Wednesday, October 14, 2009
துவரம் பருப்பில்லாத ரெசிபிகள் 2
மசால் குழம்பு
தேவையான பொருட்கள்: புளி - 25 கிராம், கேரட் ஒன்று, பீன்ஸ் - 10 (எண்ணிக்கையில்), குட மிளகாய்-ஒன்று, சின்னவெங்காயம்-10, முள்ளங்கி-ஒன்று, அவரைக்காய்-நான்கு, கரம் மசாலாத்தூள்-ஒரு டீஸ்பூன், கடலைப் பருப்பு, தனியா, மிளகாய் வற்றல்-தலா ஒரு டீஸ்பூன் வறுத்து பொடித்துக் கொள்ளவும், கொப்பரைத் தேங்காய் 4 சிறிய துண்டுகளை பொடித்துக் கொள்ளவும், உப்பு-தேவையான அளவு, சாம்பார் பொடி -2 டீஸ்பூன், சிவக்க வறுத்த வேகவைத்த பாசிப்பருப்பு-ஒரு சிறிய கிண்ணம், எண்ணெய்-4 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அவரை, கேரட், பீன்ஸ், குடமிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கவும். முள்ளங்கியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய காய்களைப் போட்டு வதக்கி கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கி புளியைக் கரைத்து ஊற்றி, சாம்பார் பொடி போட்டு நன்கு கொதிக்கவிடவும். காய்கறிகள் வெந்ததும் தனியா கடலைப்பருப்பு மிளகாய்வற்றல் வறுத்துப் பொடித்து, வைத்துள்ளதைப் போட்டு கொப்பரைத் துருவலும் போட்டு கொதிக்க விடவும். கடைசியில் வேகவைத்த பருப்பு சேர்த்து கலந்து இறக்கவும்.
கத்திரிக்காய் முருங்கைக்காய் பொரியல்
தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம் - இரண்டு, பிஞ்சுக் கத்தரிக்காய் - 1/4 கிலோ, முருங்கைக்காய் - இரண்டு, தக்காளிப்பழம் - இரண்டு, உப்பு - தேவையான அளவு, தனியா, மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு - தலா ஒரு டீ ஸ்பூன் (வறுத்து பொடித்து) மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் - சிறிதளவு, தேங்காய்ப்பால் - ஒரு கப்.
செய்முறை: முருங்கைக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கவும். கத்தரிக்காயை நீளவாக்கில் நறுக்கவும். வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தாளித்து நறுக்கிய காய்கறிகளைப் போட்டு வதக்கவும். தேவையான உப்பு, வறுத்துப் பொடித்த பொடி, சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும். கிரேவி கெட்டியானதும் தேங்காய்ப்பால் ஊற்றி கீழே இறக்கவும்.
சூடான சாதத்தில் இந்தப் பொரியல் போட்டு பிசைந்து சாப்பிடலாம்.
தொட்டுக் கொள்ள ஏதும் தேவை இல்லை.
வாழைத்தண்டு மோர்கூட்டு
தேவையான பொருட்கள்:- வாழைத்தண்டு - ஒரு சிறிய துண்டு, தயிர் - 100 மில்லி, பச்சைமிளகாய் - இரண்டு, தேங்காய்த்துருவல் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு,
தாளிக்க: பெருங்காயத்தூள் - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - 2ஸ்பூன், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு- தலா 1/4 ஸ்பூன்.
செய்முறை:- வாழைத்தண்டை சிறுவில்லைகளாக நறுக்கி நார் எடுத்து உப்பு சேர்த்து வேகவிடவும். தேங்காய்த் துருவல், பச்சைமிளகாய் இரண்டையும் மிக்ஸியில் அரைத்து தயிருடன் சேர்க்கவும். இதை வேகவைத்த வாழைத்தண்டுடன் சேர்த்துக் கலந்து கொள்ளவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு சீரகம், பெருங்காயத்தூள் போட்டு தாளித்து இதை ரெடியாக உள்ள கலவையில் நன்கு கலந்து இறக்கவும்.
சூடான சாதத்தில் நெய்விட்டு இந்த மோர்க்கூட்டை போட்டுப் பிசைந்து பப்படம் பொரித்து சாப்பிட சிறந்த காம்பினேஷன்.
மாம்பழ மோர்க்குழம்பு
தேவையான பொருட்கள்: - நன்கு பழுத்த மாம்பழம் - ஒன்று, தயிர் - 500 மில்லி (சிறிது புளிப்பாக), உளுத்தம்பருப்பு - ஒரு டீ ஸ்பூன், மிளகாய்வற்றல் - இரண்டு, மிளகு - 6, சீரகம் - 1/4 ஸ்பூன், தனியா - 1/4 ஸ்பூன், தேங்காய்த்துருவல் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: - கடுகு ஒரு ஸ்பூன், வெந்தயம் - 1/4 ஸ்பூன், எண்ணெய் - ஒரு டீ ஸ்பூன், பெருங்காயத்தூள்.
செய்முறை:- மாம்பழத்தை தோல் சீவி நன்கு வேகவைத்து மசித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தனியா, மிளகு, சீரகம், தேங்காய்த்துருவல் மிளகாய்வற்றல், உளுத்தம்பருப்பு எல்லாவற்றையும் வறுத்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். இதைத் தயிருடன் தேவையான உப்பு சேர்த்துக் கலந்து அதில் மசித்த மாம்பழத்தையும் சேர்த்து நன்கு கலந்து லேசாக சூடுபடுத்தவும். இதில் கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் தாளித்து இறக்கவும். மாம்பழ இனிப்பும் தயிரின் புளிப்பும் சேர்த்து வித்தியாசமான சுவையுடன் நன்றாக இருக்கும்.
வெரைட்டி உசிலி
தேவையான பொருட்கள்: மிளகாய் வற்றல்- இரண்டு, மிளகு - ஒரு டீ ஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு சிறிய கிண்ணம், முளைகட்டிய கொள்ளு - ஒரு சிறிய கிண்ணம், முளைகட்டிய சோளம் - ஒரு சிறிய கிண்ணம், முளைகட்டிய கொண்டைக்கடலை - ஒரு சிறிய கிண்ணம், இஞ்சி - ஒரு துண்டு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 100 மில்லி.
தாளிக்க: பெருங்காயத்தூள், கடுகு - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை:- துவரம் பருப்பை ஒரு மணிநேரம் ஊறவிடவும். தண்ணீர் வடித்து மிளகு, மிளகாய்வற்றல், இஞ்சி, கொள்ளு, சோளம், கொண்டைக்கடலை எல்லாம் சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். இத்துடன் உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து பிசைந்து இட்லி தட்டுகளில் இட்லிபோல வைத்து ஆவியில் வேகவைத்து ஆறிய உடன் நன்கு உதிர்த்து வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து உதிர்த்து வைத்து இருக்கும் பருப்புகளைப் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு மொறுமொறுப்பாகும் வரை கிளறி இறக்கவும்.
மிகவும் சத்துக்கள் நிறைந்தது
இந்த வெரைட்டி உசிலி. மோர்க்குழம்பு சாதத்திற்கு ஏற்ற சிறந்த காம்பினேஷன் இந்த உசிலி.
பூண்டு வெங்காய அப்பளக் குழம்பு
தேவையான பொருட்கள்: புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, சின்ன பூண்டுப்பல்-10, சின்னவெங்காயம்-10, உளுந்து அப்பளம்-இரண்டு, மிளகாய் வற்றல் - ஒன்று, சாம்பார்பொடி - 2 ஸ்பூன், கடுகு- 1/4 ஸ்பூன், கடலைப்பருப்பு - 1/4 ஸ்பூன், வெந்தயம்- 1/4 ஸ்பூன், நல்லெண்ணெய் - 6 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:- புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும். பூண்டு வெங்காயத்தை தோல் உரித்து இரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம், மிளகாய் வற்றல் தாளித்து, பிறகு வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். பின்பு அப்பளத்தைப் பிய்த்து துண்டுகளாக்கிப் போடவும். இத்துடன் சாம்பார்ப்பொடியையும் போட்டு வதக்கிக் கொள்ளவும். பின்பு புளித்தண்ணீரை விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
பருப்பே இல்லாமல் வீடே மணக்கும்
இந்த பூண்டு வெங்காய அப்பளக் குழம்பு.
கீரை புரோட்டீன் கூட்டு
தேவையான பொருட்கள்:- முளைகட்டிய பாசிப்பயிறு - ஒரு கிண்ணம், முருங்கைக்கீரை - ஒரு கிண்ணம், தேங்காய்த்துருவல் - 1/4 கிண்ணம், இஞ்சி - ஒரு துண்டு, மிளகாய் வற்றல் - ஒன்று, உப்பு - தேவையான அளவு, சீரகம், மிளகு, தலா - 1/2 ஸ்பூன்.
தாளிக்க: கடுகு - ஒரு ஸ்பூன், எண்ணெய் - ஒரு ஸ்பூன்.
செய்முறை:- முளைகட்டிய பாசிப்பயறையும் முருங்கைக் கீரையும் ஒன்றாக வேகவிடவும். வெந்த உடன் தேவையான உப்பு சேர்க்கவும். தேங்காய்த்துருவல், மிளகு, சீரகத்தை மிளகாய்வற்றல் சேர்த்து வறுத்து மிக்ஸியில் அரைத்து வேக வைத்த கீரையுடன் சேர்த்துக் கொதிக்க விட்டு கடுகு தாளித்து இறக்கவும்.
