி, கேரட்டை சேர்க்கவும். கேரட் சிறிது வதங்கியதும், அதில் புளித்த தயிருடன் அரை கப் தண்ணீர் சேர்த்து உப்பு, பெருங்காயத்தூளை போட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் கேழ்வரகு மாவை சிறிது சிறிதாக போட்டுக் கிளறி, வெந்ததும் இறக்கி விடவும். பிறகு சிறு உருண்டைகளாக உருட்டி தோசைக்கல்லில் போட்டு அடைகளாக சுட்டெடுக்கவும். விருப்பப்பட்டால் கிளறும்போது சிறிது தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.


டெல்லி கேரட் அல்வா

தேவையானவை: துருவிய கேரட் - 2 கப், சர்க்கரை - அரை கப், திக்கான பால் - 3 கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், துருவிய பாதாம், முந்திரி, பிஸ்தா - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை: அடி கனமான கடாயில் நெய் ஊற்றி, கேரட் துருவலைப் போட்டு நன்றாக வதக்கவும். மூன்று கப் பாலை ஒரு கப்பாக சுண்டக் காய்ச்சி, வதக்கிய கேரட்டில் விட்டு சர்க்கரை சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கெட்டியானவுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி, துருவிய பாதாம், முந்திரி, பிஸ்தாவை மேலே தூவவும்.


கேரட் சமோசா

தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட் - ஒரு கப், பச்சைபட்டாணி - கால் கப், புதினா, மல்லித்தழை, பச்சைமிளகாய் - சிறிதளவு, ஆம்சூர் பொடி - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பிரெட் துண்டுகள் - 2, கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு, மைதா - முக்கால் கப், கார்ன்ஃப்ளார் - கால் கப், ரவை - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: மைதா, கார்ன்ஃப்ளார், ரவை மூன்றையும் சிறிது உப்பு சேர்த்து கெட்டியாக கலந்து வைத்துக் கொள்ளவும். கேரட், பட்டாணியை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தண்ணீர் விடாமல் குக்கரினுள் வைத்து வேக வைக்கவும். இதனுடன், கரம் மசாலாத்தூள், புதினா, மல்லித்தழை, பச்சைமிளகாய் விழுது, ஆம்சூர் பொடி, மஞ்சள்தூள், பிரெட் துண்டுகள் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். மைதா கலவையை பூரிக்கு இடுவதுபோல் இட்டு, பாதியாக வெட்டி அதன் மேல் மசாலாவை வைத்து முக்கோண வடிவத்தில் மூடி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

இதற்கு கொத்தமல்லி கார சட்னி சூப்பராக இருக்கும்.


கேரட் சப்பாத்தி

தேவையானவை: துருவிய கேரட் - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - கால் கப், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - ஒரு டீஸ்பூன், கோதுமைமாவு - ஒன்றரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட், வெங்காயத்தாள், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து, அதனுடன் கோதுமைமாவு, தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல் கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பிறகு வழக்கம்போல் சப்பாத்தியாக சுட்டெடுக்கவும்.


கேரட் அவியல்

தேவையானவை: துருவிய கேரட் - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - கால் கப், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - ஒரு டீஸ்பூன், கோதுமைமாவு - ஒன்றரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட், வெங்காயத்தாள், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து, அதனுடன் கோதுமைமாவு, தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல் கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பிறகு வழக்கம்போல் சப்பாத்தியாக சுட்டெடுக்கவும்.


கேரட் அப்பம்

தேவையானவை: மைதாமாவு - ஒரு கப், அரிசிமாவு - 2 டீஸ்பூன், வெல்லம் - கால் கப், கேரட் துருவல் - கால் கப், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், முந்திரி துண்டுகள் - ஒரு டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கேரட் துருவலை நெய் விட்டு லேசாக வதக்கி வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்த பிறகு இறக்கி வடிகட்டவும். அதில் மைதா, அரிசிமாவு, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், முந்திரி துண்டுகள், வதக்கிய கேரட் சேர்த்து, இட்லி மாவு பதத்துக்கு கரைத்து, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். எண்ணெயில் போட்டு அப்பமாக சுட்டெடுக்கவும்.

இதை அப்பக்குழியிலும் ஊற்றி செய்யலாம்.


கேரட் கட்லெட்

தேவையானவை: துருவிய கேரட் - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், புதினா, மல்லித் தழை - சிறிதளவு, ரஸ்க் தூள் - கால் கப், மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், கடலைமாவு - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடலைமாவை தோசைமாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி புதினா, மல்லித்தழை, பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கவும். பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கி, துருவிய கேரட்டை சேர்க்கவும். கேரட் வதங்கியதும் உப்பு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் போட்டு வதக்கி, கடைசியாக கரைத்து வைத்துள்ள கடலைமாவை ஊற்றி நன்றாக கிளறவும். மாவு வெந்து ஒட்டாமல் வந்ததும், ரஸ்க் தூளை சேர்த்து இறக்கவும். இந்தக் கலவை கெட்டியாக இருக்கும். விரும்பிய வடிவத்தில் செய்து கட்லெட்டாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும் அல்லது தோசைக்கல்லிலும் சுட்டெடுக்கலாம்.

