- வசந்தா விஜயராகவன்
""தையத் தையத் தையாத் தையா .... தகத்
தையத் தையத் தையாத் தையா ...'' என்று
தாளம் போடவைக்கும் தைத்திருநாள்.
பொங்கல் தினத்தன்று ""சமையல் கலை நிபுணர்'' வசந்தா விஜயராகவன் தந்துள்ள இந்த வெரைட்டியான பொங்கல் வகைகளைச் செய்து ருசி கூட்டுங்கள். இல்லமெங்கும் இன்பம் பொங்கட்டும் !
வெண் பொங்கல் !
தேவையானவை : பச்சரிசி - 2 கப், பாசிப்பருப்பு - அரை கப், மிளகு - ஒன்றரை டீஸ்பூன், ஒன்று இரண்டாகப் பொடித்த சீரகம், இஞ்சித் துருவல்- தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை- சிறிது, உப்பு, நெய் - தே�யான அளவு முந்திரித் துண்டுகள் - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை : அரிசியையும், பாசிப்பருப்பையும் நன்றாகக் கழுவி, 3 கப் தண்ணீர் விட்டு குக்கரில் வேகவைக்கவும். உப்பு சேர்த்து கரண்டியால் மசிக்கவும். கடாயில் நெய்விட்டுக் காய்ந்ததும், முந்திரியைப் போட்டு வறுத்து, மிளகு, சீரகத்தூள், இஞ்சித் துருவல், கறிவேப்பிலைச் சேர்த்து வறுத்து மசித்த கவலையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும் !
மிளகு- சில்லிப் பொங்கல் !
தேவையானவை : பச்சரிசி - முக்கால் கப், பாசிப் பருப்பு - கால் கப், பால் - ஒரு கப், தண்ணீர் - 2 கப், உப்பு. நெய் - தேவையான அளவு.
தாளிக்க : கடுகு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் துண்டுகள் - ஒரு டேபிள் ஸ்பூன், மிளகு, சீரகத் தூள், - ஒரு டேபிள் ஸ்பூன் , இஞ்சித் துருவல், கறிவேப்பிலை, முந்திரித் துண்டுகள் - தலா ஒரு டேபிள் ஸ்பூன்.
செய்முறை : அரிசி, பருப்பை தண்ணீர், பால் சேர்த்து வேக வைத்து, உப்பு சேர்த்து நன்றாக மசிக்கவும். நெய்யில் கடுகு தாளித், முந்திரி, மிளகு, சீரகத்தூள், கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், பச்சை மிளகாய் துண்டுகளைப் போட்டு வதக்கி, மசித்துவைத்துள்ள பொங்கலில் சேர்க்கவும் !
கல்கண்டு பொங்கல் !
தேவையானவை : பச்சரிசி - ஒரு கப், பால் - 3 கப், கல்கண்டு - அரை கப், நெய்- 3 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த் தூள் - ஒரு டீஸ்பூன், முந்திரி- திராட்சை - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை : பாலில் அரிசியைக் குழைய வேக வைத்து, அதில் கல்கண்டு சேர்த்துக் கிளறி, நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்துப் போடவும். கடைசியில் ஏலக்காய்த் தூள் சேர்க்கவும் !
ரவா பொங்கல் !
தேவையானவை : வறுத்த ரவை - ஒரு கப், வேகவைத்த பயத்தம்பருப்பு - கால் கப், மிளகு, சீரகம் - ஒரு டீஸ்பூன், முந்திரித் துண்டுகள் - இரண்டு டேபிள் ஸ்பூன், இஞ்சித் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன், நெய், கறிவேப்பிலை, உப்பு - சிறிதளவு.
செய்முறை : கடாயில் நெய்விட்டு முந்திரியை வறுத்து மிளகு, சீரகத்தூள், கறிவேப்பிலை, இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கவும். இதில் 2 கப் தண்ணீர் விட்டுக் கொதித்ததும், வேகவைத்த பாசிப்பருப்பு, வறுத்த ரவை, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும் !
வெல்ல பால் பொங்கல் !
தேவையானவை : பச்சரிசி - ஒன்றரை கப், பாசிப் பருப்பு - அரை கப், பால் - 5 கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், நெய் - 100 கிராம், முந்திரி, திராட்சை, 4 - டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த் தூள் - ஒரு டீஸ்பூன், குங்குமப் பூ, வறுத்துப் பொடித்த ஜாதக்காய்த் தூள் - தலா கால் டீ ஸ்பூன்.
செய்முறை : சிறிது நெய்யில் அரிசி, பாசிப் பருப்பை வறுத்து பால் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். பிறகு எடுத்துக் கரண்டியால் நன்றாக மசிக்கவும். கடாயில் மீதம் உள்ள நெய்விட்டுக் காய்ந்ததும், முந்திரி, திராட்சையை வறுக்கவும். அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டுக் கொதித்து விடவும். கெட்டியானதும் இறக்கி வறுத்துவைத்துள்ள முந்திரி, திராட்சை, ஜாதிக்காய்த் தூள், ஏலக்காய்த் தூள் சேர்த்து சிறிது பாலில் குங்குமப் பூவைக் கரைத்துச் சேர்க்கவும்!