மைசூர் பருப்பு சேர்த்தும் செய்யலாம். பிடித்தமான காய்கள் சேர்த்தும் செய்யலாம். கீரையுடன், சூடான சாதத்துடன் இந்த கூட்டு சேர்த்து சாப்பிட
மிகவும் நன்றாக இருக்கும். சிப்ஸ் சிறந்த காம்பினேஷன்.
TIPS
சுவையின் ரகசியம்!
எந்தவகை ஜூஸ் தயாரிக்கும்போதும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால், ஜூஸின் சுவை கூடுதலாக இருக்கும்.
ஹெல்தி ரோஸ்ட்!
உருளை, சேப்பங்கிழங்கு போன்றவற்றை ரோஸ்ட் செய்யும்பொழுது மிளகாய்த் தூளுக்குப் பதிலாக மிளகு, சீரகப் பொடியைச் சேர்த்தால் சுவையும் மாறுபட்டு இருக்கும். வாயுத்தொல்லையும் இருக்காது.
மிக்ஸியில் அரைக்கணுமா?
மிக்ஸியில் உளுந்து வடைக்கு நீர்க்காமல் சூடாகாமல் அரைக்கணுமா? ஒரு கப் உளுத்தம்பருப்பை இருபது நிமிடங்கள் மட்டும் ஊற வைத்து, நீரை வடித்து, மிக்ஸி கப்பில் போட்டு, ஒரு ஸ்பூன் ஐஸ் வாட்டர் விட்டு, 30 நொடிகள் ஓட விடவும். 10 நிமிடம் கழித்து மீண்டும் ஒரு ஸ்பூன் நீர்விட்டு 30 நொடிகள் ஓடவிடவும். நான்கைந்து முறை, இப்படிச் செய்தால் கெட்டியான பந்து போன்ற வடைமாவு உங்கள் கையில்...
பழுக்காத பாகற்காய்க்கு
பாகற்காய் பழுக்காமல் இருக்க, வாங்கியவுடனே அதை இரண்டாக வெட்டி வைத்துவிடுங்கள்.
பால் திக்காக...
ஜவ்வரிசியை ஓர் அழுக்கில்லாத வெள்ளைத் துணியில் முடிந்து காய்ச்சும் பாலில் போட்டுவிட்டால், இது கரைந்து பால் கெட்டியாகி காபி சுவையாக இருக்கும்.
வடாம் சூப்!
சூப்பில் போடுவதற்கு பிரெட் துண்டுகள் இல்லாதபோது ஜவ்வரிசி வடாம் பொரித்து உடைத்துத் துண்டுகளாக்கி சூப்பில் போட, சுவையும் மணமும் கூடும்.
புளியில் புழு வராமல் இருக்க...
கடைகளில் வாங்கிய புளி, சில சமயங்களில் புழுவின் உறைவிடமாகி இருக்கும். காரணம், அதிலுள்ள கொட்டைதான். வாங்கியவுடன் கொட்டைகளை எடுத்துவிட்டு, வெயிலில் காய வைத்து, கன்டெய்னரில் வைத்தால், ஆறு மாதம் கெடாது.
புளிப்பான ஊறுகாய்!
எலுமிச்சை, நாரத்தை ஊறுகாய் நாளாகிவிட்டால் புளிப்பு இறங்கிவிடும். இதற்கு பச்சை மிளகாயை வகுந்து, எண்ணெயில் வதக்கி அத்துடன் போட்டு, உப்புச் சேர்த்து கிளறி, மறுநாள் உபயோகிக்கவும்.
ரசம் கமகம என்று மணக்க வேண்டுமா?
ரசம் பரிமாறும்போது, அதில் ஒன்றிரண்டு பன்னீர்த் துளிகளை விட்டு பிறகு பரிமாறுங்கள். ரசம் கமகம என்று மணக்கும்.
வாழைக்காய் வீணாகாமல் இருக்க...
வறுவலுக்கு வாழைக்காயை வீணாக்காமல் கடைசிவரை சீவ, முதலிலேயே காம்பை வெட்டாமல் காம்புவரை தோல் சீவி, காம்பை பிடித்துக்கொண்டு சீவவும். - வே. சித்ரா, திருவண்ணாமலை.
வழவழப்பில்லாத வெண்டைக்கு...
வெண்டைக்காய் வதக்கும்போது ஒரு ஸ்பூன் மோர் ஊற்றி வதக்கினால் வழவழப்பின்றி சுவையாக இருக்கும்.
இதுதான் கொழுக்கட்டை பதம்!
கொழுக்கட்டையைச் சரியாக வேக வைக்காவிட்டால் கொழகொழப்பாக இருக்கும். அதிக அளவு வேகவைத்தால் வெடிப்புகள் ஏற்படும். சரி, பதம்தான் என்ன என்கிறீர்களா? கொழுக்கட்டை நன்றாக வெந்ததற்கு அடையாளம், கொழுக்கட்டை மேல் வியர்த்தது போல் நீர் இருக்கும்.
வெண்ணெய்போல தயிர் சாதம் கலக்க வேண்டுமா?
சாதம் வைக்கும் முன், அரிசியுடன் ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் பாலை கலந்து சாதம் வைத்தால் தயிர் சாதம் புளிப்பில்லாமல் சுவையுடன் இருக்கும். கெட்டும் போகாது. சாதமும் குழைந்து வரும்.
பாலில் கலப்படம்-அதிர்ச்சி கட்டுரை
கொஞ்சம் ஒயிட் பெயிண்ட் நுரைக்கு கொஞ்சம் ஷாம்பு என்ற காம்பினேஷனில் பால் தயாரிப்பதை டி.வி.யில் காட்டினார்களாம். (வாசகிகளின் கடிதங்கள் பாக்ஸ் மேட்டரில்) விஷயத்தைப் படித்துவிட்டு, பதறிப் போய் களத்தில் இறங்கினோம். நமக்கு கிடைத்தது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. இதோ அதுபற்றி அட்வகேட் முருகன் சொல்கிறார்:
``பாலில் 3 விஷயங்கள் கலப்படம் செய்யப்படுகின்றன. முதல் கலப்படம் எல்லோருக்கும் தெரிந்த தண்ணீர். பாலில் தண்ணீர் கலப்படம் செய்திருப்பதை லேக்டோ மீட்டர் மூலம் கண்டுபிடித்துவிடலாம். பாலில் இருக்கும்போது லேக்டோ மீட்டர் 1.026 எண்ணுக்குக் கீழே காட்டினால் அந்தப் பாலில் தண்ணீர் கலப்படம் நடந்திருக்கிறது. இந்த கலப்படத்தில் நமக்கு கெடுதல் ஒன்றுமில்லை என்பதுதான் ஒரே ஆறுதல்.
அடுத்து பால் திக்காக தெரிய வேண்டுமென்பதற்காக அதில் ஒரு வகை மாவு கலக்கப்படுகிறது. இதைக் குடிக்கும் குழந்தைகளின் வயிறு என்ன கதிக்கு ஆளாகும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.
பாலில் மாவு கலந்திருப்பதை கண்டுபிடிக்க வேண்டுமானால், பரிசோதனைக் கூடத்தில் டிஞ்சர் அயோடின் எனப்படும் கெமிக்கலை பாலில் போட்டால் அது நீல நிறமாகிவிடும். வீட்டில் பரிசோதிக்க வேண்டுமானால், வழுவழுப்பான தரையில் சுத்தமான பாலை ஒரு துளி விட்டால் அது ஷேக் மட்டும்தான் ஆகும். ஆனால் மாவு கலந்த பாலைவிட்டால் அது தரையில் ஒட்டி நிற்காமல், உருண்டோடும்.
பாலில் கலக்கப்படும் மூன்றாவது விஷயம் என்ன தெரியுமா? நம்புங்க... சத்தியமா சோப்பு பவுடர்தான். சோப்புப் பவுடர் பாலைக் கெடுத்து விடாதா என்றுதானே யோசிக்கிறீர்கள். அப்படி பால் கெட்டுப் போகாதபடிக்கு, அதை இன்னும் சில கெமிக்கல் பிராசஸ் செய்கிறார்கள். இந்தப் பாலை கொதிக்க வைத்து ஆற்றினால் பாலில் ச்சும்மா நுரை பொங்கி வழியும். அதோட கொடுமையான சீக்ரெட் சோப்பு பவுடர்தாங்க... பாலில் நுரை அதிகமாக இருந்தால் இனி உஷாராயிடுங்க..!
பாலில் கலப்படம் செய்வதில் உச்சக்கட்ட கொடுமையான விஷயம் இதுதான்.
எல்லா மாடுகளுமே சிறிதளவு பாலை தன் கன்றுக்காக மடியிலேயே நிறுத்தி வைத்துக் கொள்ளும். இது இயற்கை அவைகளுக்கு சொல்லிக் கொடுத்த தாய் அன்பு. அந்தப் பாலையும் அதன் மடியிலிருந்து பிடுங்குவதற்கு மாடுகளுக்கு நரம்புத் தளர்ச்சியை உண்டு பண்ணும் ஆக்ஸிடோஸின் இன்ஜெக்ஷனை அதன் கழுத்தில் போட்டுவிட்டு பிறகு பால் கறக்கிறார்கள். நரம்புகள் தளர்ந்து போன அந்த மாட்டிடம் இருந்துவருவது பால் மட்டுமல்ல.. அதன் ரத்தமும் சேர்ந்துதான்! இந்தப் பாலைக் குடிப்பதால் நமக்குக் கிடைப்பது விட்டமினோ, கால்சியமோ அல்ல.. தீவிரமான வாதநோய்தான்!