தக்காளி சாஸ் இதற்கு ஏற்ற காம்பினேஷன்!


டெல்லி கேரட் பாயசம்

தேவையானவை: துருவிய கேரட் - ஒரு கப், பால் - 2 கப், மில்க்மெய்ட் - கால் கப், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், வறுத்த ட்ரை ஃப்ரூட்ஸ் - சிறிதளவு, குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அடிகனமான கடாயில் நெய் விட்டு, துருவிய கேரட்டை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும். பிறகு, பாலை சேர்க்கவும். பால் சிறிது கொதித்ததும் சர்க்கரை, மில்க்மெய்டை சேர்க்கவும். எல்லாம் நன்றாக சேர்ந்து கொதித்ததும், அதில் குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி, வறுத்து வைத்துள்ள ட்ரை ஃப்ரூட்ஸை கலந்து பரிமாறவும்.

சூடாகவோ, ஜில்லென்றோ விருப்பம் போல் சாப்பிடலாம்.


கேரட் பக்கோடா

தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், கடலைமாவு - தலா அரை கப், அரிசிமாவு - ஒரு டேபிள்ஸ்பூன், ரவை - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கேரட், கடலைமாவு, அரிசிமாவு, ரவை, உப்பு, பச்சைமிளகாய். கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து, எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.


கேரட் பொடி

தேவையானவை: பொடி யாக நறுக்கிய கேரட் - அரை கப், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, காய்ந்த மிளகாய் - 5.

செய்முறை: கடாயில் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு கேரட்டை வதக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு அதே கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்துக் கொள்ளவும். மிக்ஸியில் வறுத்த பருப்புகளை போட்டு பொடித்து, பிறகு உப்பு, வதக்கிய கேரட், பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

மிக்ஸியிலிருந்து எடுக்கும்போது கெட்டியாக இருந்தாலும், சற்று நேரத்தில் உதிர்ந்து விடும். சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.


கேரட் கார பொரியல்

தேவையானவை: நறுக்கிய கேரட் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்.

வறுத்து அரைக்க: தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: வறுக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்து சற்று கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்களை போட்டு தாளித்து, நறுக்கிய கேரட்டையும் போடவும். அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கேரட்டை வேக வைக்கவும். தண்ணீர் வற்றி கேரட் வெந்ததும் பொடித்து வைத்துள்ளவை, பெருங் காயத்தூள், உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.

தித்திப்பும், காரமுமாக அபாரமாக இருக்கும் இந்த பொரியல்.


கேரட் உசிலி

தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட் - ஒரு கப், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா கால் கப், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவை யான அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: கேரட்டை சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, மிளகாய் மூன்றையும் அரை மணி நேரம் ஊற வைத்து, உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த பருப்பு விழுதை சேர்த்து குறைந்த தீயில் கிளறவும். பருப்புக் கலவை வெந்து உதிரியாக ஆனவுடன், அதில் வேக வைத்த கேரட்டை சேர்த்து வதக்கி, இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.

வத்தக்குழம்பு சாதத்துக்கு ஏற்ற சைடிஷ்!

கேரட் கார குழம்பு

தேவையானவை: சற்று நீளமான, பெரிய துண்டுகளாக நறுக்கிய கேரட் - அரை கப், புளி - எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

வறுத்து அரைக்க: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், வெந்தயம், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6.

தாளிக்க: கடுகு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கும் பொருட்களை போட்டு தாளித்து, அதில் கேரட் துண்டுகளை சேர்த்து வதக்கவும். புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். சிறிது மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை வறுத்து, தேங்காய் துருவலை சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். கேரட் வெந்த பிறகு, அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.


கேரட் கார அடை

தேவையானவை: பச்சைபயறு - ஒரு கப், துருவிய கேரட் - அரை கப், பச்சைமிளகாய் - 5, பச்சரிசி - கால் கப், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: அரிசி, பயறு இரண்டையும் மூன்று முதல் நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு உப்பு, தேங்காய் துருவல், பச்சைமிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதனுடன் துருவிய கேரட், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து கார அடைகளாக சுட்டெடுக்கவும்.

சுட சுட சாப்பிட சூப்பராக இருக்கும்.


கேரட் கோலா

தேவையானவை: துருவிய கேரட், பொட்டுக்கடலை - தலா ஒரு கப், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கேரட், வெங்காயத்தை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும். விருப்பப்பட்டால் 2 பல் பூண்டையும் சேர்த்துக் கொள்ளலாம். பொட்டுக்கடலை மாவு, அரைத்த கேரட் விழுது, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கெட்டியாக கலந்து உருண்டைகளாக செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.


கேரட் சூப்

தேவையானவை: துருவிய கேரட் - 2 கப், நறுக்கிய தக்காளி - கால் கப், வெண் ணெய் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை - தலா ஒரு டீஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - தலா கால் டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: கேரட், தக்காளியை இரண்டு கப் தண்ணீரில் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் கொதிக்க விடவும். ஆறியதும், மிக்ஸியில் போட்டு அரைத்து வடி கட்டிக் கொள்ளவும். கடாயில் வெண்ணெயை போட்டு, அதில் வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதங்கியதும், கேரட் சாறை விட்டு உப்பு சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து நன்றாக கொதித்ததும், கார்ன்ஃப்ளாரை சிறிது தண்ணீரில் கரைத்து விடவும் (சூப் கெட்டியாக இருப்பதற்காக கார்ன்ஃப்ளாரை பயன்படுத்துகிறோம். தேவைப்பட்டால் பிரெட் துண்டுகளை பொரித்துப் போடலாம்.). பிறகு மல்லித்தழை, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.


கேரட் சிப்ஸ்

தேவையானவை: மெல்லிய வட்டங்களாக நறுக்கிய கேரட் - ஒரு கப், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, அரிசிமாவு - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: நறுக்கிய கேரட்டை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து பத்து நிமிடம் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், கேரட்டை எண்ணெயில் போடுவதற்கு முன் அரிசிமாவில் புரட்டி எடுத்து, பின் பொரித்தெடுக்கவும்.

ஒவ்வொரு முறையும் அரிசிமாவில் புரட்டி பொரிக்க வேண்டும். மொத்தமாக போட்டால் ஒட்டிக் கொள்ளவும்.


கேரட் ரோல்

தேவையானவை: மைதாமாவு - ஒரு கப், கார்ன்ஃப்ளார் - கால் கப், துருவிய கேரட் - முக்கால் கப், துருவிய வெங்காயம் - கால் கப், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - கால் டீஸ்பூன், அஜினமோட்டோ - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மைதாமாவு, கார்ஃன்ப்ளாருடன் சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாக கலந்து கொள்ளவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கேரட், வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து, அஜினமோட்டோவும் சேர்த்து லேசாக வதக்கி இறக்கவும். மைதாமாவை உருட்டி நீளவாக்கில் இட்டு, அதில் கேரட் கலவையை வைத்து இருபுறமும் லேசாக மூடவும். பிறகு விரல் நீளத்துக்கு உருட்டி ரோல் போல் செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். விருப்பப்பட்டால் சிறிது மல்லித்தழை சேர்த்துக் கொள்ளலாம்.


கேரட் பணியாரம்

தேவையானவை: பச்சரிசி, புழுங்கலரிசி - தலா அரை கப், ஜவ்வரிசி - 2 டீஸ்பூன், துருவிய கேரட் - அரை கப், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - ஒரு டீஸ்பூன், மல்லித்தழை - சிறிது, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புழுங்கலரிசி, பச்சரிசி, ஜவ்வரிசி மூன்றையும் ஒன்றாக கலந்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும், உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும். அதனுடன், கேரட், தேங்காய் துருவல், பச்சைமிளகாய், மல்லித்தழை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து பணியார குழியில் பணியாரங்களாக சுட்டெடுக்கவும்.


கேரட் கோசம்பரி

தேவையானவை: துருவிய கேரட் - ஒரு கப், பயத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல், பச்சைமிளகாய் - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - சிறிது, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட், பயத்தம்பருப்பு, உப்பு, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், மல்லித்தழை, பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து எலுமிச்சை சாறு கலந்து அரை மணி நேரம் ஊற விட்டு பரிமாறவும் (பருப்பும் நன்றாக ஊறிவிடும்). தேவைப்பட்டால் மாங்காயை பொடி யாக நறுக்கிப் போடலாம்.


கேரட் மோர்குழம்பு

தேவையானவை: நீளத் துண்டுகளாக நறுக்கிய கேரட் - அரை கப், துவரம்பருப்பு, கடலைப் பருப்பு, தனியா - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு, இஞ்சி - சிறிய துண்டு, பச்சைமிளகாய் - 5, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், தயிர் - ஒரு கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, தனியா ஆகியவற்றை கால் மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு பச்சைமிளகாய், இஞ்சியை போட்டு ஒரு நிமிடம் வதக்கி, பிறகு அதில் ஊற வைத்த பருப்புக் கலவையை சேர்த்து மீண்டும் ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். அதனுடன், தேங்காய் துருவல், சீரகம், மல்லித்தழை சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். கேரட்டை வேக வைத்து அதில் அரைத்த விழுது, உப்பு சேர்த்து குறைந்த தீயில் கிளறவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கேரட் கலவையில் சேர்க்கவும். தயிரை மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கடைந்து, கொதிக்கும் கேரட் கலவையுடன் சேர்த்துக் கலக்கி பரிமாறவும்.


கேரட் கடலை கூட்டு

தேவையானவை: நறுக்கிய கேரட் துண்டுகள் - அரை கப், கொண்டைக் கடலை, துவரம்பருப்பு - தலா கால் கப், புளி - எலுமிச்சை அளவு, சாம்பார் பொடி - ஒன்றரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து உப்பு சேர்த்து கேரட்டையும் போட்டு வேக விடவும். கடலையை வேக வைத்து, கேரட்டுடன் சேர்க்கவும். கொதித்ததும் அதில் பெருங்காயத்தூள், சாம்பார் பொடி சேர்க்கவும். துவரம்பருப்பை நன்றாக குழைய மசித்து கேரட் கலவையுடன் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கொதித்ததும் இறக்கி, கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.