சில பிராண்டட் நிறுவனங்கள் எங்கள் பாலில் 100% பாக்டீரியா கிடையாது என்று விளம்பரம் செய்கின்றன. உண்மையில் இது தவறு. பாலின் சுவையே சில `நல்ல' பாக்டீரியாக்களால்தான். வேண்டுமானால் `கெட்ட' பாக்டீரியாக்கள் முழுவதுமாக நீக்கப்பட்ட பால் என்று வேண்டுமானால் விளம்பரப்படுத்தலாம்!
பால் பாக்கெட்டின் மீது அது பேக் செய்யப்பட்ட தேதி இருக்கும். பேக் செய்யப்பட்டு 2 நாட்களுக்குள் இருந்தால் மட்டும் அந்தப் பாலை வாங்கலாம். அதற்கு மேல் என்றால் வேண்டவே வேண்டாம்!
மைக்ரோ வேவ் அவனில் சாதம் சமைப்பது எப்படி?
இந்தச் சமையலில் உணவிலுள்ள வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் நஷ்டமடையாமல் அப்படியே இருக்கின்றன. முக்கியமாக ருசி மாறாமல் இருக்கின்றன!
காய்கறிகளின் நிறம் பாதுகாக்கப்படுகிறது.
மிகக் குறைந்த நேரத்தில் மிகக் குறைந்த மின்சார உபயோகத்தில் சிறந்த முறையிலே உணவு தயாரிக்கலாம்.
5 நிமிடங்களுக்குள் ஏறக்குறைய 500 கிராம் கேக் தயார் செய்து விடலாம்.
வட இந்திய, தென் இந்திய, சீன உணவு வகைகள் பலவற்றைச் சுலபமாகச் சமைக்கலாம்.
கரி படாமல், கைகள் அழுக்காகாமல், நிறையப் பாத்திரங்கள் உபயோகப்படுத்தாமல் சமைக்கலாம்.
சிறு குழந்தைகள் கூடப் பயமில்லாமல் மைக்ரோவேவ் அவனில் சமையல் செய்யலாம்.
எந்தப் பாத்திரத்தில் சமையல் செய்கிறோமோ அதே பாத்திரத்தில் சூடாக உணவைப் பரிமாறும் வசதியும் இருக்கிறது.
வெயில் காலத்தில்கூட சமையலறை சூடாகி நாமும் வேர்த்து வழியாமல், சமைத்து முடித்து விட்டு வெளியே வந்து விடலாம்.
கன்வெக்ஷன் அவன் பற்றித் தெரிந்து கொள்ளலாமா?
உலர் சூட்டிலே உணவு வகைகளை வேக வைப்பது அல்லது பேக் செய்யும் முறைக்குப் பெயர்தான் கன்வெக்ஷன் அவன். இதில் இருக்கும் கிரில்லில் பிரெட், கபாப் போன்றவைகளை டோஸ்ட் செய்யலாம். கோழி ரோஸ்ட் செய்யலாம்.
சாதாரண பேக்கிங் அவன் செய்யும் வேலைகளைக்கூட இது செய்கிறது. அலுமினியம், ஸ்டீல் பாத்திரங்கள் வைத்து பேக் செய்யலாம். இந்த பேக்கிங் முறைக்கு எண்ணெய் அதிகம் தேவை இல்லை. கன்வெக்ஷன் மோட், மைக்ரோ வேவ் இரண்டும் ஒன்றாக இருக்கின்ற அவன்கள் இருக்கின்றன. விலையும் அதிகம். உலர் சூட்டிலே உணவு வகைகள் சமைக்கும் போது கன்வெக்ஷன் மோடிலும், மைக்ரோ கதிர்களில் சமைக்கும் போது மைக்ரோ வேவ் மோடிலும் அவனைச் செட் செய்து கொள்ள வேண்டும்.
வெளிநாடுகளில் மைக்ரோ, கன்வெக்ஷன் இரண்டும் இணைந்த அவன்கள் பெருமளவில் உபயோகத்தில் இல்லை. ஏனெனில் அங்கு வீட்டுக்கு வீடு பெரிய அவன் சுவரிலேயே பதித்திருக்கும் இதனால் சாதாரண அவனைத்தான் அங்கு பெருமளவில் பயன்படுத்துகிறார்கள்.
மைக்ரோ வேவ் அவனில் சாதம் சமைப்பது எப்படி?
ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் என்ற முறையிலும் 2 கப் அரிசிக்கு 3 அல்லது மூன்றரை கப் தண்ணீர் என்ற முறையிலும் எடுத்துக் கொள்ளலாம். இது பொதுவான அளவுதான். ஒவ்வொரு அரிசிக்கும் தண்ணீரின் அளவு வித்தியாசப்படும். புழுங்கல் அரிசியானால் கொஞ்சம் அதிகத் தண்ணீரும் அதிக நேரமும் கூட ஆகலாம்.
பாஸ்மதி அரிசியானால் மேலே தரப்பட்ட அளவு நீர் சரியாக இருக்கும். சாதம் கொஞ்சம் குழைந்தது போல் வேண்டுமானால், அதே அளவு தண்ணீரில் அரிசியைப் 10-15 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர் சமைக்கலாம். ஃபிரைடு ரைஸ் போன்றவற்றுக்கு சாதம் பொல பொல என்றிருக்க வேண்டும். சாதம் சமைக்கும் போதே அரைத் தேக்கரண்டி பட்டர் அல்லது எண்ணெயை அரிசியுடன் சேர்க்கலாம். சாதாரணமாக 2 கப் அரிசி வேக 15 நிமிடங்கள் ஆகும். அதுவே 4 கப் ஆனால் 20 நிமிடங்களில் சாதம் தயாராகி விடும்.
அரிசியை இரண்டு அல்லது மூன்று தடவைகள் நன்கு அலசி விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தேவைக்கேற்ப உப்பும் சேர்த்து மேலே கொடுக்கப்பட்ட நேர அளவுகளை நீங்கள் உபயோகப்படுத்தும் அரிசியினையும் அதன் அளவையும் கொண்டு நிர்ணயிக்க வேண்டும். செய்து பாருங்கள்!
உப்புக் கொழுக்கட்டை,கடலைப்பருப்பு பாயசம்,
உப்புக் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்: பூரணம் செய்ய:
உளுத்தம் பருப்பு-ஒரு கப், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், உப்பு சுவைக்கேற்ப.
செய்முறை: உளுத்தம் பருப்பை ஊற வைத்து, தண்ணீரை சுத்தமாக வடித்து, காய்ந்த மிளகாய், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும். இதை இட்லிப் பாத்திரத்தில் பருப்பு உசிலி போல வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும். வாணலியில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டுத் தாளித்து, அதில் ரெடியாக உள்ள பூரணம், தேவையான உப்பு, சிறிதளவு தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறினால் பூரணம் ரெடி. வெல்லக் கொழுக்கட்டையில் சொல்லியிருக்கிறபடி மேல் மாவை ரெடி செய்து, சோமாஸ் ஹேப்பில் உள்ளே பூரணம் வைத்து மூடி ஆவியில் வேக விடவும்.
கடலைப்பருப்பு பாயசம்
தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு-ஒரு கப், பாசிப்பருப்பு-ஒரு கப், வெல்லம்-ஒரு கப், முந்திரி, திராட்சை, நேந்திரப் பழத் துண்டுகள்-சிறிதளவு.
செய்முறை: வெறும் வாணலியில் முதலில் கடலைப் பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். முக்கால் அளவு வறுபட்டபின் அத்துடனே பாசிப்பருப்பையும் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். வறுத்த பருப்புகளை நீரில் அலசி, வேக விடவும். இது வெந்து கொண்டிருக்கும் போதே, பக்கத்துஅடுப்பில் வெல்லத்தைத் தட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இத்துடன் வெந்த பருப்பைப் போட்டுக் கிளறினால் கடலைப்பருப்பு பாயசம் ரெடி!
வெஜிடேரியன் மீன்குழம்பு செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்: வெஜ் மீன் செய்ய:-காராமணி-100 கிராமம், கடலைப்பருப்பு-50 கிராம், பச்சைப்பயறு-100 கிராம், ஜவ்வரிசி-25 கிராம், கொண்டைக்கடலை-100 கிராம், அரிசி-50 கிராம், ஆடாதோடா இலைகள், வாழையிலையின் நடுவில் இருக்கும் தண்டு, எண்ணெய்-தேவையான அளவு. இலை, தண்டு தவிர, மற்ற எல்லாவற்றையும் ஊற வைத்து, சுவைக்கேற்ப காய்ந்தமிளகாய் மற்றும் உப்புடன் அடைக்கு அரைப்பது போல நைஸாக அரைக்கவும். மீன் போன்ற ஷேப்பில் இருக்கும் ஆடாதோடா இலையின் மேல், அரைத்து வைத்துள்ள மாவை பரவினாற் போல வைத்து, மாவில் நடுவில் மெல்லிய வாழையிலைத்தண்டை வைத்து, அதன் மேலே இன்னொரு இலையை வைத்து மூடி ஆவியில் வேக வைக்கவும். வெந்ததும் துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்தெடுத்தால் `வெஜ் மீன்' ரெடி!
இனி, குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்!
தேவையான பொருட்கள்: புளி150 கிராம், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு சுவைக்கேற்ப, கசகசா விழுது3 டீஸ்பூன்.
தாளிக்க: வெந்தயம், கடுகு, காய்ந்த மிளகாய், நல்லெண்ணெய் கறிவேப்பிலை, உரித்த பூண்டுப் பற்கள் தேவையான அளவு.
செய்முறை: புளியைக் கரைத்து 3 டம்ளர் புளிக்கரைசல் ரெடி செய்யவும். வாணலியில் நல்லெண்ணெய் காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய், கடுகு, உரித்த பூண்டுப் பற்கள், வெந்தயம், சீரகம் ஆகியவற்றை இதே வரிசையில் போட்டு தாளிக்கவும். பிறகு இதில் புளிக்கரைசலை விட்டு கொதிக்க விடவும். கொதிக்கும் போது உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கசகசா விழுது ஆகியவற்றைப் போட்டு குழம்பை நன்கு கொதிக்க விடவும். இது ரெடியான பின்பு வெஜ் மீன் துண்டுகளைப் போட்டு 10 நிமிடம் கொதிக்க விட்டால், வெஜ் மீன் குழம்பு ரெடி. சிறிது கடுகு, கறிவேப்பிலை தாளித்து குழம்பின் மேலே கொட்டவும்.
பால்பாயசம் எப்படிச் செய்வது?
பாசுமதி அரிசி - ஒரு டம்ளர், நெய் - 1/2 டம்ளர், பால் - 8 அல்லது 9 டம்ளர், தண்ணீர் - 3 அல்லது டம்ளர், சர்க்கரை - 2 டம்ளர், பொடித்த ஏலம் - 2.
செய்முறை: பாசுமதி அரிசியை 4 தடவை அலம்பி நீரை சுத்தமாக வடிய விடவும். வாணலியில் நெய்யை விட்டு, உருகியதும், அதில் அரிசியை போட்டு வறுத்துக் கொள்ளவும். அரிசியை வறுத்துக் கொண்டிருக்கும் போதே, இன்னொரு ஸ்டவ்வில் தண்ணீரைக் கொதிக்க விடவும்.
மைக்ரோவேவ் அவனில் செய்ய சில ரெசிபி
தேவையான பொருட்கள்: பொலபொலவென வேகவைத்த சாதம் - 3 கப், மிகச்சிறிதாக நறுக்கிய பூண்டு - ஒரு மேசைக்கரண்டி, வெங்காயம் - ஒன்று,காரட் - ஒன்று, கோஸ் - 100 கிராம், வெங்காயத்தாள் (நறுக்கியது) - ஒரு கப், முட்டை - 4, லைட் சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி, உப்பு, வெள்ளை மிளகுப்பொடி - சுவைக்கேற்ப, எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, பால் - ஒரு மேசைக்கரண்டி
செய்முறை : ஒரு வெங்காயம், காரட், கோஸ் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி, ஒரு தட்டில் தனித்தனியாக வைத்துக் கொள்ளுங்கள். பொரோசில்அல்லது கனமான பைரெக்ஸ் பாத்திரம் ஒன்றினை மூடியில்லாமல் 3 நிமிடங்கள் மைக்ரோ ஹையில் சூடுபண்ண வேண்டும். சூடான பாத்திரத்தில் ஒரு கரண்டி எண்ணெயை ஊற்றி, அதில் வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்குப் பொரியவிட்டு கிளறி விடவும். அடுத்து காரட் சேர்த்து 1லு நிமிடங்களும், பின்னர் கோஸ் சேர்த்து 11/2 நிமிடங்களும் வேகவிட வேண்டும். இடையிடையே கிளறிவிட வேண்டும். அடுத்து வெங்காயத்தாளைச் சேர்த்து லு நிமிடம் வதக்கிய பின்னர், காய்கறிகளுடன் சோயா சாஸ், உப்பு, மிளகுப்பொடி ஆகியவற்றை சேர்த்து அதில் சாதத்தையும் கொட்டிக் கிளறி 2 நிமிடங்கள் மைக்ரோ ஹையில் வேக வைக்க வேணடும். வேறு ஒரு பாத்திரத்தில் மீதமிருக்கும் ஒரு மேசைக்கரண்டி எண்ணெயை ஒரு மூடியினால் மூடி சூடு பண்ண வேண்டும். ஒரு சிறிய பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் கொஞ்சம் உப்பு, மிளகுப் பொடி, பால் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அடித்து எண்ணெயுடன் சேர்த்து மூடி 1லு நிமிடங்கள் வேகவிடுங்கள். இடையில் ஒரு முள் கரண்டியினால் கிளறிவிட்டு, தொடர்ந்து 2 அல்லது 3 நிமிடங்கள் ஓவனிலேயே வைக்க வேண்டும். சூடாக இருக்கும் ஃபிரைட் ரைசின் மீது பொரித்த முட்டையைப்பரப்பிப் பரிமாறுங்கள். முட்டை பொரிப்பதற்கு மைக்ரோவேவிலும் சாதாரணமாக காஸ் அடுப்பிலும் ஒரே அளவு நேரம் எடுக்கும் என்பதால் காஸ் அடுப்பிலேயே கூடப் பொரிக்கலாம். இதனால் நேரம் மிச்சமாகும்.
இஞ்சி முந்திரிபருப்பு சாதம்
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - ஒரு கப்
தண்ணீர் - 2 கப்
பட்டர் - 30 கிராம்
பூண்டு (அரைத்தது) - ஒரு தேக்கரண்டி
நறுக்கிய முந்திரிப்பருப்பு - 1/2 கப்
இஞ்சி மொரபா (நறுக்கியது) - 1/2 கப்
சீரகப் பொடி - 1/2 கப்
புதினா இலை (நறுக்கியது) - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அலங்கரிப்பதற்கு முந்திரிப் பருப்பு - 10 (பட்டரில் வறுத்தது)
செய்முறை: ஒரு கப் அரிசியைக் கழுவி 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் சமைக்க வேண்டும். ஒரு தேக்கரண்டி பட்டரில் பத்து முந்திரிப் பருப்புகளை ஒரு நிமிடம் வதக்க வேண்டும். மீதி பட்டர், பூண்டு, நறுக்கிய முந்திரிப் பருப்பு ஆகியவற்றை ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு இரண்டு நிமிடங்கள் மைக்ரோ ஹையில் வதக்க வேண்டும். இடையே ஒரு தடவை கிளற வேண்டும். சாதத்தையும் சீரகப்பொடி, புதினா இலை, இஞ்சி மொரபா ஆகியவற்றை அதே பாத்திரத்தில் கொட்டிக் கிளறி மீண்டும் மைக்ரோ மீடியம் ஹையில் 3 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். இடையிடையே கிளறி விடவும்.
ஸ்டாண்டிங் டைமாக ஒரு நிமிடம் ஓவனிலேயே வைத்திருந்த பின்னர், வெளியில் எடுத்துக் கிளறி வறுத்த முந்திரிப் பருப்பினால் அலங்கரித்துப்
பரிமாறலாம்.
ஸ்டப்டு கேப்சிகம்ஸ்
தேவையான பொருட்கள்:
பச்சைக் குடமிளகாய் - 2
நறுக்கிய வெங்காயம் - 2
நறுக்கிய பச்சை மிளகாய் - - ஒன்று
வேகவைத்து தோலுரித்த
உருளைக்கிழங்கு - 200 கிராம்.
பொடியாக நறுக்கிய கோஸ் - 100 கிராம்
மெயோனேஸ் - 1/4 கப்
துருவிய சீஸ் - 1/4 கப்
மிளகுப் பொடி - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எலுமிச்சைசாறு - சில துளிகள்
செய்முறை: குடை மிளகாயை நீளவாக்கில் 4 சமமான துண்டுகளாக வெட்ட வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் வெட்டிய குடை மிளகாய்களை பக்கம் பக்கமாக சீராக அடுக்க வேண்டும். வேறு ஒரு பாத்திரத்தில் கோஸ், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைக் கலந்து மைக்ரோ ஹையில் வேகவைக்க வேண்டும். ஏறக்குறைய 3 நிமிடங்கள் இடையிடையே கிளறிவிட்டு வேகவைக்க வேண்டும். உருளைக் கிழங்கை உதிர்த்து அதில் மிளகுப் பொடி, உப்பு, எலுமிச்சைசாறு, மெயோனோஸ், ரு கப் சீஸ் ஆகியவற்றைக் கலந்து அதனுடன் கோஸ் கலவைச் சேர்த்துக் கிளறி, குடைமிளகாய்த் துண்டுகளில் நிரப்ப வேண்டும். மீதியாக இருக்கும் துருவிய சீஸை அவற்றின் மேல் தூவி மைக்ரோ ஹையில் 3 நிமிடங்கள் சமைக்க வேண்டும்.
தக்காளி சாஸ் அல்லது சில்லி சாஸுடன் பரிமாறலாம்.
கார்லிக் ப்ரான்ஸ்
தேவையான பொருட்கள்:
பட்டர் - 150 கிராம்
அரைத்த பூண்டு - 2 தேக்கரண்டி
எலுமிச்சைசாறு - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்ப் பொடி - ஒரு தேக்கரண்டி
மிளகுப்பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை அல்லது
கொத்துமல்லி இலை -2 மேசைக் கரண்டி.
உப்பு - தேவையான அளவு.