கேரட் துவையல்

தேவையானவை: துண்டுகளாக நறுக்கிய கேரட் - ஒரு கப், வேர்க்கடலை - கால் கப், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வேர்க்கடலையை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும். கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்துக் கொள்ளவும். கால் டீஸ்பூன் எண்ணெயில் கேரட்டை வதக்கி வைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாய் ஆகியவற்றை முதலில் பொடித்து, பிறகு வேர்க்கடலையை சேர்த்துப் பொடிக்கவும். கடைசியாக பெருங்காயத்தூள், வதக்கிய கேரட் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியான பதத்தில் துவையலாக அரைத்தெடுக்கவும்.

இதை இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.


கேரட் கத்திலி

தேவையானவை: முந்திரி துண்டுகள் - ஒரு கப், துருவிய கேரட், சர்க்கரை - தலா அரை கப், நெய் - 2 டீஸ்பூன், கேசரி கலர் - சிறிதளவு.

செய்முறை: முந்திரி மூழ்கும் அளவுக்கு தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் கேரட் துருவலுடன் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் சர்க்கரையைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி கரைந்ததும் அடுப்பில் வைத்து, அரைத்து வைத்துள்ள முந்திரி - கேரட் விழுதை சேர்க்கவும். இரண்டும் சேர்ந்து கெட்டியாக வரும் பதத்தில் நெய் சேர்த்து குறைந்த தீயில் கிளறி இறக்கவும். பிறகு கலர் சேர்த்து விரும்பிய வடிவில் செய்து கொள்ளலாம்.


கேரட் கார ஜூஸ்

தேவையானவை: துருவிய கேரட் - ஒரு கப், கெட்டியான மோர் - கால் கப், பச்சைமிளகாய் - 1, பொடியாக நறுக்கிய மல்லித்தழை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், சீரகத்தூள் - கால் டீஸ்பூன். உப்பு- தேவையான அளவு.

செய்முறை: கேரட்டை அரை கப் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து சாறெடுக்கவும். மோரை கடைந்து கொள்ளவும். இரண்டையும் சேர்த்து, அதில் சீரகத்தூள், பெருங்காயத்தூள், உப்பு, பொடியாக நறுக்கிய மல்லித்தழை போட்டு, பச்சைமிளகாயை அரைத்து கலந்து பருகவும்.


கேரட் ஜாம்

தேவையானவை: துருவிய கேரட் - ஒரு கப், சர்க்கரை - அரை கப், தேன் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: கேரட்டை குக்கரில் வேக வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பிறகு சர்க்கரையுடன் சேர்த்து குறைந்த தீயில் வைத்து கடாயில் போட்டுக் கிளறவும். இரண்டும் சேர்ந்து ஜாம் பக்குவத்தில் வந்ததும் இறக்கி, ஆறியதும் தேன் சேர்த்துக் கிளறவும்.



 

ஃபாஸ்ட்ஃபுட் மேளா!

ஃபாஸ்ட்ஃபுட் மேளா!

பட்டாணி டோக்ளா

தேவையானவை: பச்சைப் பட்டாணி, கடலை மாவு - தலா ஒரு கப், இஞ்சி - சிறு துண்டு, பச்சைமிளகாய் - 2, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், ஃப்ரூட் சால்ட் - ஒரு டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், வெள்ளை எள்- ஒரு டீஸ்பூன், சர்க்கரை - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், தண்ணீர் - அரை கப், தேங்காய் துருவல், கொத்தமல்லி - சிறிதளவு.

செய்முறை: பட்டாணியுடன் பச்சைமிளகாய், இஞ்சி, எலுமிச்சைச் சாறு, உப்பு, ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதை கடலைமாவுடன் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். ஃப்ரூட் சால்ட்டில் 2 டீஸ்பூன் தண்ணீர் விட்டு, சிறிது பொங்கியதும் கரைத்து வைத்துள்ள மாவுக் கலவையில் கலந்து கொள்ளவும். ஒரு தட்டில் எண்ணெய் தடவி, அதில் மாவுக் கலவையைக் கொட்டி ஆவியில் வேக வைத்து, ஆறியதும் துண்டுகள் போடவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, எள்ளைத் தாளித்து பெருங்காயத் தூள் சேர்த்து, அதனுடன் அரை கப் தண்ணீர், மீதி சர்க்கரை சேர்த்து நன்றாகக் கொதித்ததும் வெட்டி வைத்துள்ள டோக்ளாக்களின் மேல் பரவினாற்போல் விட்டு, தேங்காய் துருவல், பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

ஸ்வீட் சேமியா பிரெட்

தேவையானவை:ஸ்வீட் பிரெட் - 6 ஸ்லைஸ், வெண்ணெய் (அ) நெய் - சிறிதளவு, கார்ன்ஃப்ளார் - சிறிதளவு.