சுத்தம் செய்து கழுவிய இறால் - 300 கிராம்.
செய்முறை: பட்டர், பூண்டு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு மைக்ரோ ஹையில் 2லிருந்து 3 நிமிடங்கள் சூடேற்ற வேண்டும். எலுமிச்சம்சாறு, கொத்துமல்லி இலை, உப்பு, மஞ்சள், மிளகாய்ப் பொடி, மிளகுப் பொடி, உப்பு ஆகியவற்றை இறாலுடன் கலந்து பிசைந்து மூடி, 4 நிமிடங்கள் மைக்ரோ மீடியத்தில் வேகவைக்க வேண்டும். இடையே கிளறி விடவேண்டும். அதன்பின் மூடிய பாத்திரத்தை 5 நிமிடங்கள் மைக்ரோ ஓவனிலேயே வைக்க வேண்டும். (Standing Time)
துவரம் பருப்பில்லாத ரெசிபிகள்
வல்லாரைத் துவையல்
தேவையான பொருட்கள் : வல்லாரைக் கீரை _ கைப்பிடி அளவு, இஞ்சி _ ஒரு துண்டு (தோல் சீவி நறுக்கவும்) மிளகாய் வற்றல் _ ஒன்று உளுத்தம் பருப்பு _2 ஸ்பூன், தேங்காய்த் துருவல் _ 4 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் _ ஒன்று, பூண்டு _ பல், எண்ணெய் _ 2 ஸ்பூன், புளி _ சிறிய நெல்லிக்காய் அளவு, உப்பு _ தேவையான அளவு
செய்முறை : வாணலியில் எண்ணெய் விட்டு வல்லாரைக்கீரை, இஞ்சி, மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு நான்கையும் தனித்தனியாக நன்கு வதக்கவும். பூண்டு + பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கி வதக்கவும். பிறகு தேங்காய்த் துருவல், புளி, உப்புடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
இதற்கு தயிர் பச்சடி, சுட்ட அப்பளம் சிறந்த காம்பினேஷன்.
மல்டி பருப்புப் பொடி
தேவையான பொருட்கள் : கொள்ளு _ 25 கிராம், துவரம்பருப்பு _ 25 கிராம், கடலைப்பருப்பு _ 2 ஸ்பூன், உளுத்தம்பருப்பு _ 2 ஸ்பூன், மிளகு _ ஒரு ஸ்பூன், மிளகாய் வற்றல் _ இரண்டு, கறிவேப்பிலை _ ஒரு கைப்பிடி அளவு, சீரகம் _ ஒரு ஸ்பூன், தனியா _ ஒரு ஸ்பூன், உப்பு _ தேவையான அளவு,
செய்முறை : சீரகம், கொள்ளு, துவரம்பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா, மிளகு, மிளகாய் வற்றல் எல்லாவற்றையும் பொன்னிறமாக வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்துக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை தனியாக வறுக்கவும் (மொறுமொறுப்பாக). எல்லாவற்றையும் தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். சூடான சாதத்தில் நெய்விட்டு இந்தப் பொடியைப் போட்டுச் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.
மிளகு மோர்க்குழம்பு
தேவையான பொருட்கள் : மிளகு _ 10, கறிவேப்பிலை _ ஒரு கைப்பிடி அளவு, மிளகாய் வற்றல் _இரண்டு, மோர்கெட்டியாக _ லு லிட்டர், உளுத்தம் பருப்பு _ ரு ஸ்பூன், துவரம்பருப்பு _ ரு ஸ்பூன், சீரகம் _ ரு ஸ்பூன், சேப்பங்கிழங்கு _ 6, உப்பு _ தேவையான அளவு, நல்லெண்ணெய் _ 6. ஸ்பூன், கடுகு _ ரு ஸ்பூன், உளுத்தம்பருப்பு _ ரு ஸ்பூன்,
செய்முறை : வாணலியில் நல்லெண்ணெய் விட்டு மிளகு, மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு, துவரம்பருப்பு, சீரகம் எல்லாம் வறுத்து எடுத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை தனியாக வதக்கிக் கொள்ளவும். பின்பு எல்லாவற்றையும் கெட்டியாக மிக்ஸியில் அரைத்து மோருடன் கலந்து தேவையான உப்பு சேர்த்து கலந்து லேசாக கொதிக்கவிடவும். இதில் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டவும். சேப்பங்கிழங்கு வேக வைத்து தோல் உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி குழம்புடன் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
கறிவேப்பிலை மணத்துடன் கமகமவென்று ருசிக்கும் இந்தக் குழம்பு.
தேங்காய்ப்பால் சொதி
தேவையான பொருட்கள் : காரட் _ ஒன்று, பீன்ஸ் _ 10, குடைமிளகாய் _ ஒன்று, பச்சைமிளகாய் _ ஒன்று, உப்பு _ தேவையான அளவு, தேங்காய்ப்பால் _ ஒரு கப், தாளிக்க கடுகு _ ரு ஸ்பூன், எண்ணெய் _ ஒரு ஸ்பூன்,
செய்முறை : காரட், பீன்ஸ், குடைமிளகாயை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். பச்சை மிளகாயையும் நீளவாக்கில் நறுக்கவும். வாணலியில்எண்ணெய்விட்டு கடுகு தாளித்து நறுக்கிய காய்களைப் போட்டு தேவையான உப்பு சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர்விட்டு வேகவிடவும். வெந்ததும் தேங்காய்ப்பால்விட்டு கலந்து இறக்கவும்.
இந்த தேங்காய்ப்பால் சொதி, ஆப்பம், இடியாப்பம் இரண்டுக்குமே மிகவும் நன்றாக இருக்கும்.
சுண்டைக்காய் வேப்பம்பூ துவையல்
தேவையான பொருட்கள் : சுண்டைக்காய் _ 20 (எண்ணிக்கையில்), வேப்பம்பூ _ ஒரு கைப்பிடி அளவு, மிளகாய்வற்றல் _ மூன்று, புளி _ ஒரு நெல்லிக்காய் அளவு, உளுத்தம் பருப்பு _ 2 ஸ்பூன், உப்பு _ தேவையான அளவு, இஞ்சி _ ஒரு சிறுதுண்டு, எண்ணெய் _ 2 ஸ்பூன்
செய்முறை : சுண்டைக்காயை தனியாக எண்ணெய்விட்டு வறுக்கவும். பொன்னிறமாக வேப்பம்பூவையும் வறுக்கவும். உளுத்தம்பருப்பையும் சிவக்க வறுத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி மிளகாய் வற்றலுடன் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். முதலில் உளுத்தம் பருப்பை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றிய உடன் சுண்டைக்காய், வேப்பம்பூ, மிளகாய் வற்றல், புளி, இஞ்சி எல்லாம் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
சூடான சாதத்தில் நல்எண்ணெய் விட்டு இந்தத் துவையல் போட்டு சாப்பிடலாம். வயிறு மந்தமாக இருந்தால் இந்தத் துவையல் சாப்பிட்டால் வயிறு சரியாகிவிடும். பித்தத்திற்கும் மிகவும் நல்லது.
கீரை பொரித்த குழம்பு
தேவையான பொருட்கள் : முளைக்கீரை _ சிறிய கட்டு, மிளகு, தனியா _ தலா ஒரு ஸ்பூன், மிளகாய் வற்றல் _ ஒன்று, தேங்காய்த்துருவல் _ ஒரு சிறிய கிண்ணம், சீரகம் _ ஒரு ஸ்பூன், பாசிப்பருப்பு _ தேவையான அளவு, எண்ணெய் _2 ஸ்பூன், கடுகு _ ரு ஸ்பூன் , பெருங்காய்த் தூள் _ சிறிதளவு.
செய்முறை : கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கி நன்கு அலம்பி பாசிப் பருப்புடன் சேர்த்து வேகவிடவும். பருப்பும், கீரையும் நன்கு வெந்த பிறகுதேவையான உப்பு சேர்க்கவும். தேங்காய்த் துருவல் தனியா, மிளகு, மிளகாய்வற்றல், இவைகளை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து மிக்ஸியில் அரைத்து வேகவைத்த கீரை பருப்புடன் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் தாளித்து கீரைக் கலவையில் கொட்டி நன்கு கலக்கவும்.
சூடான சாதத்துடன் நெய்விட்டு இந்தக் குழம்பு சேர்த்துச் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். தொட்டுச் சாப்பிட மாங்காய்ப் பச்சடி சிறந்த காம்பினேஷன்.
கோயிலில் செய்வது போன்ற புளியோதரை ...
செய்முறை: புளியை நீர்க்கக் கரைத்து வைக்கவும். வெறும் வாணலியில் வெந்தயத்தை சிவக்க வறுத்து, பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் 15, பெருங்காயம் ஆகியவைகளை எண்ணெயில் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். ஆறியவுடன் எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் அரைத்து, இந்த மேம்பொடியை தனியாக வைக்கவும்.
வாணலியில் தேவையான அளவு நல்லெண்ணெய் விட்டு அது காய்ந்ததும், அதில் மீதமுள்ள காய்ந்த மிளகு, கடுகு, சிறிதளவு பெருங்காயம், 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு ஆகியவைகளைப் போட்டுத் தாளிக்கவும். இதில் ரெடியாக உள்ள புளிக்கரைசலை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். கொதிக்கும்போதே உப்பு, மஞ்சள்தூள். இரண்டையும் போட்டு விடுங்கள். புளிக் கரைசல் திக்காகும் போது ரெடியாக அரைத்து வைத்துள்ள மேம்பொடியை அதன் மேலே தூவி இன்னும் கொதிக்க விடவும். புளிக்காய்ச்சலின் மேலே எண்ணெய் பிரிந்து வரும்போது கீழே இறக்கி விடவும். இதை சாதத்துடன் கலந்தால், புளியோதரை ரெடி!
ரவா தோசைஉளுந்து வடை,பருப்பு வடை செய்வது?
1. பனீர் செய்வதெப்படி?
2. மொறு மொறு ரவா தோசை எப்படிச் செய்வது?
3. பருப்பு வடை எப்படிச் செய்வது?
4. உளுந்து வடை செய்வதெப்படி?
இவை நான்கும் நன்கு ருசியுடன் எப்படிச் செய்வதென்று ரொம்ப நாளாகவே எனக்கு சந்தேகம். யாருமே இதைக் கேட்டால் சொல்லித் தருவதில்லை. தயவு செய்து சிநேகிதியில் பிரசுரித்தீர்களானால் பத்திரமாக வைத்து செய்து சாப்பிட்டு சந்தோஷப்படுவேன்.
இரண்டு லிட்டர் பசும்பாலை நன்கு காய்ச்சுங்கள். பால் காய்ச்சிக் கொண்டிருக்கும்போதே பக்கத்து அடுப்பில் ஒரு லிட்டர் தண்ணீரைக் கொதிக்க விடுங்கள். பிறகு இந்த தண்ணீரில் 100மி.லி. வினிகர் ஊற்றிக் கொள்ளுங்கள். நன்கு காய்ச்சிய பாலை கீழே இறக்கி, 10 நிமிடம் கழித்து அதில் வினிகர் கலந்த கொதி நீரை ஊற்றவும். பால் திரிந்து விடும். இதை ஒரு வெள்ளைத் துணியில் ஊற்றி மூட்டையாக கட்டி, உயரே கட்டி விடுங்கள். தண்ணீரெல்லாம் வடிந்த பிறகு பார்த்தால் பனீர் ரெடியாகி இருக்கும்.
பனீர் செய்வதற்கு பசும்பால்தான் சரி... பசும்பால் கிடைக்கவில்லையென்றால் கொழுப்புச் சத்து குறைவான பாலை பயன்படுத்தலாம்.
உளுந்த வடை...
ஒரு கப் உளுத்தம் பருப்பை 3 மணி நேரம் ஊற வைத்து, அதை 3 தடவை மட்டும் அலம்பி கிரைண்டரில் குறைவாக தண்ணீர் விட்டு நெழுக அரைத்துக் கொள்ளவும். மாவை அரைத்து எடுக்கும்போதுதான் உப்பு சேர்க்க வேண்டும். இந்த மாவை வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள். ரொம்பவும் சுலபமாக செய்யக்கூடியது இந்த வடை ஹனீஃபா!
டிப்ஸ்: உளுத்தம் பருப்பை நிறையத் தடவை அலம்பினால், அதில் உள்ள பிசுக்குத் தன்மை போய் வடை சரியாக வராது.
ரவா தோசை
100 கிராம் ரவையை, அரைமணி நேரம் ஊற வையுங்கள். பிறகு அத்துடன் சேர்த்து 50 கிராம் அரிசி மாவு ஊற வையுங்கள். அரிசி மாவை சேர்த்த 10நிமிடம் கழித்து 50 கிராம் மைதா மாவைச் சேர்த்து ஊற வையுங்கள்.
10 நிமிடம் கழித்து இத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, முந்திரி பருப்பு, உப்பு ஆகியவற்றை சேர்த்து சரியான தீயில் (தீ அதிகமாகவும் இருக்கக் கூடாது; குறைவாகவும் இருக்கக்கூடாது) தோசைகளாக வார்க்கவும். நீங்கள் எதிர்பார்ப்பதுபோல மொறுமொறுவென நல்ல ருசியுடன் இருக்கும்.
பருப்பு வடை...
துவரம் பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கப், உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு, அரிசி - மூன்றையும் துவரம் பருப்பு அளந்த அதே கப்பில் தலா ஐந்தில் ஒரு பாகம் மட்டும் எடுத்துக் கொண்டு ஊற வையுங்கள். இவைகளை தேவையான மிளகாய் வற்றல்களுடன் சேர்த்து கிரைண்டரில் அரைத்துக் கொள்ளுங்கள். இத்துடன் உப்பு, பெருங்காயப் பொடி அல்லது நறுக்கிய வெங்காயம் சேர்த்து சின்னதாக உருட்டி மென்மையாகத்தட்டி எண்ணெயில் பொரித்தெடுங்கள்! இதை ஆமை வடை என்றும் சொல்லலாம்!
நீங்கள் சொல்லித்தந்தபடியே அடை அவியல், பால் பாயசம் இரண்டும் செய்து பார்த்தேன் சார். டேஸ்ட் சூப்பர் என்று என் கணவரும், குழந்தைகளும் பாராட்டியே என்னை திக்கு முக்காட வைத்து விட்டார்கள். எனக்கு கோயிலில் செய்வது போன்ற புளியோதரை எப்படி செய்வதென்று சொல்லி தருவீர்களா?
ஹோட்டல் சாம்பார் செய்முறையை சொல்லித் தருவீர்களா?
|
Friday, October 2, 2009
க்விக் லஞ்ச்
தேவையானவை: முளைகட்டிய தானியக் கலவை, கொத்தமல்லி - தலா ஒரு கப், பச்சை மிளகாய் - 3, பிரெட் ஸ்லைஸ் - தேவையான அளவு, கோதுமை மாவு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு, நெய் - தேவையான அளவு.
செய்முறை: தானியத்தைக் கொதிக்கும் நீரில் 10 நிமிடம் வேக வைத்து தண்ணீரை வடிய விடவும் (தண்ணீர் சேர்க்காமல் குக்கரி-லும் வேக விடலாம்). வேக வைத்த தானியத்துடன் உப்பு சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த தானியத்தைப் போட்டுக் கிளறி, கோதுமை மாவை சிறிது தண்ணீரில் கரைத்துச் சேர்க்கவும்.
வித்தியாசமான டேஸ்ட்டில் இருக்கும் இதை எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.பச்சை சட்னிக்கு கொத்தமல்லியுடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். இந்தக் கலவையை பிரெட்டில் தடவி, அதன்மேல் தானியக் கலவையைப் பரப்பி, மற்றொரு பிரெட்டில் பச்சை சட்னியைத் தடவி மூடி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் நெய் விட்டு எடுக்கவும்.
மிக்ஸட் அடை
தேவையானவை: உளுத்தம்பருப்பு, கடலைப்-பருப்பு, பச்சரிசி, புழுங்கல் அரிசி, பச்சைப் பயறு, தேங்காய் துருவல் - தலா கால் கப், துவரம் பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 10, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் - சிறிதளவு, பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை மெஷினில் கொடுத்து சிறு ரவையாக உடைத்துக் கொள்ளவும். தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் உடைத்த ரவையைப் போட்டு நன்றாகப் பிசறிக் கொள்ளவும். இதனுடன் தேங்காய் துருவல், நறுக்கிய கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து அடை பக்குவத்தில் கலந்து கொள்ளவும். இதை தோசைக்கல்லில் ஊற்றி, எண்ணெய் விட்டு, அடைகளாக சுட்டெடுக்கவும்.
இந்த ரவையை அரைத்து வைத்துக் கொண்டால் அவசரத் தேவைக்குக் கை கொடுக்கும்.
வேர்க்கடலை சாதம்
தேவையானவை: பச்சை வேர்க்கடலை - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 5, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் கப், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், வடித்த சாதம், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு - தலா அரை டீஸ்பூன்.
செய்முறை: வெறும் கடாயில் வேர்க்கடலையை வறுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விடாமல் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். ஆறியதும், மிக்ஸியில் பொடிக்கவும். கடைசியாக வறுத்த வேர்க்கடலையை சேர்த்து ஒருமுறை சுற்றி எடுக்கவும். பொடி ரெடி.
வடித்த சாதத்தில் தேவையான பொடியைப் போட்டு, தாளிக்க வேண்டிய பொருட்களைத் தாளித்துக் கொட்டி, உப்பு போட்டுக் கலக்கவும்.
சோயா நூடுல்ஸ்
தேவையானவை: சோயா பீன்ஸ் - அரை கப், பிளெய்ன் நூடுல்ஸ் - ஒரு பாக்கெட், வெங்காயத்தாள் - கால் கப், பச்சை மிளகாய் - 2, தக்காளி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் - அரை டீஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சோயா பீன்ஸை முந்தைய நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள், வேக வைத்து ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளவும். நூடுல்ஸை கொதிக்கும் நீரில் போட்டு, 2 நிமிடம் வேக வைக்கவும். பிறகு, குளிர்ந்த நீரில் போட்டு வடி கட்டவும்.
கடாயில் எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், வெங்காயத்தாள் சேர்த்து அரைத்து வைத்துள்ள சோயா பீன்ஸை சேர்த்து வதக்கவும். இதில் நூடுல்ஸ், உப்பு சேர்த்து, ஒரு நிமிடம் கழித்து தக்காளி சாஸ், சோயா சாஸ், மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.