இனிப்பு சேமியா செய்வதற்கு: சேமியா - அரை கப், சர்க்கரை - முக்கால் கப், மெல்லியதாக நறுக்கிய முந்திரி, பாதாம் - ஒரு டேபிள்ஸ்பூன், பால் கோவா (இனிப்பு சேர்த்தது) - 50 கிராம், மஞ்சள் கலர் - ஒரு சிட்டிகை, நெய் - கால் கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை: பாதியளவு நெய்யை காயவைத்து அதில் முந்திரி, பாதாமை வறுத்துக் கொள்ளவும். மீதமுள்ள நெய்யில் சேமியாவை வறுத்துக் கொள்ளவும். ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் வறுத்த சேமியாவை சேர்க்கவும். தீயைக் குறைத்து மூடி போட்டு நன்றாக வேகவிடவும். சேமியா வெந்ததும் சர்க்கரை, மஞ்சள் கலர் சேர்த்துக் கிளறவும். முதலில் சற்று நீர்த்து பிறகு சேர்ந்து கொள்ளும். அப்போது, உதிர்த்த கோவா, வறுத்த முந்திரி, பாதாம், ஏலக்காய்த்தூள், மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.

இந்தக் கலவையை ஒரு பிரெட் துண்டின் மேல் பரவினாற்போல் வைக்கவும். கார்ன்ஃப்ளாரை சற்று நீர்க்க கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லை காயவைத்து, அதில் சேமியா கலவை தடவிய பிரெட்டைப் போட்டு அதன் மேல் கார்ன்ஃப்ளார் கலவையை பரவினாற்போல் விடவும். இந்தப் பகுதி தோசைக்கல்லின் மேல் படுமாறு வைக்கவும். சுற்றிலும் சிறிதளவு நெய்யை விட்டு, பிறகு 5 நிமிடம் கழித்து மறுபுறம் திருப்பிப் போட்டு, தீயை நன்கு குறைத்து சற்று மொறுமொறுப்பானதும் எடுத்துப் பரிமாறவும்.



 

மலாய் பிரெட் டோஸ்ட்

தேவையானவை: ரொட்டித் துண்டுகள் - 8, பால் - 3 கப் (சுண்டக் காய்ச்சவும்), கோவா - முக்கால் கப், சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், உடைத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்.

செய்முறை: ரொட்டித் துண்டுகளை முக்கோண வடிவில் வெட்டி இருபுறமும் நெய் தடவி டோஸ்ட் செய்யவும். ஒரு பாத்திரத்தில் கோவாவுடன் சர்க்கரை சேர்த்து, நன்றாக சுண்டும் வரை கிளறவும். டோஸ்ட் செய்த ரொட்டித் துண்டுகளை அதில் மெதுவாகப் போட்டு 5 நிமிடங்கள் வேக விடவும். பிறகு ஏலக்காய்த்தூளைப் போடவும்.

ரொட்டித் துண்டுகளை மெதுவாக பாத்திரத்தில் இருந்து எடுத்து ஒரு தட்டில் பரப்பவும். சுண்டக் காய்ச்சிய பாலை துண்டுகளின் மேல் விட்டு முந்திரிப்பருப்பை தூவி பரிமாறவும்.

 

சைனீஸ் ஃபிரைட்ரைஸ்

தேவையான பொருட்கள்

  • பாசுமதிஅரிசி(ஊறவைத்தது) -2 கப்
  • கரட்(நறுக்கியது)- 200 கிராம்
  • பீன்ஸ்(நறுக்கியது)- 200 கிராம்
  • கறிமிளகாய்(குடமிளகாய்)(நறுக்கியது)- 200 கிராம்
  • பச்சைமிளகாய்(கீறியது) - 8
  • சோயா சோஸ் - 2 மேசைக்கரண்டி
  • லீக்ஸ் - 1 பிடி
  • செலரி - 1 பிடி
  • பட்டர் - தேவையானளவு
  • எண்ணைய் - தேவையானளவு
  • உப்பு - தேவையானளவு
  • 200கிராம்
  • வெங்காயம்(நறுக்கியது) - 1கப்

செய்முறை

  • பாசுமதி அரிசியை கழுவி துப்பிரவு செய்யவும்.
  • பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை)வைத்து சூடாக்கியபின்பு அதில் பட்டர்,கழுவி துப்பிரவுசெய்த பாசுமதிஅரிசி ஆகியவற்றை போட்டு வறுக்கவும்.
  • அதன் பின்பு அடுப்பிலிருந்து தாட்சியை இறக்கி வறுத்தஅரிசியை வேறு ஒருபாத்திரத்தில் போடவும்.
  • பின்பு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து அதில் முக்கால் பகுதி தண்ணீர் விட்டு அதனை கொதிக்க விடவும்.
  • அடுப்பிலுள்ள தண்ணீர் கொதித்ததும் அதில் கழுவி வறுத்த அரிசியை போட்டு அவியவிடவும்.
  • அரிசி அவிந்து சோறு(சாதம்) ஆகியதும் அதிலுள்ள கஞ்சியை வடித்து விட்டு அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு பாத்திரத்தில் போட்டு ஆற வைக்கவும்.
  • அதன் பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கிய பின்பு அதில் எண்ணைய் விட்டு சூடாக்கி அதில் வெங்காயம்,பச்சைமிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  • பொன்னிறமாகவதக்கிய பின்பு அதில் நறுக்கிய பீன்ஸ் போட்டு வதக்கவும்.
  • பீன்ஸ்வதக்கிய பின்பு அதில் நறுக்கிய கரட் போட்டு வதக்கவும்.
  • கரட் வதக்கியதில் நறுக்கியகறிமிளகாய்(குடமிளகாய்)போட்டு வதக்கவும்.
  • கறிமிளகாய்(குடமிளகாய்) வதக்கிய பின்பு அதில் சோயாசோஸ்,லீக்ஸ்,செலரி,உப்பு ஆகியவற்றையும் போட்டு பாத்திரத்தை டைட்டாக மூடி மெல்லிய நெருப்பில்(தீயில்) வேகவிடவும் .
  • வெந்த பின்பு இதனுடன் சோற்றை(சாதத்தை) போட்டு நன்றாககலந்தால் தாளிப்போ அல்லது கரம்மசாலாவோ இல்லாத சைனீஸ்ஃபிரட் ரைஸ் தயாராகிவிடும்.
  • பின்பு ஒரு தட்டில் சைனீஸ் ஃபிரட் ரைஸை வைத்து இதனுடன் கருவப்பிலைதுவையல் அல்லது இஞ்சித் துவையல் அல்லது வேறு ஏதாவது துவையலுடன் பரிமாறவும்.

குறிப்பு:

எச்சரிக்கை - இருதய நோயாளர்,வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.


 

மசாலா லஸ்சி

தேவையான பொருட்கள்

  • புளித்த தயிர் - 2 கப்
  • பால் - 1 கப்
  • சீரகம் - 1/2 டீஸ் ஸ்பூன் (ஒன்றிரண்டாக பொடிசெய்துக்கொள்ளவும்)
  • பெருங்காயத்தூள் - 1 சிடிகை
  • நல்லமிளகுத்தூள் - 1/4 டீஸ் ஸ்பூன்
  • கொத்தமல்லித்தழை - 1டேபிள் ஸ்பூன் (பொடிப்பொடியாக நறுக்கியது)
  • உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

  • மிக்ஸியில் தயிர், பால், சீரகம் ,பெருங்காயத்தூள், நல்லமிளகுத்தூள், உப்பு இவற்றை எல்லாம் சேர்த்து ஒருமுறை கிரைண்ட் பண்ணவும்.
  • பரிமாறும் முன்பு கொத்தமல்லித்தழையை தூவவும்
இந்த லஸ்சி ராஜஸ்தானில் அன்றாடம் வீடுகளில் சாப்பிட்ட பின் பருகுவார்கள். இந்த லஸ்சி எளிதில் ஜீரணத்திற்கும், உடல் குளுமையாகவும் ஆக்கும்

 

மரவள்ளிக் கிழங்கு அடை

தேவையான பொருட்கள்

  • மரவள்ளிக் கிழங்குத் துருவல் - 4 கப்
  • புழுங்கரிசி - ஒரு கப்
  • பச்சரிசி - ஒரு கப்
  • மிளகாய் வற்றல் - 12
  • சோம்பு - ஒரு ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • அரிசி வகைகளை போதுமான தண்ணீரில் சுமார் 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பிறகு நீரை இறுத்து மரவள்ளித் துருவல், மிளகாய் வற்றல், சோம்பு, உப்புடன் நன்கு அரைக்கவும்.
  • அரைத்த மாவினை சுமார் 4 மணி நேரம் வைத்திருந்து பிறகு அடையாக சுடவும்.
  • தேங்காய் சட்னி அல்லது அவியலுடன் சாப்பிட மிகவும் சுவையாய் இருக்கும்.


Thursday, November 19, 2009

 

TIPS

"தினமும் பண்ற சமையல்தான்... ஆனா, என்னிக்கும் ஒரே சுவை வரமாட்டேங்குதே... சில நாள் உப்பு, சில நாள் காரம், புளிப்பு, தண்ணீர்னு ஏதாவது ஒண்ணு கூடிப் போகுதே’’னு உங்க 'அடுக்களை மனசு' அடிக்கடி சோர்ந்து போகுதா?

கவலையை விடுங்க... கைகொடுக்க நாங்களாச்சு... உப்பு, புளிப்பு, காரம்னு எது உங்க சமையல்ல தப்பு தாளம் போட்டாலும், உங்க சாமார்த்தியத்தால அதையெல்லாம் ஸ்ருதி சுத்தமா தாளம் போட வெச்சுட முடியும்.

உப்பு அதிகமாகிவிட்டதா?

குழம்பு, சாம்பார், கூட்டு, கிரேவி போன்ற திரவ வடிவ பதார்த்தங்களில் உப்பு அதிகமாக இருந்தால்... வெங்காயம், கசகசா, புளிப்பில்லாத தக்காளி, துருவிய தேங்காய், பயத்தம்பருப்பு, முந்திரிப் பருப்பு முதயவற்றில் ஏதாவது ஒன்றிரண்டை லேசாக எண்ணெயில் வறுத்து (அல்லது) வதக்கி, மிக்ஸியில் அரைத்து சேருங்கள். மீண்டும் ஒருமுறை கொதிக்க விடுங்கள். உப்பு தேவையான அளவுக்கு மாறிவிடும். மேலே சொன்ன பொருட்களில் எது, நீங்கள் தயாரித்திருக்கும் உணவுக்கு பொருத்தமாக இருக்கும் என்று பார்த்துச் சேர்ப்பது முக்கியம்.