பனீர் பர்கர்
தேவையானவை: பன் - 1, சதுர வடிவ பனீர் துண்டுகள் - 2, காய்ந்த மிளகாய் - 4, புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, எலுமிச்-சைச் சாறு - ஒரு டீஸ்--பூன், பொடி-யாக நறுக்கிய வெள்ளரிக்-காய், வட்டமாக நறுக்--கிய தக்காளி, வெங்காயத் துண்டுகள் - தலா 6, நெய் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தோசைக்கல்லில் பனீரை போட்டு ஒருமுறை புரட்டி எடுத்துக் கொள்ளவும். புதினா, கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து, எலுமிச்சைச் சாறு கலந்து வைக்கவும்.
பன்னை இரண்டாக வெட்டி, அதில் தக்காளி, வெள்ளரி, வெங்காயத் துண்டுகளை வைக்கவும். பிறகு, பனீர் துண்டின் மேல் மசாலா கலவையை தடவி, அதன் மேல் வைத்து, மீண்டும் தக்காளி, வெங்காயம், வெள்ளரி துண்டுகளை வைத்து பன்னை மூடி, தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் நெய் விட்டு எடுக்கவும்.
கரசாரமான பனீர் பர்கர் ரெடி!
பிரெட் ரோல்ஸ்
தேவையானவை: மைதா - ஒரு டேபிள்ஸ்பூன், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய், கொத்தமல்லி - சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், பிரெட் ஸ்லைஸ் - 6, கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, வெங்-காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி போட்டு வதக்கவும். இதில், உருளைக்கிழங்கு, கரம் மசாலாத்-தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
பிரெட்டின் நான்கு ஓரங்களையும் நீக்கி, லேசாக தண்ணீர் தெளித்து சிறிது உருளைக்கிழங்கு கலவையை நடுவில் வைத்து நன்றாக அழுத்தி கொழுக்கட்டை போல் பிடிக்கவும். சிறிது மைதாவைக் கையில் தடவிக் கொண்டு பிடித்தால் ஈஸியாக வரும். இதுபோல் எல்லாவற்றையும் செய்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெயில் ஊற்றி, அதில் பிடித்து வைத்துள்ள ரோல்களை ஒவ்வொன்றாகப் போட்டு பொரித்தெடுக்கவும். இனிப்பும் காரமுமாக அற்புதமான சுவையில் இருக்கும் இந்த ரோல்ஸ்.
--------
மிக்ஸட் புளிசாதம்
தேவையானவை: கெட்டியாகக் கரைத்த புளி - ஒரு கப், நல்லெண்ணெய் - அரை கப், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள், கடுகு - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, வடித்த சாதம், உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: வெந்தயம் - ஒரு டீஸ்பூன், தனியா - கால் கப், காய்ந்த மிளகாய் - 5.
செய்முறை: கடாயில் வெந்தயத்தைப் போட்டு சிவக்க வறுத்து தனியாக வைக்கவும். அதே கடாயில் தனியா, மிளகாயை வறுத்து, வெந்தயத்தையும் சேர்த்து நைஸாக பொடிக்கவும்.
கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, புளிக் கரைசலை விடவும். பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும்போது, பொடித்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
இதை வடித்த சாதத்துடன் கலந்து உடனடியாக சாப்பிடலாம்.
மிளகு தவலை அடை
தேவையானவை: அரிசி ரவை - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், ஒன்றிரண்டாக பொடித்த மிளகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் போட்டுத் தாளித்து, தேங்காய் துருவலை சேர்த்து லேசாக வறுக்கவும். இதில் பொடித்த மிளகு, உப்பு போட்டு, இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும். நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், ரவையைக் கொட்டிக் கிளறி இறக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் கிளறி வைத்துள்ள ரவை கலவையைத் தட்டிப் போட்டு, எண்ணெய் விட்டு, இருபுறமும் திருப்பி சுட்டெடுக்கவும்.
மசாலா சேமியா
தேவையானவை: வறுத்த சேமியா - ஒரு கப், நறுக்கிய காய்கறிகள் - அரை கப், மிளகு - அரை டீஸ்பூன், கிராம்பு, ஏலக்காய் - தலா 2, புதினா, பிரிஞ்சி இலை - சிறிதளவு, நெய் - ஒரு டீஸ்பூன். உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் நெய் விட்டு, கிராம்பு, ஏலக்காய், மிளகு சேர்த்து வறுத்து பொடித்துக் கொள்ளவும்.
காய்கறிகளுடன் உப்பு சேர்த்து கடாயில் வதக்கி, பொடித்த மசாலாவைச் சேர்க்கவும். சேமியாவின் அளவுக்கேற்ப தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்ததும், சேமியாவைப் போட்டுக் கிளறி, பிரிஞ்சி இலை போட்டு புதினா தூவி இறக்கவும். விருப்பப்பட்டால் நெய்யில் முந்திரி வறுத்து சேர்க்கலாம்
கம்பு தோசை
தேவையானவை: கம்பு மாவு - ஒரு கப், அரிசி மாவு - 2 டீஸ்பூன், ரவை - ஒரு டீஸ்பூன், புளித்த தயிர் - அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், நெய் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தயிரில் உப்பு கலந்து கம்பு மாவு, அரிசி மாவு, ரவை, வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாயை சேர்க்கவும். ஒரு டீஸ்பூன் நெய், தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். இதை தோசைக்கல்லில் ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு தோசைகளாக வார்த்தெடுக்கவும்.
டோக்ளா
தேவையானவை: தோசை மாவு - ஒரு கப், கடலை மாவு - அரை கப், தயிர் - கால் கப், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, சீரகம், சர்க்கரை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உப்பு - சிறிதளவு.
செய்முறை: கடலை மாவுடன் சமையல் சோடா, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சிறிது உப்பு, தயிர் சேர்த்து நன்றாகக் கரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையுடன் தோசை மாவை சேர்த்துக் கலந்து, ஒரு தட்டில் ஊற்றி ஆவியில் வேக வைக்கவும். வெந்ததும் எடுத்து துண்டுகள் போடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து வெந்த டோக்ளா துண்டுகளைச் சேர்த்துக் கலந்து, ஒரு தட்டில் பரப்பி கொத்தமல்லி தூவவும். சர்க்கரையில் ஒரு கரண்டி தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து, டோக்ளா கலவையின் மேல் சிறிது சிறிதாக விடவும்.
தோசை மாவு மீந்து விட்டால், வாய்க்கு ருசியாக இந்த டோக்ளா செய்து கொள்ளலாம்.
ரெடிமேட் பிசிபேளாபாத்
தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், சாம்பார் - 2 கப், சின்ன வெங்காயம் - கால் கப், வெல்லம் - ஒரு துண்டு, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - சிறிதளவு.
வறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு, தனியா - தலா கால் கப், வெந்தயம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, பட்டை - 2 துண்டு, கிராம்பு - 2, கொப்பரை துருவல் - கால் கப், எண்ணெய் - ஒரு டீஸ்பூன். (ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கொப்பரை துருவல் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் வறுத்து, கொப்பரை துருவலை சேர்த்துப் பொடித்துக் கொள்ளவும்.)
செய்முறை: வடித்த சாதம், சாம்பார், உப்பு, 2 டீஸ்பூன் வறுத்த பொடியை சேர்த்துக் கலக்கவும். சிறிது எண்ணெயில் சின்ன வெங்காயத்தை வதக்கி சேர்க்கவும். நெய், ஒரு துண்டு வெல்லம் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும்.
கமகமக்கும் இந்த பிசிபேளாபாத்.
கார சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், கரம் மசாலாத்-தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, நெய், நசுக்கிய பச்சை மிளகாய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு, கரம் மசாலாத்-தூள், மிளகாய்த்தூள், பச்சைமிளகாய், கொத்தமல்லி, நெய் சேர்த்துக் கெட்டியாகக் கலந்து சப்பாத்திகளாக செய்து, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
இதற்கு தொட்டுகொள்ள எதுவுமே வேண்டாம். அப்படியே சாப்பிடலாம்.
வெஜிடபிள் பூரி
தேவையானவை: உருளைக்கிழங்கு, சோள மாவு - தலா கால் கப், கேரட், குடமிளகாய், பச்சைப் பட்டாணி சேர்ந்த கலவை - கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், ரவை - தலா ஒரு டீஸ்பூன், மைதா மாவு - ஒரு கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: காய்கறிகளை குக்கரில் நன்றாக வேக வைத்து, தண்ணீரை வடித்து, மசிக்கவும். பச்சை மிளகாய், உப்பு, மைதா, ரவை, சோள மாவு சேர்த்து பூரி மாவு பதத்தில் கலக்கவும். மாவு தளர இருந்தால் சிறிது மைதா மாவை சேர்க்கலாம். வழக்கமாக பூரி செய்வது போல செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
காய்கறி சேர்ப்பதால் புதுவிதமான சுவையில் இருக்கும் இந்த பூரி.
கை குத்தல் அவல் உப்புமா
தேவையானவை: கை குத்தல் அவல் - ஒரு கப், தேங்காய் துருவல் - கால் கப், காய்ந்த மிளகாய் - 2, தனியா, கடுகு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: அவலை 15 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விடாமல், காய்ந்த மிளகாய், தனியாவை வறுத்து கரகரப்பாக பொடிக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, ஊறிய அவலை பிழிந்துப் போட்டு உப்பு, வறுத்துப் பொடித்த மசாலாவை சேர்க்கவும். பிறகு, தேங்காய் துருவலை சேர்த்து நன்றாகக் கலந்து, வெந்ததும் இறக்கவும்.
மினி பனீர் ஊத்தப்பம்
தேவையானவை: தோசை மாவு - ஒரு கப், துருவிய பனீர் - அரை கப், தக்காளி, கொத்தமல்லி - சிறிதளவு, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பனீருடன் தக்காளி, மிளகுத்தூள், கொத்தமல்லி, உப்பு போட்டு கலந்து கொள்ளவும். தோசைக்கல்லில் மாவை சிறு ஊத்தப்பங்களாக ஊற்றி, அதன் நடுவே பனீர் கலவையைத் தூவி, மூடியால் மூடி, மிதமான தீயில் வேக விடவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும்.
கீரை சாதம்
தேவையானவை: வடித்த சாதம், பொடியாக நறுக்கிய ஏதேனும் ஒரு கீரை - தலா ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, தனியா, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து கீரை, உப்பு சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், தனியா, சீரகம் ஆகியற்றை மிக்ஸியில் அரைத்து வதங்கிய கீரையுடன் சேர்த்து, சாதத்தைப் போட்டுக் கிளறவும்.
தேவையானவை: தோசை மாவு - அரை கப், பிரெட் தூள் - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: தோசை மாவுடன் உப்பு, பிரெட் தூளைக் கலந்து, இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, தேங்காய் துருவலை சேர்த்து வதக்கி, மாவு கலவையுடன் கலந்து கொள்ளவும். பணியாரக்குழியில் மாவை ஊற்றி, பணியாரங் களாகச் சுட்டெடுக்கவும்.
பஞ்சு போல இருக்கும் இந்தப் பணியாரத்தை, பல் போன வயோதிகரும் பக்குவமாகச் சாப்பிட முடியும்.
ஃப்ரூட் ரைஸ்
தேவையானவை: பாதாம், முந்திரி, காய்ந்த திராட்சை கலவை - கால் கப், ஆப்பிள், அன்னாசிப்பழம், மாம்பழம், திராட்சை (வாழைப்பழம் தவிர மற்ற எந்த பழம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்) பழக்கலவை, உதிரான சாதம் - தலா ஒரு கப், நெய் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: முந்திரி, திராட்சை, பாதாமை நெய்யில் லேசாக வறுத்து சாதத்தில் சேர்க்கவும். இதில் உப்பு, மிளகுத்தூள், பழக்கலவையை சேர்த்து ஒன்றாகக் கலக்கவும்.
தித்திப்பும் புளிப்புமாக மணக்கும் இந்த ரைஸ்!
தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 6, பொடியாக நறுக்கிய தக்காளி - அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி - தலா கால் கப், கீறிய பச்சை மிளகாய் - 2, சாம்பார் பொடி - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, கடுகு - கால் டீஸ்பூன்.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, பச்சை மிளகாய், கொத்தமல்லியைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு வெங்காயம், தக்காளி, உப்பு, சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும். பிரெட்டை சிறு துண்டுகளாக நறுக்கிச் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி இறக்கவும்.
குழந்தைகள்கூட விரும்பி சாப்பிடுவார்கள் இந்த உப்புமாவை!
ஃப்ரைடு இட்லி
தேவையானவை: இட்லி - 6, பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் - தலா கால் கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய் - சிறிதளவு, தக்காளி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: இட்லியை நீள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய இட்லியைப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி போட்டு நன்றாக வதக்கி, வறுத்த இட்லியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு தக்காளி சாஸை ஊற்றி, உப்பு சேர்த்துக் கலந்து ஒரு நிமிடம் கழித்து இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
ஸ்வீட் சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், சர்க்கரை, நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி-பாதாம் - தலா கால் கப், குங்குமப் பூ - ஒரு சிட்டிகை, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - சிறிதளவு.
செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து, சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து, சிறிய சப்பாத்திகளாக இட்டுக் கொள்ளவும். இதன் மேல் நெய் தடவி, சர்க்கரை, பொடித்த முந்திரி-பாதாம், குங்குமப் பூ தூவி நான்காக மடித்து, திரும்பவும் பெரிய சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு சுட்டெடுக்கவும்,
செல்வர் அப்பம்
தேவையானவை: மைதா - ஒரு கப், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், புளித்த தயிர், தேங்காய் துருவல் - தலா கால் கப், பச்சை மிளகாய் - 4, பெருங்காயத்தூள், எண்ணெய் - தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தேங்காய் துருவலுடன் பச்சை மிளகாய், தயிர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதில் மைதா, அரிசி மாவு, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, சிறு அப்பங்களாக சுட்டெடுக்கவும்.
உப்புமா கொழுக்கட்டை
தேவையானவை: அரிசி ரவை - ஒரு கப், துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - கால் கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சீரகம், துவரம்பருப்பை ஒன்றிரண்டாக பொடித்து, அரிசி ரவையுடன் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். இதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, 2 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்ததும் அரிசி ரவை கலவையை சேர்த்துக் கிளறவும். பிறகு இறக்கி, ஆறியதும் கொழுக்கட்டைகளாகப் பிடித்து வேக வைக்கவும்.
நெல்லிக்காய் சாதம்
தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், துருவிய பெரிய நெல்லிக்காய் - கால் கப், எலுமிச்சைச் சாறு, எண்ணெய், தேங்காய் துருவல் - தலா ஒரு டீஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் - 2, கடுகு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், துருவிய நெல்லிக்காய், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். லேசாக ஆறியதும், எலுமிச்சைச் சாறை விட்டு, வடித்த சாதத்தை சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.
ஃப்ரைடு ரைஸ்
தேவையானவை: உதிராக வடித்த பாஸ்மதி சாதம், கோஸ், குடமிளகாய், கேரட், பச்சை பட்டாணி சேர்ந்த காய்கறிக் கலவை - தலா ஒரு கப், வெங்காயத்தாள் - கால் கப், வெள்ளை மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், சோயா சாஸ் - அரை டீஸ்பூன், அஜினமோட்டோ (விருப்பப்பட்டால்) - ஒரு சிட்டிகை, நெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு காய்கறிகள், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயத்தாள் சேர்த்து லேசாக வதக்கி இறக்கவும். இதில் மிளகுத்தூள், சோயா சாஸ், வேக வைத்த சாதம், அஜினமோட்டோ, நெய் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.
உசிலி
தேவையானவை: அரிசி, பயத்தம்பருப்பு - தலா அரை கப், தேங்காய் துருவல் - கால் கப், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, பருப்பை தனித்தனியாக சிவக்க வறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளிக்கவும். இதில் 2 கப் தண்ணீரை விட்டு உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, வறுத்த அரிசி, பருப்பு, தேங்காய் துருவலை சேர்க்கவும். இதை நன்கு கிளறி, உதிர் உதிராக வந்ததும் இறக்கவும்.
வெஜிடபிள் கொழுக்கட்டை
தேவையானவை: பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு (அரிசியைத் தண்ணீரில் களைந்து, நிழலில் உலர வைத்து அரைத்த மாவு) , பொடியாக நறுக்கிய கோஸ், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு சேர்ந்த கலவை - தலா ஒரு கப், தனியாத்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்கறிகளைப் போட்டு வதக்கவும். உப்பு, தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து காய்கறிகள் வெந்ததும் இறக்கவும். பதப்படுத்தப்பட்ட அரிசி மாவை கொழுக்கட்டைக்கு மாவு கிளறுவதுபோல் கிளறிக் கொள்ளவும்.
இந்த மாவில் சிறிது எடுத்து கிண்ணம் போல் செய்து அதனுள் காய்கறிக் கலவையை வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
சாம்பார் இட்லி
தேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் சேர்ந்தது - கால் கப், புளி - கொட்டைப்பாக்கு அளவு, கொத்தமல்லி - சிறிதளவு, இட்லி மாவு - ஒரு கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
வறுத்து அரைக்க: தனியா, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4.
செய்முறை: துவரம்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, வறுக்க கொடுத்துள்ளவற்றை வறுத்து, தண்ணீர் சேர்த்து அரைக்கவும். அதே கடாயில் எண்ணெயை விட்டு வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கி, புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து இதில் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். கொதித்ததும், அரைத்த மசாலாவை சேர்த்து, வெந்த துவரம் பருப்பு, கொத்தமல்லி தூவி நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.
இட்லி மாவை சிறு இட்லிகளாக வார்த்து, ஒரு கிண்ணத்தில் இட்லியை போட்டு அதன்மேல் சாம்பாரை விட்டு, பரிமாறவும்.
தேவையானவை: ரவை - கால் கப், துருவிய கேரட்-கோஸ் - கால் கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், வேக வைத்த உருளைக்கிழங்கு - அரை கப், பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி, பச்சைமிளகாய் - சிறிதளவு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், கடலை மாவு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பச்சைமிளகாய், புதினா, கொத்தமல்லி, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பிறகு, துருவிய கேரட், கோஸ் சேர்த்து வதக்கி, வேக வைத்த உருளைக்கிழங்கு உப்பு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
ரவையை வறுத்துக் கொள்ளவும். கடலை மாவை சிறிது தண்ணீரில் கரைத்து, காய்கறிக் கலவையுடன் சேர்க்கவும். இதனுடன் ரவையை சேர்த்துக் கிளறி கட்லெட் வடிவத்தில் செய்து தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு எடுக்கவும்.
Subscribe to Posts [Atom]