ரசத்தில் உப்பு அதிகமாக இருந்தால்... ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு ரசத்தைக் கொதிக்க விட்டு, மிளகு, சீரகத்தூள் போட்டு, அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து விடுங்கள்.பொட்டுக்கடலை மாவு, அல்லது சோள மாவு இருந்தாலும் அவற்றைப் பால் கரைத்து குழம்பில் சேர்த்தும் உப்பின் ருசியை சரி செய்யலாம்.

எலுமிச்சம்பழ அளவு சாதத்தை உருட்டி... சுத்தமான வெள்ளைத் துணியில் கட்டி உப்பு கூடின குழம்பில் போட்டு விடுங்கள். உப்பின் அளவுக்கு ஏற்ப இரண்டு மூன்று உருண்டைகள் கூடப் போடலாம். அரை மணி நேரம் கழித்து வெளியில் எடுத்து விட்டால் உப்பு சரியாக இருக்கும் (வேக வைத்த உருளைக்கிழங்குத் துண்டுகளையும் போடலாம்).

அரைத்து வைத்துள்ள இட்-தோசை மாவில் உப்பு அதிகமானால், ஒரு கரண்டி ரவையை வெறும் வாணயில் வறுத்து, ஐந்து நிமிடங்கள் பால் ஊற வைத்து, மாவுடன் சேர்த்து விடுங்கள்.

இரண்டு கரண்டி அரிசி, அரைக் கரண்டி உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸியில் மைய அரைத்து தோசை மாவில் சேர்த்து விட்டால் உப்பு சரியாகிவிடும்.

பொரியல் வகைகளில் உப்பு அதிகமானால், தேங்காயைத் துருவிச் சேர்க்கலாம்.

ஒரு கரண்டி பயத்தம் பருப்பை வெந்நீரில் கால் மணி நேரம் ஊற வைத்து, அதைப் பொரியல் கலந்து விடலாம்.

நான்கில் ஒரு பாகம் பொரியலை (பீன்ஸ், கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், அவரை, உருளைக்கிழங்கு போன்றவை) எடுத்து வடிகட்டியில் போட்டு, சுத்தமான தண்ணீரை ஊற்றிக் கழுவி விட்டால் உப்பு சுவை போய் விடும். இதை மீதமுள்ள முக்கால் பாகப் பொரியல் கலந்து ஒரு புரட்டு புரட்டி விட்டால் போதும்... உப்பு சுவை சரியான அளவுக்கு வந்துவிடும்.

கத்தரிக்காய், கோவைக்காய், வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட் போன்றவற்றுடன் வெங்காயம் நன்கு சேரும். எனவே, இந்த வகைப் பொரியல்களில் உப்பு அதிகமானால், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை எண்ணெயில் வதக்கிச் சேர்த்து விடலாம்.

பொடி வகைகளில் உப்பு அதிகமாகிவிட்டால், அதிலுள்ள பருப்பு எதுவோ அதைக் கொஞ்சம் வாணயில் வறுத்து, தனியாகப் பொடி செய்து நன்கு கலந்து விடவும்.

பருப்பு சேர்க்காத பொடி என்றால் (தனியாப்பொடி, கறிமசலாபொடி போன்றவை), கறிவேப்பிலையைக் கொஞ்சம் எடுத்து, எண்ணெயில் வறுத்துப் பொடித்து, உப்பு கூடிப்போன பொடியில் கலந்து விடலாம்.

காரம் கூடிவிட்டதா?

குருமா என்றால் புளிப்பில்லாத கெட்டித் தயிர் அல்லது கெட்டித் தேங்காய்ப் பால் சேர்த்துக் கலக்கி விடுங்கள்.

மட்டர் பனீர், சோலே மசாலா, பாவ் பாஜி போன்றவற்றில் காரம் அதிகமா? ஃப்ரெஷ் கிரீம் அல்லது சூடான பால் வெண்ணெய் சேர்த்து உருக்கி அதைச் சேர்த்து விட்டால், 'காரமா... எங்கே..?' என்பார்கள்.

வெண்பொங்கல், கலப்பு சாதங்கள், புலாவ், பிரியாணி போன்றவை ‘உஸ் உஸ்’ என்று நாக்கை பதம் பார்க்கின்றனவா? பொங்கல் சூடான பால், இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்தால் காரம் குறைந்து விடும்.

கலப்பு சாதமாக இருந்தால் (தேங்காய், எலுமிச்சை சாதம் முதயன) அவற்றிலுள்ள மிளகாய்த் துண்டுகளை பொறுக்கி எடுத்து விடுங்கள். பின்னர்... வடாம், அப்பளம் இவற்றைப் பொரித்து தூளாக்கி பரிமாறும் நேரத்தில் மேலே தாராளமாகத் தூவி மொறுமொறுவென்று பரிமாறுங்கள்.

புலாவ் பிரியாணி காரமாக இருந்தால் பிரெட் கிரம்ப்ஸ் ஒரு கரண்டி எடுத்து, வெறும் வாணயில் ஒரு நிமிடம் சூடாக்கிச் சேர்த்து விடுங்கள். பரிமாறும்போது சாதாரண கார்ன்ஃபிளேக்ஸ் கூட சேர்க்கலாம். வெறும் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வெண்ணெய் அல்லது நெய்யில் வதக்கிக் கலந்தும் சேர்க்கலாம்.

புளிப்பு கூடி விட்டதா?

வெல்லம் ஒரு கட்டி கரைத்து விடுங்கள். பொட்டுக்கடலை மாவையும் நீர்க்கக் கரைத்து அதில் சேர்த்து விடுங்கள்.

வெங்காயத்தை ஒரு ஸ்பூன் எண்ணெயில் வதக்கி, மிக்ஸியில் அரைத்துச் சேர்த்தாலும் குழம்பு சாம்பார் வகைகளில் புளிப்பு மட்டுப்படும்.

ரசம் புளிப்பாக இருந்தால், புளிப்பில்லாத தக்காளி, கொஞ்சம் கொத்தமல், ஒரு ஸ்பூன் கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் மிளகு-சீரகம் பொடி சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ரசத்தில் சேர்த்து ஒரு தடவை கொதிக்க விடுங்கள். பிறகு, கால் ஸ்பூன் சர்க்கரை போட்டு இறக்கினால்... அபாரமாக இருக்கும்.

இட் மாவு புளித்துவிட்டதா?

இட்யாக வார்த்து விட்டு, சேவை நாழியில் அல்லது வடாம் அச்சில் போட்டு சேவையாக பிழிந்து வைத்துக் கொள்ளுங்கள். வாணயில் கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு தாளித்து பொடியாக அறிந்த வெங்காயத்தை வதக்கி, பிழிந்து வைத்துள்ள இட் சேவையைப் போட்டு ஒரு புரட்டு புரட்டி புது வகை உணவாகப் பரிமாறுங்கள்.

சாம்பார் நீர்த்துவிட்டதா?

சிறிது நேரம் அப்படியே வைத்திருந்தால் மேலே தெளிவாக தண்ணீர் தேங்கும். அதைக் கவனமாக இறுத்துவிட்டால்... சாம்பார் கெட்டிதான். இறுத்து எடுத்த தண்ணீரை வீணாக்காமல்... சப்பாத்தி மாவு பிசைய உபயோகிக்காலாம்.

தண்ணீர் அதிகமாகப் போன கூட்டு, குருமா, கிரேவி வகைகளுக்கு பால் கரைத்த சோள மாவு, பொட்டுக்கடலை மாவு சேர்த்து ஒரு கொதி கொதிக்க வைத்தால் கெட்டியாகி விடும் (கூட்டு அல்லது குருமாவிருந்தே கொஞ்சம் எடுத்து அதில் மாவைக் கரைத்துச் சேர்ப்பதும் நல்ல உத்தி!)

தோசை மாவு நீர்த்து விட்டால், அந்த மாவிருந்தே கொஞ்சம் எடுத்து... சோள மாவு, வெறும் வாணயில் வறுத்த மைதா மாவு இவற்றைக் கரைத்து மொத்த மாவில் சேர்த்து விட்டால்... மாவு கெட்டியாகும். சுவையும் மாறாமல் இருக்கும்.

சப்பாத்தி, வடை, போண்டா, அதிரசம், அப்பம் போன்றவற்றுக்கான மாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால்... ஃப்ரீஸரில் 20 அல்லது 30 நிமிடங்கள் திறந்தபடி வைத்தால் கெட்டியாகி விடும். அதை ஃப்ரீஸரிருந்து எடுத்த உடனே திட்டமிட்ட உணவுப் பொருளைத் தயாரித்து விடலாம்.

சாதம் குழைந்துவிட்டதா?

கரண்டியால் கிளறாதீர்கள். அப்படியே ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு ஆற விடுங்கள். பின், அதில் எண்ணெய் அல்லது வெண்ணெயைப் பரவலாக ஊற்றி, பாத்திரத்தை மேலும் கீழும் லேசாகக் குலுக்குங்கள். அல்லது ஒரு முள் கரண்டியால் குறுக்கும் நெடுக்கும் கோடு போடுவது போலக் கீறுங்கள். குழைந்த சாதம் கெட்டியாகிவிடும்.

சாதம் குழைந்துவிட்டால்... சாம்பார் அல்லது தயிர் சாதமாகவும் கலந்து பரிமாறி விடலாம். கொஞ்சம் சாதத்தை மேலும் மசித்து, கெட்டிப்பால், சர்க்கரை (அல்லது கண்டென்ஸ்டு மில்க்) சேர்த்து, பால் பாயசமும் தயாரித்து விடலாம். த்ரீ - இன் - ஒன் ஐடியா எப்படி!


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]